Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்ய சிறையில் இருக்கும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப முயற்சியா? பெற்றோர் கூறுவது என்ன?
படக்குறிப்பு, ரஷ்ய படையில் இணைந்து யுக்ரேனுக்கு எதிராகப் போரிட மாணவரை கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.எழுதியவர், விவேக் குமார் விஜயவீரன்பதவி, பிபிசி தமிழுக்காக9 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் ஒரு வழக்கில் சிறையில் உள்ள நிலையில், ரஷ்ய அதிகாரிகள் அந்த மாணவரை ரஷ்ய படையில் இணைந்து யுக்ரேனுக்கு எதிராகப் போரிட கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
கடலூரை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி பாமா, தங்கள் மகன் கிஷோரை காப்பாற்றி தாய்நாட்டுக்கு அழைத்து வருமாறு கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் தங்கள் மகன் “போருக்கு அனுப்பப்படுவதைத் தடுக்க இந்தியா சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மாணவரை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரஷ்ய தூதரகம் என்ன கூறுகிறது?
கடலூர் மாணவருடன் சேர்ந்து கைதாகி சிறையில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் நிலை என்ன?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ரஷ்ய சிறையில் இந்திய மாணவர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இருக்கும் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். அவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
அவரது 22 வயதான மகன் கிஷோர், கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவம் பயில ரஷ்யா சென்றார். ரஷ்யாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதீஷ் என்ற மற்றொரு இந்திய மாணவருடன் சேர்ந்து அவர் படித்து வந்துள்ளார். அங்கு, இவர்கள் இருவரும் 3 ரஷ்ய மாணவர்களுடன் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
கிஷோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ரஷ்ய மாணவர்கள் ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் விநியோகிக்கும்போது, அவர்கள் வைத்திருந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருந்தது, ரஷ்யா போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 3 ரஷ்ய மாணவர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்த காரணத்தால், இந்திய மாணவர்களான கிஷோர், நிதீஷ் இருவரும் சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு பெற்றோர்கள் சார்பாக இந்தியாவில் இருந்தபடியே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் இரு மாணவர்களும் தற்போது வரை சிறையில் உள்ளனர்.
ஆனால் “முதன்மையாகக் கைதான மூன்று ரஷ்ய மாணவர்களும் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டதாக” கிஷோரின் பெற்றோர் கூறுகின்றனர்.
மாணவரை சந்திக்க முயலும் பெற்றோர்
கிஷோர் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில், அவரது தாய் பாமா 2023ஆம் ஆண்டிலேயே, அவரை நேரில் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார்.
ஆனால், அந்த முயற்சி பலனளிக்காமல் நாடு திரும்பியதாகக் கூறுகிறார் அவர். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக உதவிகளைப் பெற முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிவித்த கிஷோரின் தந்தை சரவணன், “அந்த முயற்சியும் பலன் தராத நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகனை சந்தித்து மனு அளித்தோம்” என்றார்.
அதே போல திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் முன்னாள் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூலமாக மகனை காப்பாற்ற நடந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை என்கிறார் சரவணன்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கிஷோரின் ஆடியோவால் பதற்றம்
இந்த நிலையில், கடந்த வாரம் கிஷோரின் தந்தை சரவணனுக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக ஆடியோ மெசேஜ் ஒன்று கிடைத்துள்ளது.
ரஷ்ய சிறையிலுள்ள கிஷோர், அங்குள்ள காவலரின் மொபைல் மூலமாக பெற்றோருக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் அந்தச் செய்தியில், “யுக்ரேனுக்கு எதிராக நடக்கும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்க்களத்திற்குச் செல்லுமாறு தான் நிர்பந்திக்கப்படுவதாக” கிஷோர் கூறியுள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், அந்த ஆடியோ கிஷோர் அனுப்பியதுதானா என்பதை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.
அந்த ஆடியோவில், “இங்கு போருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் என்னை யுக்ரேனுக்கு எதிரான போரில் ஈடுபடுமாறு மிரட்டுகிறார்கள். போரில் பங்கெடுப்பதற்கான ஆவணத்திலும் என்னிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இது என் விருப்பத்திற்கு எதிராக நடக்கிறது,” என்று கூறப்படுகிறது.
மேலும், அந்த ஆடியோவில் தன்னுடைய சுய விருப்பமில்லாமல் ரஷ்ய அடையாள அட்டை வழங்கப்பட்டு நேரடியாக போர்க்களத்திற்கு அனுப்ப இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
“இது என் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து,” என்ற கிஷோரின் குரலைக் கேட்டுப் பதறிய அவரது பெற்றோர் தங்கள் மகனைக் காப்பாற்ற வழிதேடித் தவிப்பதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சரவணன், “எங்கள் மகன் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை விடுவிக்க முடியவில்லை,” என்றார்.
சிறையில் இருக்கும் கிஷோர் போர்முனைக்குச் செல்ல வலியுறுத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள மனுவில், “போர்களத்திற்கு அனுப்புவதற்கு முன்பாகத் தனது மகனுக்கு ரஷ்ய ராணுவம் பயிற்சி வழங்கி வருவதாகவும், 10 நாட்களுக்குப் பிறகு போரிட அனுப்புவார்கள்” என்றும் கிஷோரின் தந்தை தெரிவித்துள்ளார்.
எனவே “அதற்குள் தனது மகனை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
“என் மகன் உயிரோடு திரும்பவில்லை என்றால் எங்களாலும் உயிர் வாழ முடியாது. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்திய அரசின் மூலமாக எங்கள் மகனை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்று பிபிசியிடம் பேசிய சரவணன் கூறினார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோரும் மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கிஷோருடன் கைதான மற்றொரு மாணவர் நிதிஷின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள, சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அவரது குடும்பத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவர்கள் இது குறித்துப் பேச மறுத்துவிட்டனர்.
தமிழ்நாடு அரசின் பதில்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய ராணுவம், சிறைக் கைதிகளை போர்முனைக்கு அனுப்பும் முயற்சியை இதற்கு முன்பு மேற்கொண்டுள்ளது.கிஷோர் விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார், சரவணன் மற்றும் பாமா அளித்த மனுவை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார்.
கிஷோரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாக, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“கடலூரை சேர்ந்த மருத்துவ மாணவரை ரஷ்ய ராணுவம் போர்முனைக்கு அனுப்பவுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக ரஷ்யாவில் உள்ள மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் தகவல் தெரிய வரும். ரஷ்யாவில் உள்ள தமிழ்ச் சங்கம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மாணவரை ரஷ்ய ராணுவம் போருக்கு அனுப்பும் என்று சொல்வது நம்ப முடியாத வகையில் உள்ளது,” என்று தெரிவித்தார்.
மாணவரை ராணுவப் பணியில் சேர கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ரஷ்ய தூதரகத்திடம் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் முயன்றது.
ஆனால், சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதரகம், டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பிபிசி தமிழ் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு தற்போது வரை பதில் ஏதும் கிடைக்கவில்லை.
ரஷ்ய ராணுவத்தில் சிறைவாசிகள்
சிறையில் இருக்கும் கைதிகளை ரஷ்ய ராணுவத்தில் இணைத்து, அவர்களை யுக்ரேனுக்கு எதிராகப் போர் முனைக்கு அனுப்பும் முயற்சி இதற்கு முன்பு நடந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, சிறையில் இருந்த சுமார் 48 ஆயிரம் கைதிகளை யுக்ரேனுக்கு எதிராகப் போரிட ரஷ்ய ராணுவத்திற்காக வாக்னர் கூலிப்படை பணியமர்த்தியதாக பிபிசி உத்தேசிக்கிறது.
மேலும் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற, இந்தியாவில் இருந்து வேறு வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பல்வேறு நபர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி போர் முனைக்கு அனுப்பப்பட்ட சில இந்தியர்கள் போர்களத்தில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 45 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு