நரேந்திர மோதி வருகையைச் சுற்றி மாலத்தீவில் என்ன விவாதம் நடந்து கொண்டிருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023 அதிபர் தேர்தலில், இந்தியா வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்தார் முகமது முய்சுஎழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். ஜூலை 25ஆம் தேதி மாலத்தீவின் தலைநகர் மாலேவுக்கு செல்லும் இந்தியப் பிரதமர் மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம் இதுவாகும்.

மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டத்தைத் தவிர, நரேந்திர மோதி, அதிபர் முகமது முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார். 2024 அக்டோபரில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் எந்த அளவு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது என்பதை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள்.

மாலத்தீவில், இந்தியப் பிரதமர் பல கூட்டுத் திட்டங்களையும் தொடங்கி வைப்பார் என்று மாலத்தீவு ஊடகங்கள் கூறுகின்றன.

2023ஆம் மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ‘இந்தியா வெளியேறு’ என்ற பிரசாரத்தை முய்சு மேற்கொண்டார். அவருடைய அந்தப் பிரசாரம் அவருடைய வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாகவும் கருதப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றதும், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு எதிரான மனோநிலையையும் அணுகுமுறையையும் மேற்கொண்டிருந்தார். மேலும், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிறகு, அவர் பெயர் குறிப்பிடாமல் இந்தியாவை குறிவைத்து பேசிவந்தார். “மாலத்தீவுகள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் இது எங்களை அச்சுறுத்தும் உரிமையை யாருக்கும் வழங்காது” என்று கூறியிருந்தார்.

முந்தைய அரசாங்கத்தில் மாலத்தீவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட்டதாக முய்சு குற்றம் சாட்டியிருந்தார்.

பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த மாலத்தீவுக்கு நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவிடம் உதவிகள் கிடைக்கத் தொடங்கியதும், அதிபர் முய்சு இந்தியாவுக்கு எதிரான போக்கை சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டார்.

மாலத்தீவின் பொருளாதார பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அந்நாடு கடன் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்த இந்தியா, நாணய மாற்றத்தையும் செய்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 25 ஆம் தேதி மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார்மாலத்தீவு மக்களின் மனோநிலை என்ன?

இரு நாடுகளிலும் அரசாங்க மட்டத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாகவே தோன்றலாம். ஆனால் மாலத்தீவின் பொது மக்களிடையே இந்தியா குறித்த எண்ணம் என்ன? இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மாலத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு மக்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்?

ஜூலை 21 அன்று, மாலத்தீவின் மத அமைப்பான சலாஃப் ஜமியத்தின் தலைவர் அப்துல்லா பின் முகமது இப்ராஹிம், பிரதமர் மோதி குறித்த பதிவு ஒன்றை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், பிரதமர் மோதி இஸ்லாமிய விரோதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், பின்னர் இந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். மாலத்தீவின் திவேஹி மொழியில் உள்ள செய்தி வலைத்தளமான Adhadhu.com, அப்துல்லா பின் முகமதுவின் பதிவைப் பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் மனைவி சஜிதா முகமதுவின் சகோதரர்தான் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்ட அப்துல்லா பின் முகமது இப்ராஹிம். அவர் தனது பதிவை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை என்று அந்த தளம் எழுதியுள்ளது.

ஹாசன் குருசி என்பவரின் எக்ஸ் பதிவில் , மாலத்தீவு அரசியல் குறித்து கடுமையான கருத்துக்கள் அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோதியின் மாலத்தீவு பயணத்தை முன்னிட்டு அவரை வரவேற்க வீதிகளில் இந்திய தேசியக் கொடி வைக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, “இந்தியர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். மாலத்தீவு சுதந்திர தினத்தன்று, நமது தேசியக் கொடியை விட அதிகமான இந்தியக் கொடிகள் தெரியும்” என்று அந்தப் பதிவில் எழுதப்பட்டிருந்தது.

ஒரு இந்திய பயனரின் வீடியோ கிளிப்பை பதிவிட்டு , இதை இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ கிளிப்பில், இந்தியாவின் தேசியக் கொடி காட்டப்பட்டுள்ளது.

“2023ஆம் ஆண்டில், இந்தியா அவுட் பிரசாரத்தின் டி-சர்ட்டை அணிந்திருந்த முய்சு, தவறான நிர்வாகத்தால் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு, தற்போது இந்தியாவைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறுகிறார்” என்று ஹசன் குரேஷி எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆதரவான அதிபராக கருதப்பட்ட முகமது சோலிஹ்இந்திய தேசியக் கொடி சர்ச்சை

மாலேயில் இந்திய தேசியக் கொடி வைக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட மாலத்தீவை சேர்ந்த மிதுஅம் சாவுத் என்பவர், “எந்தவொரு நாட்டுத் தலைவரின் அரசுமுறை பயணத்தின்போதும், அந்த நாட்டின் தேசியக் கொடி நமது சாலைகளில் ஏற்றப்படுவது வழக்கமான நெறிமுறை. பிரதமர் மோதியை வரவேற்பதற்கும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே பிரச்னை அதுவல்ல. ஆனால், மாலத்தீவின் சுதந்திர தினத்தன்று வேறொரு நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டால் அது அசாதாரணமானது” என்று எழுதியுள்ளார்.

மேலும், “நமது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தியப் பிரதமர் மோதி வருகிறார். நமது சுதந்திர தினத்தன்று நம்முடைய சாலைகளில் மாலத்தீவின் தேசியக் கொடி மட்டுமே இருக்க வேண்டும், இந்தியா, சீனா அல்லது வேறு எந்தவொரு நாட்டின் தேசியக் கொடியும் இருக்கக்கூடாது. ஜூலை 26 அன்று இந்திய தேசியக் கொடி அகற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திர தினத்தன்று வேறு எந்த நாட்டின் தேசியக் கொடியையும் நம்முடைய நாட்டில் பார்ப்பது நமக்கு அவமானகரமான விஷயமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்துத்துவா கொடி ஏந்திய பிரதமர் மோதி நமது சுதந்திர தின நிகழ்ச்சிகளில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சமீபத்திய வரலாற்றில், பொருளாதார நெருக்கடி, ராணுவ இருப்பு மற்றும் அரசியல் தலையீடுகளால் எந்த நாடும் தனது சுதந்திரத்தை இவ்வளவு பலவீனமாக கொண்டாடியதில்லை. சுதந்திர தினத்தன்று நமது தலைமை விருந்தினரைத் தேர்ந்தெடுக்கக்கூட நம்மால் முடியவில்லை. இந்தியா நமக்காக இந்த முடிவை எடுக்கிறது” என்று மற்றொரு பதிவில் மிதுஅம் சாவுத் எழுதியுள்ளார்.

கடந்த மாதம், மாலத்தீவு பத்திரிகையாளர் இப்ராஹிம் மாஹில் முகமது, சிந்தனைக் குழுவான ORF இன் இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதினார்.

அதில், “2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாலத்தீவு அரசு நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோதி குறித்து சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிட்டனர். லட்சத்தீவுக்கு மோடி சென்ற பிறகு, அவர் தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்கப்பட்டார். அந்தக் கருத்துக்கள் அவர்களது தனிப்பட்டக் கருத்துக்கள், அவை அரசாங்கத்தினுடையது அல்ல. உண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்ற சமூக ஊடகப் பிரசாரம் இந்தியாவிலிருந்து நடந்து கொண்டிருந்தது”.

“முதலில் இந்தியாவிற்கு மாற்றாக சீனா மற்றும் வளைகுடா நாடுகளை பார்க்கத் தொடங்கிய மாலத்தீவு அரசு, விரைவில் யதார்த்தத்தை உணர்ந்துவிட்டது. இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதைத் தவிர முய்சுவுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிராந்தியத்தில் மாலத்தீவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டாளியாக இந்தியா இருக்கிறது. முய்சுவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, இந்தியா பல்வேறு நிலைகளில் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது” என்று இப்ராஹிம் மாஹில் முகமது எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது முய்சு ஜூன் 2024 இல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார்’இந்தியாவை நேசிக்காதே, ஆனால் பிரச்னையாக மாறாதே’

2024 செப்டம்பரில், அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, தேர்தல் வெற்றிக்காக முய்சு இந்தியா அவுட் பிரசாரத்தைத் தொடங்கியதாகக் கூறினார்.

தற்போது மாலத்தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அரசியல் மட்டத்தில் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. இந்திய அரசாங்கத்தைப் பற்றி மாலத்தீவு மக்களுக்கு நேர்மறையான கருத்து இல்லையா?

இந்தக் கேள்வியை, வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செயல்படும் அனந்தா மையம் என்ற சிந்தனைக் குழுவின் தலைமை செயல் அதிகாரி இந்திராணி பாக்சியிடம் பிபிசி கேட்டது.

“இரு நாடுகளுக்கு இடையில் அரசியல் ரீதியிலும் எல்லாம் சரியாக இல்லை. ஆம், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா அவுட் பிரசாரத்தினால் அதிபர் முய்ஸுவுக்கு பெரிய அலவில் லாபம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். இந்தப் பிராந்தியத்தில், எந்தவொரு நாட்டிலும் கடினமான காலங்களில் இந்தியாவே முதலில் கைகொடுக்கும். ஏனென்றால், இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது” என்று கூறுகிறார்.

“அமெரிக்காவிற்கு அருகில் வசிக்கும் போது அதற்கு விரோதமாக நடந்து கொள்ள முடியாது, இல்லையா? முய்சு இந்தியாவை நேசிக்க வேண்டியதில்லை, ஆனால் அவர் அதற்காக விரோதமாகவும் இருக்கக்கூடாது. இஸ்லாமிய நாடான மாலத்தீவுகள், பிரதமர் மோதியையும் இந்தியாவையும் வித்தியாசமாகப் பார்க்கிறது. இரு நாடுகளும் ஒரே புவியியல் பகுதியில் இருக்கும் நிலையில், இந்தியாவுடன் உறவு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதை மாலத்தீவு புரிந்துகொண்டது” என்று அவர் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அதன் சிறப்புக்குக் காரணம். இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் மாலத்தீவு அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளிலிருந்து இந்த பாதை வழியாகவே இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகம் நடைபெறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாலத்தீவு உடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் சரியாக இருக்காது.

“நமது அண்டை நாடுகள் நம்மை நேசிக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தைத் தாண்டி நாம் உயர வேண்டும். நாம் ஒன்றாக வாழ விரும்பினால், சில கருத்து வேறுபாடுகளைப் புறக்கணிக்கலாம். வங்கதேசத்துடனான நமது உறவுகள் இணக்கமாக இல்லை, இருப்பினும் அவர்களின் போர் விமானம் விபத்துக்குள்ளானபோது நாம் மருத்துவக் குழு ஒன்றை அனுப்பினோம்” என்பதை இந்திராணி பாக்சி சுட்டிக் காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 1200 சிறிய தீவுகளைக் கொண்டது மாலத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 5.21 லட்சம்மாலத்தீவு ஒரு சிறிய தீவு நாடு, அதன் பரப்பளவு வெறும் 300 சதுர கிலோமீட்டர் மட்டுமே. பரப்பளவில் ஒப்பிட்டுப் பார்த்தால், மாலத்தீவை விட இந்தியத் தலைநகர் டெல்லி ஐந்து மடங்கு பெரியது.

மாலத்தீவுகள் சுமார் 1200 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு குழு. மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 5.21 லட்சம்.

புவியியல் ரீதியாக உலகில் பல சிதறல்களாக பரவியுள்ள நாடு மாலத்தீவுகள் என்று கூறப்படுகிறது. மாலத்தீவுகளில் தனது இருப்பை சீனா வலுப்படுத்தினால், அது இந்தியாவிற்கு நல்லதல்ல என்று கருதப்படுகிறது.

“யதார்த்தத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது அண்டை நாடுகள் நமக்கு தடையாக மாறாமல் இருந்தால் போதும். இந்த நாடுகள் நம்மை நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. முய்சு நம்மை ஒருபோதும் நேசிக்க மாட்டார். முன்னாள் அதிபர் சோலிஹ் வந்தாலும், இந்தியா மீதான அவரது அணுகுமுறை அங்குள்ள மக்களின் சிந்தனையை பிரதிபலிப்பது போன்றே இருக்கும்” என்று இந்திராணி பாக்சி கூறுகிறார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலிருந்து மாலத்தீவுகள் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு மாலத்தீவுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு