Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மான்செஸ்டர் டெஸ்டில் நிரூபித்த சாய் சுதர்சன் – தடுமாறும் இந்தியா மீண்டெழ என்ன வாய்ப்பு?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.எழுதியவர், தினேஷ் குமார்பதவி, கிரிக்கெட் விமர்சகர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது?
சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு டெஸ்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது.
முதல் மூன்று டெஸ்ட்களில் இருந்த விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும், நேற்று தொடங்கிய மான்செஸ்டர் டெஸ்டிலும் பார்க்க முடிகிறது.
இரண்டும் சம பலமுள்ள அணிகள் என்பதை ஒவ்வொரு செஷனும் நிரூபித்தன. ஸ்லோ ஓவர் ரேட், ஸ்லிப் திசையில் இருந்து பறக்கும் சீண்டல்கள், பந்த்தின் தலைசுற்ற வைக்கும் சிக்சர், சாதுர்யமான ஸ்டோக்ஸ் கேப்டன்சி என இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு தேவையான எல்லா மசாலாக்களும் நேற்றைய நாளில் இருந்தன.
அணியில் மாற்றத்தோடு களம் இறங்கிய இந்தியா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த் வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார். ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் எடுத்த அணி, இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனாலும், சென்டிமென்ட் பார்க்காமல் இங்கிலாந்து கேப்டன் ரிஸ்க் எடுத்து இந்தியாவை பேட் செய்ய பணித்தார். குல்தீப் வருவார், கருண் நாயர் தன் இடத்தை தக்கவைப்பார் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பிய நிலையில், கருணை நீக்கி, சாய் சுதர்சனை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்ததுடன், பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷார்துலை ஆடவைத்தது இந்தியா.
இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 5 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் இந்தியா களமிறங்கியது. எதிர்பார்த்தது போலவே, ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார் நிதானத்தை கடைபிடித்த இந்திய பேட்டர்கள்
ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் ஓரளவுக்கு தட்டையானது என்றாலும், தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி பிரமாதமாக பந்துவீசியது.
அனுபவ வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் தொடர்ச்சியாக எட்டு ஓவர்கள் கட்டுப்பாடுடன் வீசினார். கடந்த டெஸ்டின் நாயகன் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வழக்கமான வேகம் இல்லை. ஆனாலும் துல்லியம் குறையாமல் பந்துவீசினார். இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஆர்ச்சரை முடிந்தவரைக்கும் எதிர்கொள்ளாமல் ஜெய்ஸ்வால் தவிர்த்தார்.
முதல் செஷனில் ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுலே எதிர்கொண்டார். ராகுலின் பேட்டிங் இந்திய அணிக்கு ஒரு உத்தரவாதத்தை நம்பிக்கையை கொடுக்கும்படி இருந்தது. தன் எல்லைக்கு வரும் பந்துகளை தவிர, எந்த பந்தையும் அவர் சீண்டவில்லை.
அதேசமயம், ஹாஃப் வாலியாக (Half volley) கிடைத்த பந்துகளையும் அரைக்குழியாக கிடைத்த பந்துகளையும் தண்டிக்க அவர் தயங்கவில்லை.
நேற்றைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் ராகுல் பாணியில் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. உள்ளே வரும் பந்துகளை தடுப்பது; வெளியே செல்லும் தவறான பந்துகளை தண்டிப்பது. இதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் தாரக மந்திரம்.
லார்ட்ஸ் டெஸ்டில் தவறான ஷாட் விளையாடியதற்காக விமர்சிக்கப்பட்ட ஜெய்ஸ்வால், நேற்று தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.
இன்னிங்ஸை கொஞ்சம் நிலைநிறுத்தியவுடன் தைரியமாக ரன் குவித்தார். நன்றாக செட்டில் ஆனபிறகு விக்கெட்டை இழப்பது என்பது இந்த தொடர் முழுக்கவே இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. அது நேற்றும் தொடர்ந்தது தான் துரதிர்ஷ்டம்.
Drinks இடைவேளைக்கு முன்னும் பின்னும் விக்கெட்டை இழக்காத இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை இழந்தது. பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், பெரும் முதலைகளை எல்லாம் சமாளித்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார் முதல் அரை சதத்தை பதிவு செய்த சாய் சுதர்சன்
ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாகரித்து கொண்டார். 20 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறிவிட்டார்.
கால்பக்கம் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் சாய் சுதர்சனுக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் துலக்கமாக வெளிப்பட்டது. அவருடைய தலை ஆஃப் சைடில் சாய்ந்து விடுவதே இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம்.
முதல் டெஸ்டிலும் இதே முறையில் அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எப்படி ஒரு இன்னிங்ஸை கட்டமைப்பது என்ற வித்தையை தெரிந்துவைத்துள்ளார் அவர்.
ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். டெக்னிக்கலாக சில பிரச்னைகள் இருந்தாலும் சுதர்சனின் மனத்திட்பம் (Temperament) நேற்றைய இன்னிங்ஸ் முழுக்க நேர்மறையாக இருந்தது.
சுதர்சனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடுவதிலும் இருந்த சுணக்கம் வெளிப்பட்டது. கடைசியில் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
சுதர்சன் விளையாடும் போது, ஆட்டத்துக்கு முந்தைய நாள் அவர் யாருமற்ற மைதானத்தில், தன்னந்தனியாக நிழல் பயிற்சியில் (Shadow practice) ஈடுபட்டதை டிவியில் காட்டினார்கள்.
இந்தப் பயிற்சியின் பெயர், விசுவலைசேஷன் (Visualisation). விசுவலைசேஷன் என்பதை ஒரு வீரர் களத்தில் நிகழ்ப்போவதை மனதளவில் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் ஆகும் ஒருவித முன்தயாரிப்பு எனலாம்.
கிரிக்கெட்டில் முக்கியமான சூழல்கள் குறித்த ஆழமான அனுபவங்களை நேரடியாக அத்தகைய களத்தில் பங்குபெறாவிட்டாலும் கூட ‘விசுவலைசேஷன்’ மூலமாக ஒருவரால் பெற முடியும் என்கிறார்கள் ஸ்போர்ட்ஸ் சைக்காலாஜிஸ்ட்கள். சாய் சுதர்சன் மட்டுமல்ல நிறைய உச்ச நட்சத்திரங்கள் ஏதோவொரு வடிவத்தில் விசுவலைசேஷன் டெக்னிக்கை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதுபோன்ற முன் தயாரிப்புகளும் நேர்மறையான சிந்தனையும்தான் சுதர்சனை தனித்துக் காட்டுகின்றன. டெக்னிக்கலாக கருண் நாயர் சுதர்சனை விட வலுவானவர் என்றபோதும், மனத்திட்பத்தில் (Temperement) அவர் பலவீனமாக இருப்பதாலேயே, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை தன்பக்கம் திருப்பிய இங்கிலாந்து அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில், ஆக்ரோசமாக இன்னிங்ஸை ஆரம்பித்தாலும், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பந்தை கவனிக்காமல் பேட்டை உயர்த்தி LBW முறையில் ஆட்டமிழந்தார்.
லார்ட்ஸ் டெஸ்டிலும் கவனத்தை இழந்து இப்படி ஒரு ஒன்றுமற்ற பந்துக்கு இரையனார் என்பதை பார்த்தோம். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பிராட்மேனின் (974) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், தன் ஃபார்மை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறார்.
கடந்த டெஸ்டில் இதுபோன்றதொரு பந்தில்தான் (Nip backer) ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். கிரீஸை நன்றாக பயன்படுத்தி ஸ்டோக்ஸ் வீசும் இந்தப் பந்தை சரியாக கணித்து விளையாடுவது எளிதல்ல. ஆனால், கில் ஆட்டமிழந்தது அவர் கவனம் ஆட்டத்தில் இல்லை என்பது போலிருந்தது.
முதல் செஷனை இந்தியா கைப்பற்றிய நிலையில் உணவு, தேநீர் இடைவேளைக்கு நடுவில் 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இரண்டாவது செசனை தன்வசப்படுத்தியது.
இன்னிங்ஸ் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வோக்ஸ் பந்தில் ஒரு ஆபத்தான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்பார்த்து, பந்தை நேராக காலில் வாங்கி அடிபட்டு களத்தை விட்டு சென்றார் பந்த்.
அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால், இந்தியா ஆட்ட நேர முடிவில் இன்னும் வலுவான நிலையில் இருந்திருக்கும். காயத்தின் தன்மை மோசமாக இருக்கும் பட்சத்தில், இரண்டாம் நாள் பந்த் பேட்டிங் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த டெஸ்ட், தொடரின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டதாக இப்போது பந்த்தின் காயம் மாறியுள்ளது. ஆனாலும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானத்தில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தின் தன்மையை புரிந்துகொண்டு, மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். குறிப்பாக கில், சுதர்சன் என முக்கிய விக்கெட்களை, முக்கியமான கட்டத்தில் எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஸ்டோக்ஸ் சுவாரயப்படுத்தினார்.
நாளை புதிய பந்தில் இந்தியா சமாளித்து விளையாடி, மதிய உணவு இடைவேளை வரை தாண்டிவிட்டால், ஒரு வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். இந்தியாவின் கைக்கு வந்திருக்க வேண்டிய முதல் நாள் ஆட்டம், பந்த்துக்கு ஏற்பட்ட காயத்தால், எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. நாளை யார் கை ஓங்குமென பார்க்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு