Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் – நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், PMD SRI LANKA
படக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 49 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர்.
அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை ஏன் அமல்படுத்தினார்?
பட மூலாதாரம், PMD SRI LANKA
உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது.
அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.
இந்த போராட்டம் வலுப்பெற்ற நிலையில், நாட்டில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 09ம் தேதி நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்கள் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
மாலத்தீவு நோக்கி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்து சென்றார்.
பட மூலாதாரம், PMD SRI LANKA
இவ்வாறான பின்னணியில், அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜீலை மாதம் 13ம் தேதி பதில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரசிங்க, 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதனைத் தொடர்ந்து, காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
அப்போது, பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டிருந்தனர்.
அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை அப்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அமல்படுத்திய அவசரகால சட்டம், மனித உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த தீர்ப்பின் ஊடாக ரணிலுக்கு பாதிப்பா?
பட மூலாதாரம், U.R.D.SILVA
படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வாஇந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
”இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.” என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு