முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து மாற்றிய திட்டம் ஏன் தோல்வியடைந்தது?

பட மூலாதாரம், PENGUIN INDIA

படக்குறிப்பு, முகமது பின் துக்ளக் 1325ஆம் ஆண்டு சுல்தானாக பொறுப்பேற்றார்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி 10 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 1325ஆம் ஆண்டு, வங்கத்தில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்த டெல்லி சுல்தான் கியாசுதீன் துக்ளக், ஒரு பெரிய விபத்தில் சிக்கினார்.

டெல்லியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், அவரை வரவேற்க மரத்தால் கட்டப்பட்டிருந்த மண்டபம் ஒன்று இடிந்து அவர் மீது விழுந்ததில் சுல்தான் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், இடைக்கால வரலாற்று ஆசிரியர் ஜியாவுதீன் பரானியின் ‘தாரிக்-இ-ஃபிரோஸ்ஷாஹி’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், “மழையின்போது மின்னல் தாக்கியதால் மண்டபம் இடிந்து விழுந்ததாக” எழுதப்பட்டுள்ளது.

இதற்கும் முன்பாகவே கியாசுதீன், துக்ளகாபாத்தில் தனக்கென ஒரு கல்லறையைக் கட்டி வைத்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதே இரவில், அவர் அங்கே அடக்கமும் செய்யப்பட்டார். ஆனால், மண்டபம் இடிந்து விழுந்ததை ஒரு சதி என்று சில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்றனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, கியாசுதீனின் மகன் ஜௌனா, டெல்லியின் அரியணையில் ஏறி, ‘முகமது பின் துக்ளக்’ என்ற புதிய பெயரைச் சூட்டிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, டெல்லி சுல்தானகத்தின் மூன்று நூற்றாண்டு கால வரலாற்றில், மிகவும் சர்ச்சைக்குரிய, கொந்தளிப்பான காலம் தொடங்கியது.

முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில், மொராக்கோ பயணியான இப்னு பதூதா, இந்தியாவுக்கு வந்து முகமது பின் துக்ளக் அரசவையில் பத்து ஆண்டுகளைக் கழித்தார்.

முகமது பின் துக்ளக்கின் தந்தை காலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ஜியாவுதீன் பரானி, முகமது பின் துக்ளக் அரசவையில் நீண்ட காலம் பணியாற்றினார்.

“முகமது பின் துக்ளக்கின் அரசவை உறுப்பினராக இருந்தபோதிலும், வரலாற்று ஆசிரியர் பரானி, அவரது குறைபாடுகள் மற்றும் தவறான செயல்களைத் தெளிவாக விவரித்துள்ளார். அதே நேரத்தில், சில நல்ல செயல்களையும் பாராட்டியுள்ளார்.

ஆனால், இப்னு பதூதா எழுதியவை மிகவும் வெளிப்படையானவை. ஏனெனில் அவர் இந்தியாவில் இருந்து திரும்பிய பிறகு அவற்றை எழுதியதால், முகமது பின் துக்ளக்கின் எதிர்மறையான கருத்துகள் குறித்த பயமின்றி தனது அனுபவங்களைப் பதிவு செய்தார்” என்று பிரபல வரலாற்று ஆசிரியர் ஆபிரகாம் எராலி, தனது ‘தி ஏஜ் ஆஃப் ரேத்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை ஆளுமை கொண்ட முகமது பின் துக்ளக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் உள்ள கியாசுதீன் துக்ளக் கல்லறைஇடைக்கால வரலாற்று ஆசிரியர்கள் முகமது பின் துக்ளக்கை இரட்டை ஆளுமை கொண்ட ஒரு நபராக வர்ணித்துள்ளனர். அதற்குக் காரணம், அவரிடம் பல நல்ல குணங்கள் இருந்ததோடு, பல தீய குணங்களும் காணப்பட்டுள்ளன.

அவர் மிகவும் திமிர் பிடித்தவராகவும், அதே நேரம், மிகவும் பணிவானவராகவும் திகழ்ந்தார். அதேபோல், ஒருபுறம் கொடூரமான குணம் கொண்டவராக இருந்தாலும், மறுபுறம் இரக்க குணம் கொண்டவராகவும் விளங்கியுள்ளார்.

“இந்த மன்னர் ஒருபுறம் பரிசுகள் வழங்குவதை விரும்பினார். மறுபுறம் ரத்தம் சிந்துவதையும் விரும்பினார். அவரது வாசலில் ஏழைகள் பணக்காரர்களாக மாறினர், ஆனால் சிலர் கொல்லப்பட்டனர்” என்று இப்னு பதூதா தனது ‘ரிஹ்லா’ எனும் புத்தகத்தில் அவரைப் பற்றி விவரித்து எழுதியுள்ளார்.

“முகமது ஒருபுறம் அரக்க இதயம் கொண்ட துறவியாகவும், மறுபுறம் துறவியின் ஆன்மா கொண்ட அரக்கனை போலவும் இருந்தார்” என மற்றொரு வரலாற்று ஆசிரியரான ராபர்ட் செவெல், தனது ‘A Forgotten Empire’ என்ற புத்தகத்தில் கூறுகிறார்.

பட மூலாதாரம், PENGUIN RANDOM HOUSE

படக்குறிப்பு, முகமது பின் துக்ளக் ஒருபோதும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லைதுக்ளக்கின் மூர்க்கமான ஆளுமை

முகமது பின் துக்ளக் எப்போதும் புதிதாக எதையாவது சிந்திக்கும் பண்பு கொண்டவர். ஆனால் அவர் நடைமுறைவாதி இல்லை. பொறுமையின்றி, தன் வார்த்தைகளில் பிடிவாதம் கொண்டவராக இருந்துள்ளார்.

அவரது பெரும்பாலான திட்டங்கள் அவருக்கும் அவரது குடிமக்களுக்கும் ஒரு கனவாக மாறியதாக அந்தக் காலத்து வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவர் தனது தோல்விகளை ஒருபோதும் ஏற்காமல், எப்போதும் மக்களையே குறை கூறி வந்துள்ளார்.

“சுல்தான் முகமது பின் துக்ளக் மக்களின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், சிறிய குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனைகளை வழங்கினார். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சங்கிலியால், கயிறுகளால் கட்டப்பட்டு பெரிய மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அங்கு கொல்லப்பட்டனர். சித்திரவதைக்கான தண்டனை பெற்றவர்கள் அங்கே சித்திரவதை செய்யப்பட்டனர். பிற தண்டனை பெற்றவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்” என்று இப்னு பதூதா எழுதுகிறார்.

“ரத்தம் சிந்தப்படாமல் அங்கு ஒரு நாள்கூடக் கடந்ததில்லை. அவரது அரண்மனையின் பிரதான வாயில் முழுவதிலும் ரத்தம் சிந்தியிருப்பதைப் பார்க்க முடிந்தது. சுல்தானுக்கு எதிராக யாரும் குரல் எழுப்பக்கூடாது என்பதற்காக, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரண்மையின் பிரதான வாயிலில் வீசப்பட்டன. வெள்ளிக்கிழமை தவிர, வாரத்தின் எல்லா நாட்களிலும் மரண தண்டனை வழங்கப்பட்டது.”

அதிக அறிவாற்றல், ஆனால் கடுமையான குணம்

பட மூலாதாரம், ORIENTAL INSTITUTE BARODA

படக்குறிப்பு, இப்னு பதூதா ‘ரஹ்லா’ என்ற புத்தகத்தை எழுதினார்பிற இடைக்கால ஆட்சியாளர்களைவிட அதிக அறிவாற்றல் மிக்கவராக இருந்தபோதிலும், முகமது பின் துக்ளக், மனிதாபிமானம் உள்ளவராக இல்லாமல், கடுமையான ஆளுமையாகத் திகழ்ந்தார்.

“இஸ்லாமிய நூல்களிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளிலும், தர்மம் மற்றும் பணிவு போன்ற பண்புகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், முகமது பின் துக்ளக், அவற்றை முக்கியமானதாகக் கருதவில்லை” என்று ஜியாவுதீன் பரானி, தனது “தாரிக்-இ-ஃபிரோஸ்ஷாஹி” நூலில் குறிப்பிடுகிறார்.

“முகமது பின் துக்ளக்கின் உறவினர் பஹாவுதீன் குர்சாஸ்ப் அவருக்கு எதிராகக் கலகம் செய்தபோது, முகமது, அவரது தோலை உரித்தார்” என்று இப்னு பதூதா விவரிக்கிறார்.

அதேபோல், மற்றொரு சம்பவத்தையும் இப்னு பதூதா பதிவு செய்துள்ளார்.

“ஒருமுறை இறை பக்தியுள்ள முஸ்லிம் ஒருவர்,முகமது பின் துக்ளக்கை ‘சர்வாதிகாரி’ என்று கூறினார். அவர், 15 நாட்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்ட பிறகும், தான் கூறிய சொற்களைத் திரும்பப் பெறவில்லை.

இதனால், வலுக்கட்டாயமாக மனித மலத்தை அவருக்கு உணவாக அளிக்குமாறு சுல்தான் உத்தரவிட்டார். வீரர்கள், அவரை தரையில் கிடத்தி, இடுக்கியால் வாயைத் திறந்து, சுல்தானின் உத்தரவைப் பின்பற்றினர்,” என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் இப்னு பதூதா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் மொராக்கோவில் இருந்து இப்னு பதூதா இந்தியாவுக்கு வந்தார்பயங்கரமான கொடுங்கோலாட்சி

டெல்லி அரியணையில் இருந்து ஆட்சி செய்த 32 சுல்தான்களில், ‘கொடூரமான ஆட்சியாளர்’ என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டவர்கள் இருவர் மட்டுமே.

“அந்தக் கால சுல்தான்களின் பார்வையில், கொடுமையும் பயங்கரவாதமும் அவர்களின் ஆட்சிக்கான தேவைகளாக இருந்தன. அவையன்றி, அவர்கள் ஆட்சியாளர்களாக நிலைத்திருக்க முடியாது. ஆனால், முகமது, இந்தக் கொடூரமான நடைமுறையை எதிர்விளைவு ஏற்படும் அளவுக்குக் கொண்டு சென்றார்” என முகமது காசிம் ஃபரிஷ்டா, தனது ‘தாரிக்-இ-ஃபரிஷ்டா’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“இது அவரது அதிகாரத்தை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைத்தது. முகமது ஒரு படித்த, பண்பட்ட மற்றும் திறமையான மனிதர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்குத் தனது மக்கள் மீது இரக்கமும், அக்கறையும் இருக்கவில்லை” என்று அவர் எழுதியுள்ளார்.

வெளிநாட்டினருடன் நல்ல தொடர்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது பின் துக்ளக் இப்னு பதூதாவுக்கு கிராமங்களை பரிசாக வழங்கினார்முகமது பின் துக்ளக் தனது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளிடம் நல்ல முறையில் நடந்து கொண்டதைப் பற்றிப் பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

“நான் சுல்தானுக்கு முன்பாகச் சென்றவுடன், அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘உங்களது வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார்” என அவரது பண்பை இப்னு பதூதா விவரித்து எழுதியுள்ளார்.

சுல்தான் முகமது அவருக்கு 6000 டாங்காக்களை ரொக்கமாக வழங்கினார் என்றும் கூறியுள்ளார் பதூதா.

முதலில் அவருக்கு மூன்று கிராமங்கள் வழங்கப்பட்டன, பின்னர் இரண்டு கிராமங்கள் வழங்கப்பட்டன. இதனால் அவருக்கு ஆண்டு வருமானமாக 12,000 டாங்காக்கள் கிடைத்தன.

“சுல்தான் எனக்கு இந்து மதத்தைச் சேர்ந்த பத்து அடிமைகளையும் கொடுத்தார். இது மட்டுமின்றி, உள்ளூர் மொழி எனக்குச் சிறிதும் தெரியாவிட்டாலும் நான் டெல்லியின் காஜியாக நியமிக்கப்பட்டேன். வெளிநாட்டு மன்னர்களிடம் சுல்தான் அன்பாக நடந்து கொண்டார்” என்று இப்னு பதூதா தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

எழுத்தாளர் ஆபிரகாம் இராலியின் கூற்றுப்படி, “முகமது பின் துக்ளக், சீன மன்னருக்கு 100 குதிரைகள், 100 அடிமைகள், 100 நடனக் கலைஞர்கள், 1,200 துணிகள், பட்டு ஆடைகள், தொப்பிகள், வாள்கள், முத்து எம்பிராய்டரி செய்யப்பட்ட கையுறைகள் மற்றும் 15 திருநங்கைகளைப் பரிசாக அனுப்பினார்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஜியின் முடிவுகளை முகமது பின் துக்ளக் ஏற்றுக் கொண்டதாக இப்னு பதூதா (வலது) எழுதியுள்ளார்நீதி மீதான பற்று

டெல்லி சுல்தானகத்தின் வரலாற்றை ஆராயும்போது, அந்தக் கால ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இடையிலான உறவுகள் பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவரும் வரலாற்று ஆசிரியருமான சதீஷ் சந்திரா தனது “Medieval India: From Sultanate to Mughals” என்ற புத்தகத்தில், முகமது பின் துக்ளக் தனது தாயாரை மிகவும் மதித்தார் என்றும், ஒவ்வொரு பிரச்னையிலும் அவரது ஆலோசனையைப் பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ராணுவ முகாம்களில் பெண்கள் இருப்பதை அவர் தடை செய்திருந்தார்.

சுல்தானுக்கு மது அருந்துவதுகூட பிடிக்கவில்லை என்று பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

இடைக்கால இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், தனது ‘இடைக்கால இந்தியாவின் பொருளாதார வரலாறு’ என்ற புத்தகத்தில், “முகமது பின் துக்ளக்கின் சிறப்பு என்னவென்றால், வெளியில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் மங்கோலியர்கள் தவிர, அவர் இந்துக்களையும் முக்கியமான பதவிகளில் நியமித்தார். மேலும், அவர் மக்களை அவர்களின் மதத்தைவிட அவர்களின் திறன்களைக் கொண்டு மதிப்பிடுவார்” என்று எழுதியுள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உதாரணமாக, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் அறிஞராக இருந்த அவர், வானியல், தத்துவம், கணிதம் மற்றும் ஜோதிடத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.

முறையான நீதி அமைப்பை முகமது பின் துக்ளக் எவ்வாறு பற்றுடன் பின்பற்றினார் என்பதற்கு இப்னு பதூதா பல்வேறு உதாரணங்களை வழங்கியுள்ளார்.

“ஒருமுறை சுல்தானின் அரசவை உறுப்பினரான இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சகோதரருக்கு சுல்தான் எந்தக் காரணமும் இல்லாமல் மரண தண்டனை விதித்ததாக காஜியிடம் புகார் அளித்தார். சுல்தான் காஜியின் அரசவைக்கு வெறுங்காலுடன் சென்று, அவர் முன்பாகத் தலை குனிந்து நின்றார்.

காஜி சுல்தானுக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கினார். மேலும் அவரது சகோதரனைக் கொன்றதற்காக அரசவை உறுப்பினருக்கு அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார். சுல்தான் காஜியின் உத்தரவைப் பின்பற்றினார்” என ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “ஒருமுறை, சுல்தான் தனக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாக ஒருவர் கூறினார். இந்த முறையும், காஜி சுல்தானுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினார். சுல்தான், அந்தத் தொகையை புகார்தாரரிடம் செலுத்தினார்” என்று மற்றொரு நிகழ்வையும் இப்னு பதூதா பதிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு உதவும் குணம்

பட மூலாதாரம், IRFAN HABIB

இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, தலைநகரில் ஒரு மவுண்ட்(பண்டைய அளவீட்டு முறை) கோதுமையின் விலை ஆறு தினார்களை எட்டியது.

அப்போது சுல்தான் முகமது பின் துக்ளக், டெல்லியில் உள்ள “ஒவ்வொரு பணக்காரர் மற்றும் ஏழைக்கும், நபருக்கு 750 கிராம் வீதம் ஆறு மாதங்களுக்கு தினசரி உணவுப் பொருள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதை இப்னு பதூதா தனது புத்தகத்தில் பதிவு செய்து, “சாதாரண காலங்களில்கூட, சுல்தான் டெல்லி மக்களுக்காக பொது சமையல் அறைகளைத் திறந்தார், அதில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கப்பட்டது. சுல்தான் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளையும், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் தங்குவதற்கான இல்லங்களையும் திறந்தார்” என்று எழுதியுள்ளார்.

மதம் தொடர்பான விஷயங்களில் முகமது பின் துக்ளக்கின் கருத்துகளில் பல முரண்பாடுகள் காணப்பட்டன. சில வரலாற்று ஆசிரியர்கள் அவரது ஆட்சிக் காலத்தில், தொழுகை நடத்தாதவர்கள் மிகவும் கண்டிப்பாக நடத்தப்பட்டதாக நம்புகிறார்கள்.

ஆனால் வரலாற்று ஆசிரியர்களான ஜியாவுதீன் பரானி, அப்துல் மாலிக் இசாமி ஆகியோர் சுல்தான் முகமது ஒரு மதச் சார்பற்ற நபர் என்று நம்புகிறார்கள்.

“சுல்தானின் அரசவையில் இருந்தாலும், அவர் எதிரிகளைக் கையாண்ட விதம் இஸ்லாமிய மரபுகளுக்கு ஏற்ப இல்லை என்று சுல்தானிடம் நேரடியாகக் கூறியிருந்ததாக” பரானி கூறுகிறார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, முகமதுவை “காஃபிர்” என்று அழைத்த வரலாற்று ஆசிரியர் இசாமி, அவர் எப்போதும் நாத்திகர்களுடன் நிற்பதைக் காண முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், முகமது பின் துக்ளக், “யோகிகள் மற்றும் சாதுக்களுக்கு ஆதரவளித்தது” அப்போதைய இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கோபப்படுத்தியது.

“முகமது மிகவும் வன்முறையான இயல்புடையவராக இருந்தபோதிலும், சமண துறவியான ஜினபிரபா சூரியின் சீடராக இருந்தார். முகமது மற்ற மதங்களைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்ததற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதற்குக் காரணம் அவரது சிந்தனையும், கலாசாரங்கள் மீதான ஆர்வமும் பெரிய அளவில் இருந்ததுதான்” என்று ஆபிரகாம் எராலி பதிவு செய்துள்ளார்.

தலைநகரை மாற்றுவது தொடர்பான சர்ச்சை

பட மூலாதாரம், PENGUIN BOOKS

படக்குறிப்பு, பிரபல வரலாற்று ஆசிரியர் ஆபிரகாம் எராலி எழுதிய ‘தி ஏஜ் ஆஃப் ரோத்’ புத்தகம்தலைநகரை டெல்லியில் இருந்து தௌலதாபாத்திற்கு (மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரி) மாற்ற வேண்டுமென முகமது பின் துக்ளக் எடுத்த முடிவு, மிகவும் சர்ச்சைக்குரிய திட்டம் என்பதைக் கிட்டத்தட்ட அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

சுல்தானின் பார்வையில், இதுவொரு புத்திசாலித்தனமான திட்டமாக இருந்தாலும், அது வெற்றியடையவில்லை. “எந்த ஆலோசனையும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவின் நன்மை, தீமைகள் பரிசீலிக்கப்படவில்லை. ஏனெனில் இது சுல்தானின் தனிப்பட்ட முடிவாக இருந்தது.

தலைநகரை தௌலதாபாத்திற்கு (தேவகிரி) மாற்றியதோடு, டெல்லியின் அனைத்து மக்களும் அவருடன் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அதனால் இந்த முயற்சி தோல்வியடைந்தது” என்று பரானி எழுதுகிறார்.

டெல்லியை சேர்ந்த மக்கள் பலரும் தௌலதாபாத் அல்லது தேவகிரிக்கு செல்ல மறுத்து தங்களது வீடுகளில் ஒளிந்து கொண்டனர்.

இப்னு பதூதாவின் கூற்றுப்படி, “சுல்தான் முழு நகரத்தையும் தேடுமாறு உத்தரவிட்டார். அப்போது, அவரது வீரர்கள் டெல்லியின் தெருக்களில் மாற்றுத் திறனாளி ஒருவரையும், பார்வை மாற்றுத் திறனாளி ஒருவரையும் கண்டனர். அவர்கள் இருவரும் சுல்தானின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.”

“அந்த மாற்றுத்திறனாளியை ஒரு பீரங்கியின் வாயில் கட்டி, அதை வெடிக்கச் செய்து, பார்வை மாற்றுத்திறனாளியை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு செல்லும் 40 நாள் பயணத்தில், இழுத்துச் செல்ல சுல்தான் உத்தரவிட்டார். அந்த நபரின் உடல் சாலையில் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டது. அவரது கால் மட்டுமே தேவகிரியை அடைந்தது” என்றும் அவரது பதிவு கூறுகிறது.

இந்தச் செய்தி பரவியதும், மறைந்திருந்த ஒரு சிலரும்கூட டெல்லியை விட்டு வெளியேறினர். நகரம் முற்றிலும் பேரழிவுக்கு ஆளானது. அவருக்கு அஞ்சிய மக்கள், தங்கள் பொருட்கள் மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்வதற்குக்கூட முயலவில்லை” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீண்டும் டெல்லிக்கு திரும்பும் முடிவு

பட மூலாதாரம், Getty Images

ஆனால் தலைநகரை தேவகிரிக்கு மாற்றும் முடிவு டெல்லியின் அழிவைக் குறித்தது.

“டெல்லி, ஒரு காலத்தில் பாக்தாத் மற்றும் கெய்ரோவுடன் ஒப்பிடப்படும் அளவுக்குச் செழிப்பாக இருந்தது. ஆனால் அந்த நகரம், ஒரு பூனையோ, நாயோகூட வாழ முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டது.

இதனால் பல தலைமுறைகளாக டெல்லியில் வாழ்ந்த மக்கள், மனமுடைந்தனர். தேவகிரிக்கு செல்லும் வழியில், பலர் உயிரிழந்தனர். அங்கே சென்றவர்களாலும், தங்கள் சொந்த நகரத்திற்கு வெளியே வாழும் வலியைத் தாங்க முடியவில்லை” என்று பரானி குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, முகமது பின் துக்ளக் தேவகிரிக்கு வந்த மக்கள் டெல்லிக்கு திரும்ப அனுமதித்தார். டெல்லியில் இருந்து தெற்கை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது போலவே, தேவகிரியில் இருந்து வடக்கை கட்டுப்படுத்த முடியாது என்பதை முகமது பின் துக்ளக் உணர்ந்தார்.

பலர் மகிழ்ச்சியுடன் டெல்லிக்கு திரும்பினர், சிலர் தங்கள் குடும்பங்களுடன் தேவகிரியிலேயே தங்க முடிவு செய்தனர்.

ஆனால் தலைநகரில் இருந்து பலர் டெல்லிக்கு திரும்பினாலும், டெல்லியால் அதன் பழைய மகிமையை மீண்டும் பெற முடியவில்லை என்பதுதான் பல்வேறு நிபுணர்களும் முன்வைக்கும் கருத்து.

நாணயத்தை மாற்றும் முடிவிலும் தோல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயம்டோக்கன் நாணயத்தை அறிமுகப்படுத்தும் முகமது பின் துக்ளக்கின் முடிவு குறித்தும் நிறைய சர்ச்சைகள் எழுந்தன. 14ஆம் நூற்றாண்டில், உலகளவில் வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், சுல்தான், வெள்ளி டாங்கா நாணயங்களுக்கு மாற்றாக செப்பு நாணயங்களை கொண்டு வந்தார்.

டோக்கன் நாணயத்தைப் பயன்படுத்தும் கலையை, முகமது, சீனா மற்றும் இரானிடம் இருந்து கற்றுக்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் சீனா, இரான் பகுதிகளில் இந்த முறை பரவலாகக் காணப்பட்டது.

ஆனால், இந்தக் கொள்கையை வெற்றிகரமாக்க, முகமதுவிடம், நிர்வாகத் திட்டமிடல், பயிற்சி பெற்ற பணியாளர்கள் போன்றவை இல்லாததால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.

“டோக்கன் நாணய திட்டத்தின் விளைவாக, போலி நாணயங்கள் சந்தையில் பரவத் தொடங்கின. மக்கள், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும், அச்சிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், அவற்றின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் நாணயங்களை வழங்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு நபரும் அரசுக்குத் தனது நிலுவைத் தொகையை போலி செப்பு நாணயங்களால் செலுத்தத் தொடங்கினர்” என்று பேராசிரியர் சதீஷ் சந்திரா தனது ‘மத்தியகால இந்தியா (Medieval India)’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

தனது டோக்கன் நாணயத் திட்டம் தோல்வியடைந்ததை சுல்தான் உணர்ந்தபோது, அதன் புழக்கத்தை நிறுத்த முடிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து, செப்பு நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் அவற்றைக் கருவூலத்தில் டெபாசிட் செய்து, அதற்கு ஈடாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெறலாம் என்று அறிவித்தார்.

ஜியாவுதீன் பரானியின் கூற்றுப்படி, “பல செப்பு நாணயங்கள் கருவூலத்தை அடைந்து மலை போலக் குவிந்தன. இந்தத் தோல்வி சுல்தானின் கௌரவத்தை பெரிதும் சேதப்படுத்தியது. அதன் விளைவாக, முகமது பின் துக்ளக், தனது மக்கள் மீது மேலும் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.”

பிரபல வரலாற்று ஆசிரியர் ஈஸ்வரி பிரசாத், தனது “A Short History of Muslim Rule in India” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“அரசின் தேவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சாதாரண மக்களுக்குத் தேவையானது செம்பு நாணயங்கள்தான். மக்களால் டோக்கன் நாணய பரிவர்த்தனைகளின் செயல்முறையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்திய மக்கள், பழமைவாத மனப்பான்மையுடன், மாற்றங்களை ஏற்கத் தயங்குகிறவர்கள். அதிலும், தங்களை ஆட்சி செய்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இல்லாத சூழ்நிலையில், மாற்றம் குறித்த அச்சம் அவர்களிடம் அதிகமாகவே இருந்தது. இதை சுல்தான் கவனிக்கவில்லை.”

டெல்லிக்கு வெளியே மரணம்

பட மூலாதாரம், Getty Images

முகமது பின் துக்ளக் யாரையும் நம்பாத ஆளுமையாக இருந்தார் என்பதை வரலாற்றுத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதனால், கிளர்ச்சிகளை அடக்க, நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தொடர்ந்து பயணம் செய்தார். இதனால், அவரது ராணுவம் மிகவும் சோர்வடையத் தொடங்கியது.

கடந்த 1345ஆம் ஆண்டு, குஜராத்தில் கிளர்ச்சியை அடக்குவதற்காக டெல்லியை விட்டு வெளியேறிய முகமது பின் துக்ளக், அதன்பிறகு, மீண்டும் டெல்லிக்கு திரும்பவில்லை. இந்தப் படையெடுப்பின்போது, சுல்தானின் படையில் பிளேக் தொற்றுநோய் பரவியது.

குஜராத்தில், கிளர்ச்சியாளர் முகமது தாகியை, சுல்தான் தோற்கடித்தார். ஆனால், கிளர்ச்சியாளர்கள் சிந்து நோக்கி ஓடியதால், அவரால் பிடிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில், முகமது பின் துக்ளக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். “அவர் குணமடைந்த பிறகு, தாகியை பின்தொடர்ந்து சிந்துவுக்கு சென்றார். அங்கு சிந்து நதியையும் கடந்தார், ஆனால் இவற்றுக்கு இடையே அவரது காய்ச்சல் மீண்டும் திரும்பியது” என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 20, 1351 அன்று, சட்டாவில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள சிந்து நதிக்கரையில், முகமது பின் துக்ளக் தனது இறுதி மூச்சைவிட்டார்.

“சுல்தானால், தனது மக்களிடம் இருந்து அதிக அன்பையும், மரியாதையையும் பெற முடியவில்லை. மக்களாலும், அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இறுதியில், சுல்தான் மக்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றார். மக்களும் சுல்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்கால வரலாற்று ஆசிரியர் அப்துல் காதிர் படாயுனி.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு