மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியாவை சரித்த ஸ்டோக்ஸ் வியூகம் – நல்ல வாய்ப்பை இந்தியா கைவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், எஸ். தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக49 நிமிடங்களுக்கு முன்னர்

ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடி, மீண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாள் என்று நேற்றைய நாளை சொல்லலாம்.

இந்தியாவின் திட்டங்கள் எல்லாம் பலனளிக்காமல் போக, இங்கிலாந்து அணி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷனை நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு நாளின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷார்துல் – வாஷிங்டன் சுந்தர் இணை, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளித்து விளையாடியது. இதே இணைதான், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியாவின் வெற்றி கைகொடுத்தது.

ஷார்துல் 41 ரன்கள் எடுத்து, இந்தியா ஒரு வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். கடினமான ஒரு களத்தில் சாமர்த்தியமாக விளையாடி, தன் தேர்வு மீதான விமர்சனங்களுக்கு ஷார்துல் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிரதான பேட்ஸ்மேன்கள் எல்லாரும் தடுமாறும் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் ஷார்துலின் தனிச்சிறப்பு. இந்த ஒரு திறமைக்காகவே, ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தபோதும், அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் காயத்தோடு களமிறங்கிய பந்த்

முதல் நாளை போலவே, நேற்றும் ஆர்ச்சர், கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் பெரும்பாலான ஓவர்களையும் விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர். வோக்ஸ் ஒருமுனையில் கட்டுக்கோப்பாக வீசினாலும், விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

ஷார்துல் ஆட்டமிழந்ததும், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் வலியையும் பொறுத்துக்கொண்டு, பந்த் களமிறங்கினார். அவருடைய அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் மதிப்பளிக்கும் விதமாக, ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர்.

பந்த்தின் விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றாலும், அது ஒருவிதத்தில் சுந்தரின் பேட்டிங் ரிதத்தை பாதித்துவிட்டது. பந்த்தை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ஒற்றை ரன் ஓடமுடியுமா என்ற சிந்தனையிலேயே, தனது இயல்பான ஆட்டத்தை மறந்து ஸ்டோக்ஸ் பந்தில் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பந்த்தை பத்திரப்படுத்தி வைத்து, கம்போஜ், சிராஜ் போன்றவர்களை முன்னால் களமிறக்கி இருந்தால், சுந்தர் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

சுந்தர் ஆட்டமிழந்ததும், வேறு வழியின்று பந்த் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தார். ஆர்ச்சரின் பந்தில் அவர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடந்த டெஸ்டை நினைவூட்டும் படியான ஒரு பந்தின் மூலம், பந்த் ஸ்டம்புகளை தகர்ந்தார் ஆர்ச்சர்.

பந்த் களத்தில் இருக்கும்போது, ஸ்டோக்ஸ் அவருடைய காலை குறிவைத்து யார்க்கர் பந்துகளாக வீசினார். இதுகுறித்து சமூக வலைதங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.

உணர்வை எல்லாம் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்டோக்ஸ் தன் அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுவார். பந்த்துக்கு இந்திய அணியின் நலன் முக்கியம்; அவருக்கு இங்கிலாந்து அணியின் நலன் முக்கியம். அவ்வளவுதான்.

இந்த தொடரில் பந்த் தனது கடைசி இன்னிங்ஸை விளையாடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. கடைசிக்கட்ட விக்கெட்டுகளை ஆர்ச்சர் துடைத்து எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்களும் ஆர்ச்சர் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். ஸ்டோக்ஸ், அதிக பந்துகள் வீசிய டெஸ்ட் தொடர் இதுதான். இதன்மூலம் இந்த தொடருக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோஃப்ரா ஆர்ச்சர் ரிஷப் பந்தின் விக்கெட்டைக் கைப்பற்றிய போது இந்தியாவின் பந்துவீச்சு வியூகம் சரியாக செயல்பட்டதா?

இங்கிலாந்து அணி இன்னிங்ஸை தொடங்கிய போது சூரியன் நன்றாக வெளியே வரத் தொடங்கியிருந்தது. முதல் சில ஓவர்களுக்கு பிறகு ஆடுகளத்தில் இருந்த அதீத பவுன்ஸ் காணாமல் போனது.

இந்தியா பேட் செய்யும்போது இருந்து ஆடுகளமா என்று சந்தேகப்படும் அளவுக்கு தன்மை முற்றிலும் மாறிவிட்டது. இந்திய அணியின் தவறான லைன் அண்ட் லெங்த்தும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பந்துவீச தொடங்கிய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ், முதல் ஓவரிலேயே அடி வாங்கினார்.

3 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அவருடைய ஸ்பெல்லை கில் முடிவுக்கு கொண்டுவந்தது சரியான அணுகுமுறை அல்ல. பிறகு பும்ராவுக்கு ஓய்வு தேவை என்றபோதுதான் மீண்டும் அவரை அழைத்தார். அறிமுக டெஸ்டில் களமிறங்கும் வீரரை, அரவணைத்து சென்று அவருடைய திறமையை வெளிக்கொணர்வது கேப்டனின் பொறுப்பு.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, வீரர்களை காரணமின்றி அணியில் சேர்ப்பதும், நீக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. அணியில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுப்பதில்லை. அனுபவ வீரர் சிராஜ் இருக்கும் போது கம்போஜுக்கு புதிய பந்தை கொடுத்தது தவறு. அப்படி கொடுத்துவிட்டு, உடனே வெளியே எடுப்பது அதைவிட பெரிய தவறு. தனது கடைசி ஸ்பெல்லில் மீண்டு வந்த கம்போஜ், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கம்போஜ் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துமா இந்தியா?

அத்தி பூத்தாற் போல, நேற்று பும்ராவும் தவறான லைனில் எந்தவொரு திட்டமும் இன்றி பந்துவீசினார். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் களமிறங்கிய கிராலி, தன் முதல் ரன்னை எடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். இதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய விக்கெட்டை எடுக்க இந்திய அணி முயற்சி செய்தது போலவே தெரியவில்லை.

மேலும் பும்ரா உடனடியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியிலேயே பந்துவீசியது போல இருந்தது. சில ஓவர்கள் கட்டுப்பாடாக பந்துவீசி ரன் ரேட்டை முதலில் குறைத்து பிறகு விக்கெட்டுக்கு முயற்சிக்கலாம் என்ற திட்டமே இந்திய அணியிடம் இல்லை.

இந்திய அணி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் பந்துவீசிய லைன் அண்ட் லெங்த்தில் (The corridor of uncertainty) பந்துவீசியிருக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேனால் முன்னுக்கு வந்தும் ஆடமுடியாது; பின்னுக்கு நகர்ந்தும் ஆடமுடியாது. அதுபோன்றதொரு இரண்டும் கெட்டான் லைன் அண்ட் லெங்த். ஆனால், இந்தியா ஒன்று கால்பக்கமாக வீசியது. இல்லை, எந்த இலக்குமற்று முழு நீளத்தில் ஹாஃப் வாலியாக வீசியது.

கால்பக்கத்தில் கிடைத்த பந்துகளை டக்கெட், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் திசையில் ஃபிளிக் செய்து ரன் குவித்தார். மறுபுறம் கிராலி, நின்ற இடத்தில் இருந்து, ஆபத்தற்ற முழு நீள பந்துகளை கவர் திசையிலும் மிட் ஆன்–மிட் ஆஃப் திசையிலும் டிரைவ் செய்து பவுண்டரி விளாசினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்திய அணியின் பல் பிடுங்கிய பாம்பாக மாறிய பந்துவீச்சை பார்க்கும் போது, குல்தீப் யாதவை எடுத்திருக்கலாம் என தோன்றியது.

கடைசி கட்டத்தில் உபரியாக கிடைக்கும் 10–20 ரன்கள் முக்கியம்தான். ஆனால், விக்கெட் எடுக்கும் திறமையுள்ள ஒரு சுழற்பந்து வீச்சாளரை, தொடர்ச்சியாக பெஞ்ச்சில் உட்கார வைப்பது அநியாயம்.

‘சைனா மேன்’ என்றழைக்கப்படும் இடக்கை லெக் ஸ்பின் என்பது மிகவும் அரிதான ஒரு பந்துவீச்சு வகைமை. அரிது என்பதால், இந்த வகைமை பந்துவீச்சை பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடி இருக்க மாட்டார்கள்.

இந்த அனுகூலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து கையில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா கிராலியை ஓர் அழகான பந்தின் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டக்கெட்டும் 94 ரன்களில் நடையை கட்டினார். போப், ரூட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் நிலையில், ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓய்கியுள்ளது. இங்கிலாந்து அணி 133 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நாளை விரைவில் டாப் ஆர்டர் விக்கெட்களை எடுக்க இந்திய வியூகம் வகுத்தாக வேண்டும். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டு வருமா என்று பார்ப்போம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு