மாரீசன் விமர்சனம்: மீண்டும் இணைந்த வடிவேலு, ஃபகத் ஃபாசில் – படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், @SuperGoodFilms_

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாரீசன் திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மாரீசன் திரைப்படத்தின் கதை என்ன?

படத்தின் கதை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பிரபல திருடன் தயா (ஃபகத் ஃபாசில்) கண்ணில் சிக்குவதை எல்லாம் கொள்ளையடிக்கிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கச் சென்றபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த வேலாயுதத்தை (வடிவேலு) சந்திக்கிறார். தன்னை விடுவித்தால் பணம் தருவதாகக் கூறுகிறார் வேலாயுதம்.

வேலாயுதத்தை விடுவித்த பிறகு, அவர் ஞாபக மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதையும் தயா தெரிந்துகொள்கிறார்.

அதைத் திருடுவதற்குத் திட்டமிட்டு, வேலாயுதத்திற்கு உதவுவது போல முன்வரும் தயா, தனது இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார்.

இவர்களுடைய பயணத்தின்போது என்ன நடந்தது, இறுதியாக தயா பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

மாரீசன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், @SuperGoodFilms_

“இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா உத்தி நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் எங்குமே சலிப்பின்றிச் செல்கிறது” என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

“ஏற்கெனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்னையை புதிய பாணியில் சொல்லி கவனம் இயக்குநர் ஈர்த்துள்ளார்” எனவும் அந்த விமர்சனம் புகழாரம் சூட்டியுள்ளது.

ஆனால், “படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு, இது ‘மெய்யழகன்’ படத்தைப் போல இருவருக்கு இடையே நடப்பவை குறித்த கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாதியில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும், இரண்டாம் பாதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,” என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது.

இந்தியா டுடே விமர்சனத்தின்படி, காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன், நிச்சயம் சிரிக்க வைக்கும். அதோடு, “படத்தில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன.”

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பு எப்படி?

பட மூலாதாரம், @SuperGoodFilms_

“இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக விளங்கும் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் ஆகிய படங்களில் ஃபகத் திருடனாக நடித்திருந்தாலும் இதில் அந்தச் சாயல் எதுவுமே இல்லாமல் திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபகத் ஃபாசில்” என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

தி இந்து நாளிதழும் “மாமன்னன் படத்தில் இந்தக் கூட்டணி தொடங்கியது. இவர்களை திரையில் பார்ப்பது மனதிற்கு இதமாக உள்ளது. இந்தக் கூட்டணியை நிறைய படங்களில் இணைந்து பார்க்க மக்கள் விரும்புவார்கள்” என்று கூறியுள்ளது.

“மாமன்னன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் தனது நகைச்சுவை கதாபாத்திரத்தைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பாராட்டியாக வேண்டும்” என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

“ஃபகத் ஃபாசில் எப்போதும் போலத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

“நீண்ட நாட்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் காட்சிகளைப் பார்க்க உயிர்ப்பாக இருந்தது. முதல் பாதியில் ஃபகத், வடிவேலு இடையிலான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது” என தினமணி பாராட்டியுள்ளது.

மாரீசன் திரைப்படத்தின் குறைகள் என்ன?

பட மூலாதாரம், @SuperGoodFilms_

“முதல் பாகம் மற்றும் இடைவெளியில் எகிறிய எதிர்ப்பார்ப்புகள் மெல்ல மெல்லக் குறைவது போல் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. படத்தின் ‘ஒன்லைன்’ சரியாகக் கையாளப்படவில்லை. ஒரு கட்டத்தில் படம் கொலைகளை நியாயப்படுத்துவது சரியாக இல்லை” என்று தினமணி விமர்சித்துள்ளது.

அதே போல, “ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முன்னணி கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் பெரியளவில் கையாளப்படவில்லை” எனக் கூறுகிறது தி இந்து விமர்சனம்.

மேலும், “கிளைமேக்ஸ் காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். ஆனால், சில காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவது பலவீனம்” எனவும் விமர்சிக்கிறது.

தினமணி விமர்சனத்தின்படி, “மொத்தத்தில் மாரீசன் திரைப்படத்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமின்றி பார்க்கலாம்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு