இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் எழுதியவர், தினேஷ்குமார் பதவி, கிரிக்கெட் விமர்சகர்23 ஜூலை 2025, 01:38 GMT

புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1952 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான்.

பட மூலாதாரம், Getty Images

ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் ‘லோ ஸ்கோரிங் திரில்லர்’ ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், ‘சைனா மேன்’ சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம்.

ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம்.

ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம்.

ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.

4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images

‘சமர்த்து பையன்கள்’ என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம்.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும்.

முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும்.

பட மூலாதாரம், Getty Images

நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும்.

பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும்.

பட மூலாதாரம், Getty Images

இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம்.

மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு.

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார்.

2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு