சிவன் மலையில் பட்டியல் சமூக திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, சிவன் மலை பகுதியில் உள்ள மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காங்கேயம் அருகே சிவன் மலையைச் சுற்றியுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள், பட்டியலின மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மையை அறிய வாடிக்கையாளர் போர்வையில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

அப்போது, குறிப்பிட்ட சில திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவது உண்மை என்பதும், இந்தப் புகார் மீதான விசாரணைக்குப் பிறகு, சாதியின் அடிப்படையில் மண்டபம் வழங்க மறுப்பு தெரிவிக்காமல் வேறு காரணங்களைச் சொல்லி மறுப்பதும் தெரிய வந்தது.

இத்தகைய திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இதுகுறித்து காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அந்த புகாரில் பகுதியளவு உண்மை இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், இதுகுறித்து ஆட்சியரிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே, “சாதி அடிப்படையில் யாருக்கேனும் மண்டபம் வழங்க மறுத்தால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதேவேளையில், இனி வரும் நாட்களில் அனைவருக்கும் மண்டபம் தரப்படும் என எழுத்துபூர்வமாக எழுதித் தருவதற்குத் தயாராக இருப்பதாக சிவன்மலை திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, சிவன் மலைதிருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம் அருகே அமைந்திருக்கும் சிவன்மலை என்ற ஊரிலுள்ள மலையின் மீது தமிழக அரசின் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் ஏராளமான திருமணங்கள் இந்த கோவிலில் நடக்கின்றன.

அங்கு திருமணம் செய்வதற்குரிய வழிமுறைகளைப் பொறுத்தவரை, சாதி குறித்த எந்தச் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கோவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிபிசி தமிழிடம் விளக்கினர்.

சிவன்மலையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமாக திருமண மண்டபம் ஏதுமில்லை என்று கூறிய அலுவலர்கள், புதிதாக ஒரு மண்டபம் கட்டப்பட இருப்பதாகவும், ஓர் ஆண்டுக்குள் அது தயாராகி விடுமென்றும் கூறினர்.

தற்போதைய நிலையில், சிவன்மலையில் திருமணம் செய்பவர்கள், சிவன்மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியும் உள்ள 15க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில்தான் உணவு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்கின்றனர்.

அதில் சில மண்டபங்களில், ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், மண்டபத்தை வாடகைக்குக் கேட்டுள்ளனர். ஆனால், மண்டப பொறுப்பாளராக இருப்பவர்கள், ‘பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றதும் மண்டபம் தர இயலாது’ என்று கூறியுள்ளனர்.

அதேபோன்று ஒரு மண்டபத்தின் நிர்வாகியிடம் அலைபேசியில் திருமணத்துக்கு புக்கிங் செய்வது குறித்துப் பேசியபோதும், நிர்வாகி, “பட்டியலின மக்களுக்கு மண்டபம் கிடையாது” என்று மறுத்துள்ளார். பிபிசி தமிழ் சரிபார்த்த அந்த வீடியோ, ஆடியோ பதிவுகளில், மண்டப நிர்வாகிகள், “திட்டவட்டமாக பட்டியலின மக்களுக்கு மண்டபம் தர முடியாது” என மறுப்பது பதிவாகியுள்ளது.

இவற்றை ஆதாரமாக வைத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் புகார் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில், வருவாய்த் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

‘பட்டியலின மக்களுக்கு மண்டபம் தருவதில்லை’

படக்குறிப்பு, வாடிக்கையாளர் போலச் சென்று சில மண்டபங்களில் விசாரித்தபோது, ‘பட்டியலின மக்களுக்குத் தருவதில்லை’ என்று எங்களிடம் மறுப்பு தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பிறகு, அப்பகுதியில் உள்ள உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள மண்டபம் விசாரிக்கச் செல்வது போன்ற பாணியில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

ஆடி மாதம் என்பதால், ஒன்றிரண்டு மண்டபங்கள் தவிர மற்றவை மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த சில மண்டபங்களில், வாடகை, கொள்ளளவு போன்ற விவரங்களை விசாரித்தோம். ஒரு மண்டபத்தில் அனைத்து விவரங்களையும் கேட்ட பிறகு, பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினோம். அதற்கு உடனடியாக, “பட்டியலின மக்களுக்கு மண்டபம் தருவதில்லை” என்று அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அந்த மண்டபத்தில் 3 ஆண்டுகளாகப் பணி புரிவதாகக் கூறிய அவர், “இதுவரை பட்டியலின மக்கள் யாருக்கும் மண்டபம் தரப்பட்டது இல்லை” என்றார். மேற்கொண்டு தகவல் தேவையெனில் உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுமாறு குறிப்பிட்டு, அவரது விவரங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், உரிமையாளர் “அப்படி ஏதும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் மண்டபம் கொடுக்கிறோம். இருப்பினும் குறிப்பிட்ட தேதிகள் ஏற்கெனவே புக் ஆகிவிட்டன,” என்றார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மண்டபத்தின் உரிமையாளரிடமும் இந்த முறையில் விசாரித்தபோது, அவரும் இதே பதிலைக் கூறினார். மற்றொரு மண்டபத்தின் உரிமையாளரான மணி என்பவரும் தனக்கு சாதி பார்த்து மண்டபம் தரும் பழக்கம் இல்லை என்றார்.

