இளையராஜாவின் பாடல்கள் யாருக்கு சொந்தம்? காப்புரிமை மோதலின் பின்னணி

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja

எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

‘இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தினோம். இது காப்புரிமை மீறல் கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. வழக்கின் அடுத்தகட்டம் என்ன? இளையராஜா காப்புரிமையைக் கோருவதற்கு உரிமை உள்ளதா?

வழக்கில் இளையராஜா கூறியது என்ன?

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்து வெளியிட்டிருந்தார்.

படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பாடலை படக்குழு பயன்படுத்தியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல் இப்பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘தன்னுடைய பாடலைப் பயன்படுத்தியது காப்புரிமையை மீறிய செயல். ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

ஜூலை 23 அன்று வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரின் பெயரையும் படக்குழு பயன்படுத்தியுள்ளது’ என இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் வாதிட்டார்.

இதனை மறுத்து வாதிட்ட வனிதா விஜயகுமார் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதர், “சோனி மியூசிக் நிறுவனத்திடம் முறையாக அனுமதியைப் பெற்றுத் தான் பாடலைப் பயன்படுத்தினோம்” எனக் கூறினார். மேலும், படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பெயரை படக்குழு நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

‘இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது’

“இந்த வழக்கில் பாடலை விற்றவர், பணம் கொடுத்து வாங்கியவர், உரிமை கோருபவர் என மூன்று பேரும் இடம்பெற்றுள்ளனர். தனது பாடலுக்கு இளையராஜா இழப்பீடு கோரும் மற்ற வழக்குகளைப் போல இந்த வழக்கு இல்லை” எனக் கூறுகிறார், வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர்.

“தனது பாடலைப் பயன்படுத்துகிறவர்கள் மீது இளையராஜா வழக்கு தொடரும்போது, ‘எதற்கு வீண் பிரச்னை?’ எனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவர் தனது உழைப்பை இன்னொருவருக்கு விற்றுவிட்டதால், இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது” என்கிறார் ஸ்ரீதர்.

தனது 4850 பாடல்களை எக்கோ நிறுவனத்துக்கு இளையராஜா விற்றுவிட்டதாகக் கூறும் ஸ்ரீதர், ” எக்கோ நிறுவனத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கிவிட்டது. அந்தப் பாடல்களைப் பூட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, வனிதா விஜயகுமார் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதர் முடிவு செய்ய வேண்டியது யார்?

தொடர்ந்து பேசிய ஸ்ரீதர், “தன்னுடைய படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காக இசையமைப்பாளருக்கு தயாரிப்பாளர் பணம் கொடுத்து வாங்குகிறார். தனது பாடல் என்பதற்காக, அந்தப் பாட்டையே பத்து படங்களுக்கு இசையமைப்பாளரால் விற்க முடியாது,” எனவும் தெரிவித்தார்.

“இசையமைப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட பாடலை, படத்தில் பயன்படுத்தலாமா என்பதை முடிவு செய்வது படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் தான்” எனக் கூறும் ஸ்ரீதர், “அவரது உழைப்பில் உருவான இசை என்றாலும் விற்றுவிட்டால் உரிமை கோர முடியாது,” என்கிறார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ஸ்ரீதர், “படத்துக்காக தயாரான ‘முத்த மழை’ என்ற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதற்காக அதனை வேறு ஒரு படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானால் விற்க முடியாது. அது இளையராஜாவுக்கும் பொருந்தும்” எனக் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இளையராஜா தரப்பு கூறுவது என்ன?

இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், ” ‘எக்கோ’ நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் இளையராஜா தடை உத்தரவைப் பெற்றார். அப்படியானால், எக்கோவை விலைக்கு வாங்கிய சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் இந்த தடை பொருந்தும்” என்கிறார்.

“இசைப் பணி (Musical work) என்றால் என்ன என்பதைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் தயாரிப்பாளரின் முதலீடு பற்றிப் பேசப்படுகிறது. முழு படத்தையும் பயன்படுத்துவது பிரச்னை இல்லை. மாறாக, தனிப்பட்ட பாடல்கள் என்பது இசையமைப்பாளரின் சொத்து,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வனிதா விஜயகுமார் தனது படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியது என்பது இந்திய காப்புரிமை சட்டப்பிரிவு 57ன்படி இதை சட்ட மீறலாக பார்க்கிறோம்” என்கிறார் வழக்கறிஞர் சரவணன்.

“ஆனால், இவ்வாறு அதனைப் பார்க்க முடியாது” எனக் கூறும் வனிதா விஜயகுமார் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதர், ” காப்புரிமை சட்டம் 57ன்படி, படைப்பாளிக்கு தார்மீக உரிமை (moral rights) வழங்க வேண்டும் எனக் கூறுகிறது” என்கிறார்.

‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பாடல் ‘நட்ட பைரவி’ (Natabhairavi) என்ற ராகத்தில் உருவாக்கப்பட்டதாகவும் தனது பல பாடல்களில் இந்த ராகத்தை இளையராஜா பயன்படுத்தியுள்ளதாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டார்.

“இந்த ராகத்தைக் கண்டறிந்தது இளையராஜா இல்லை என்னும்போது ராகத்தில் அமைந்த பாடலுக்கு மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியவர், “ஆனாலும் பாடலுக்கு இசையமைத்தற்காக அவருக்கு கிரடிட் கொடுத்தோம். அதையும் நீக்கிவிட்டோம்” எனக் கூறுகிறார்.

ஆனால், இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறும் வழக்கறிஞர் சரவணன், “கேசட்டுகளை வெளியிடுவதற்கான உரிமையை எக்கோவுக்கு இளையராஜா வழங்கியிருந்தார். அதை வேறு மாதிரி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதால் அவர் வழக்கு தொடர்ந்தார்” எனக் கூறுகிறார், சரவணன்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் ‘எக்கோ’ நிறுவனம் மீதான வழக்கு என்ன?

கடந்த ஆண்டு ஜூன் 13 அன்று, ‘தனது பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோருவதற்கு வாய்ப்பில்லை’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

முன்னதாக, தனது இசையில் உருவான சுமார் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தாலும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் பயன்படுத்துவதாகக் கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார். வழக்கின் முடிவில், ‘தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது’ என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு எக்கோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

அப்போது ‘எக்கோ’ தரப்பு வழக்கறிஞர், ‘ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றுவிட்டால் ராயல்டி பெறும் உரிமையைத் தவிர அனைத்து உரிமைகளையும் இசையமைப்பாளர் இழந்துவிடுகிறார்’ என வாதிட்டார்.

இளையராஜா தொடர்ந்த வழக்கில் ‘எக்கோ’ நிறுவனம் மீதான தடை நீடிப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய வழக்கறிஞர் சரவணன், “பாடல்கள் என்பது இளையராஜாவின் சொத்து. அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பதில் முக்கியமான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்” என்கிறார்.

‘எக்கோ’ நிறுவனத்துக்கு தடை உள்ளது என்றால் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய சோனி மியூசிக் நிறுவனத்துக்கும் இது பொருந்தும் எனவும் சரவணன் குறிப்பிட்டார்.

“சோனி மியூசிக் நிறுவனத்திடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தான் ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலைப் பயன்படுத்தும் உரிமையை வனிதா விஜயகுமார் வாங்கியுள்ளார்” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் ஸ்ரீதர்.

“தொடக்கத்திலேயே பாடலை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியிருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்த்திருப்போம். அவ்வாறு செய்யாமல் வழக்கு தொடர்ந்தது ஏன்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சோனி மியூசிக் தரப்பின் வழக்கறிஞர் தான்யாவிடம், இதுதொடர்பாக பிபிசி தமிழ் பேசியபோது, “அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார். அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் கருத்து சேர்க்கப்படும்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளரும் திரை விமர்சகருமான ஆர்.எஸ்.அந்தணன் ‘தீர்ப்பு வந்தால் மட்டுமே தீர்வு’

இந்த வழக்கில் வேறொரு கோணத்தையும் முன்வைக்கிறார், மூத்த பத்திரிகையாளரும் திரை விமர்சகருமான ஆர்.எஸ்.அந்தணன், “எக்கோ நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு போட்டுள்ளார். வழக்கின் தீர்ப்பு வரும் வரை யாருக்கும் விற்கக் கூடாது என்பது இளையராஜா தரப்பின் வாதமாக உள்ளது” எனக் கூறுகிறார்.

திரைப்பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் தொடர்ந்து விற்று வருவதாகக் கூறும் ஆர்.எஸ்.அந்தணன், “விற்பதை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் கூறவில்லை. உரிமை உள்ளதா..இல்லையா என்ற வாதம் தான் சென்று கொண்டிருக்கிறது” என்கிறார்.

சோனி மியூசிக் நிறுவனத்தை தவிர்த்துவிட்டு இளையராஜாவிடம் பாடலுக்கு உரிமை வாங்கினால் சோனி மியூசிக் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அப்படியானால் சோனி மியூசிக் தரப்புக்கும் உரிமை இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் தங்களின் படத்தில் இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதைப் தயாரிப்பாளர்கள் தவிர்த்து விடுகின்றனர்” எனக் கூறுகிறார், ஆர்.எஸ்.அந்தணன்.

“காப்புரிமை என்ற பெயரில் அதிக தொகைக் கேட்பதால் தயாரிப்பாளர்களால் ஈடுகட்ட முடிவதில்லை. அதனால் வேறு இசைமைப்பாளர்களின் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இளையராஜா-சோனி மியூசிக் வழக்கின் தீர்ப்பு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” எனவும் ஆர்.எஸ்.அந்தணன் தெரிவித்தார்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு