வடக்கு , உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பழுது பார்த்தல் மற்றும் புதிதாக பொருத்துதல் தொடர்பில் முதல் கட்டமாக 38 பேருக்கு பயற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22.07.25) நடைபெற்றது.

அக்கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மின்கம்பங்களில் ஏறி மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் திருத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களால் வழங்கப்பட்ட 38 பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்

தொடர்ந்து ஏனையோருக்கு அடுத்த கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த மாதம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் வீதி மின் விளக்கினை பொருத்த முற்பட்ட பணியாளர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.