அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது.

இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.

அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.

சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர்.

‘ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’

பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ்.

“கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்,” என்றார் அவர்.

கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார்.

“கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு,” என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன்

அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன்.

கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், “திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு

இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, “இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு