செம்மணி மனித புதைகுழியில்  இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.அவற்றில் 67 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளநிலையில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே செம்மணிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் சபைகளில் ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றன. 

செம்மணியில் கொல்லப்பட்ட மக்களுக்கும் கருப்பு யூலையில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி கரவெட்டி பிரதேச சபை அமைவில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.கட்சி பேதங்களை கடந்து அனைத்து உறுப்பினர்களும் செம்மணியில் மரணித்தவர்களிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.