இவைபோக, சிவன்மலை பகுதியில் சில சமுதாயங்களுக்குச் சொந்தமான மண்டபங்களும் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்குச் சொந்தமான ஒரு மண்டபத்திலும் விசாரித்தோம்.

அப்போது, அதன் பொறுப்பாளராக இருக்கும் கோவிந்தன், அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு, இறுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பம் என்றதும் “தலைவரிடம் கேட்ட பிறகுதான் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார். அவர் பொறுப்பாளராக இருக்கும் இரு மண்டபங்களிலும் இதே பதில்தான் கிடைத்தது.

சிவன்மலையில் பல ஆண்டுக்காலமாக பூக்கடை நடத்தும் பூபதி, ரைஸ்மில் நடத்தி வரும் கணேசன், பெயர்கூற விரும்பாத கம்மங்கூழ் கடைக்காரர் எனப் பலரிடமும் பிபிசி தமிழ் விசாரித்தது. அவர்களின் கூற்றுப்படி, இந்தப் பகுதியில் பட்டியலின மக்களுக்கு இரண்டு மண்டபங்கள் மட்டுமே தரப்படுகின்றன. ஆனால், அவையும் மூடியிருந்தன.

அதில் ஒன்று, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்டு, திருமண மண்டபத்திற்கான பெயர்ப் பலகையோ, அடிப்படை வசதிகளோ ஏதுமின்றி இருந்தது. மற்றொன்று மிகவும் சிறியதாக இருந்தது. இவை தவிர, பிற மண்டபங்களின் நிலை பற்றி முழுமையாக அறிய இயலவில்லை.

பணத்திற்காக புகார் தெரிவிக்கப்பட்டதா?

படக்குறிப்பு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இதுகுறித்து காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.சிவன்மலையைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத பட்டியலின இளைஞர் ஒருவர், ”இந்த 2 திருமண மண்டபங்கள் தவிர, வேறு எதிலும் பட்டியலின மக்களுக்குத் தரப்படுவதில்லை. அதேபோன்று காங்கேயத்திலும் ஒன்றிரண்டு மண்டபங்கள் தவிர மற்றவை, பட்டியல் சாதியினருக்குத் தரப்படுவதில்லை. அந்த மண்டபங்கள் கிடைக்காவிட்டால் தேதியை மாற்றி வைத்துக் கொள்வோம். அல்லது வீட்டிற்கு முன்பாகப் பந்தல் போட்டு சாப்பாடு பரிமாறிக் கொள்வோம்” என்றார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் சிலருக்கும், இங்கே இருக்கும் மண்டபங்கள் தர மறுக்கப்பட்டதாக சில உதாரணங்களை அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சிவன்மலை கோவிலில் திருமணம் செய்யும் பட்டியலின மக்கள், பெரும்பாலும் மண்டபங்களை வாடகைக்கு எடுக்கும் வசதி இல்லாமல்தான் வீடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஒரு மண்டப உரிமையாளர் தெரிவித்தார். மேலும் அவர், இப்போது சிலர் பணத்திற்காக மண்டப உரிமையாளர்கள் மீது இதுபோன்ற புகாரைத் தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதை மறுக்கும் காங்கேயத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் குழந்தைசாமி, ”பணம் பிரச்னையில்லை. வசதியுள்ள பட்டியலின மக்கள், அரசு அலுவலர்கள் கேட்டாலும் மண்டபம் தருவதில்லை. சிவன்மலை கிராம ஊராட்சி சார்பில் ஒரு திருமண மண்டபம் கட்டி அனைவருக்கும் வாடகைக்குத் தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தோம். அதுவும் ஏற்கப்படவில்லை” என்றார்.

”அறநிலையத்துறை சார்பில் மண்டபம் கட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படுவது போலத் தெரியவில்லை. பட்டியலினத்தவர்க்கு தரப்படும் 2 மண்டபங்களின் நிலை என்ன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

படக்குறிப்பு, புகார் கொடுக்கவே ஊர் மக்கள் அச்சப்படும் நிலை சிவன் மலையில் நிலவுவதாகக் கூறுகிறார் ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் காளிமுத்துஆனால் இந்த புகார் குறித்து இதுவரை மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு எந்தப் புகாரும் வந்தது இல்லை என்கிறார் ஆணையத்தின் உறுப்பினரான செல்வகுமார். அதோடு புகார் வரும்பட்சத்தில் ஆணையத்தின் தலைவரும் நீதியரசருமான தமிழ்வாணன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மனும், “ஆணையத்திற்கு இதுதொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை, வந்தால் விசாரிக்கப்படும்” என்று பதிலளித்தார்.

ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து, ”நாங்கள் தேசிய, மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களுக்கு புகார் அளித்துள்ளோம். இதை வெளிப்படுத்தி, விசாரணையை கோரிய பிறகு, எல்லோருக்கும் மண்டபம் தருவதாகச் சொல்கிறார்கள், எழுதிக் கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் கேட்டபோது தர மறுத்தனர். எங்களுக்கு மறுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிபிசி தமிழிடம் கூறினார்.

குறிப்பிட்ட சில மண்டபங்களின் மீது புகார் கொடுப்பதற்கு, பணம் கேட்டுத் தர மறுத்ததே காரணமென்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காளிமுத்துவிடம் கேட்டபோது, ”பட்டியலின மக்கள் சார்பில் யாராவது புகார் தெரிவித்தால் இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைப்பது வாடிக்கையாகிவிட்டது” என்றார்.

மேலும், “இந்தக் காரணத்தால்தான் அங்குள்ள அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களில் யாருமே பயத்தில் புகார் தெரிவிக்காமல், வெளியூரில் இருந்து நாங்கள் வந்து புகார் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Tirupur District Portal

படக்குறிப்பு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரேபட்டியலின மக்களுக்கு சிவன்மலையில் திருமண மண்டபங்கள் தர மறுப்பது குறித்து, “மக்கள் குறை கேட்புக் குழுவால் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக” திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதுபற்றி கள விசாரணை நடத்தி வரும் காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் மோகனன், ”புகாருக்கு உள்ளான மண்டபங்களின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, அனைத்து சாதியினருக்கும் மண்டபம் வாடகைக்குத் தருவதாகக் கூறியுள்ளனர். அதை எழுத்துபூர்வமாகவும் எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்கு முன்பு இப்படி மறுக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலரிடமும் விசாரித்தபோது, 70 சதவிகித மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மண்டபம் தர மறுப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் விரிவாக விசாரணை நடக்கிறது” என்றார்.

பட்டியலின மக்களுக்கு மண்டபம் வழங்க மறுப்பது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுவதாக வருவாய் வட்டாட்சியர் மோகனன் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதுமட்டுமின்றி, பணம் கேட்டு சிலர் மிரட்டி இத்தகைய புகாரைத் தெரிவித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆகையால் அதையும் விசாரிப்பதாக அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான அறிக்கை வருவாய் கோட்டாட்சியர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும்.

“பொதுவாக ஒரு சமுதாயத்தின் அடிப்படையில், திருமண மண்டபம் மறுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்றும் மோகனன் விளக்கினார்.

இது தொடர்பாக பிபிசி கள ஆய்வில் கிடைத்த தகவல்களைக் குறிப்பிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரேவிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை முன்வைத்தது.

அதற்கு விளக்கமளித்த அவர், தான் பொறுப்பேற்ற பிறகு இத்தகைய புகார் முதல்முறையாக இப்போதுதான் வந்துள்ளது என்றார்.

மேலும், ”வருவாய்த்துறை நடத்திய விசாரணையில், அப்படி நாங்கள் மறுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

சாதி அடிப்படையில் ஒருவரை மண்டபத்துக்குள் அனுமதிக்க மறுத்தால் சம்பந்தப்பட்டவர் மீது காவல் துறையில் புகார் அளித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

மண்டப உரிமையாளர்கள் சங்கம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்சிவன்மலை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், புகாருக்கு உள்ளான மண்டபத்தின் உரிமையாளருமான செல்லமுத்து, இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், “குறிப்பிட்ட சில சமுதாயத்தின் சார்பிலான மண்டபங்களில், அவர்கள் வணங்கும் கடவுள்களின் சிலைகள் கொண்டு வரப்படும் என்பதால் மற்ற சமுதாயத்தினருக்கு மண்டபங்கள் கொடுப்பதில்லை” என்றார்.

மற்ற மண்டபங்கள் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்த செல்லமுத்து, ”மண்டபங்களை சாதி பேதமின்றி அனைவருக்கும் வாடகைக்குக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாடகை அதிகமாக இருப்பதால்தான் பலர் இந்த மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த முன் வருவதில்லை.

ஒரு மண்டபத்தின் புக்கிங் தேதிகள், உரிமையாளருக்கே முழுதாகத் தெரியும். அங்கே வேலை பார்ப்பவர்கள் சொல்வதை வைத்து, ஒட்டுமொத்தமாக உரிமையாளர்கள் மீது புகார் தருவதை ஏற்க முடியாது” என்றார்.

அதோடு, “இத்தகைய புகார்கள் இனி வராமல் இருக்க, புகார் தெரிவித்தவர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களை வைத்து எழுத்துபூர்வமாக சமாதானம் செய்துகொள்ள தயாராக உள்ளோம்,” என்று கூறினார் செல்லமுத்து.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு