அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனது பிரேரணை தொடர்பாக உறுப்பினர் சபையில் கருத்து தெரிவிக்கையில்,

மிக மோசமான துன்பியல்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவேந்தி வருகின்றோம்.

இவ் வலி மிகு காலத்தில் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பிக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களை காட்டி சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருள் சூழ் நாட்களை கழித்து வருகின்றனர்.

அவர்கள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இப் பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் பல்வேறு பாரதூரமான குற்றம் இழைத்து தண்டனை விதிக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் இப் பத்து தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து கொடும் சிறைக்குள் வாழ்வை தொலைப்பது மன வேதனைக்குரிய விடயமாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்ட இப்போதைய ஜனாதிபதி இவ் விடயத்தில் பாராமுகமாக இருப்பது ஏமாற்றத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

எனவே தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இப் பிரேரணை மூலம் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.