Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாநிலங்களவையை பிற்பகலில் வழிநடத்திய தன்கர் திடீர் ராஜினாமா ஏன்? கடைசியாக என்ன செய்தார்?
பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாள் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். (கோப்புப் படம்)ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து திங்கட்கிழமை மாலையில் விலகினார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிக்கு வந்ததாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கூறுகிறார்கள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், உடனடியாக பதவி விலக விரும்புவதாக ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா செய்வதற்கு முன்பு, ஜெகதீப் தன்கர் வழக்கமான முறையில் மாநிலங்களவை துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பீகாரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் தேர்தல் ஆணையத்தின் ‘தீவிர வாக்காளர் திருத்தம்’ குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதுதொடர்பாக இரு அவைகளிலும் குழப்பம் நிலவியது. ஆனால், மாலைக்குள் அரசியலில் ஒரு புதிய மாற்றம் நிகழும் என பெரும்பாலோனோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
திங்களன்று மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் என்ன செய்தார்?
பட மூலாதாரம், Samir Jana/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, ராஜஸ்தானைச் சேர்ந்த தன்கர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். (கோப்புப் படம்)திங்கட்கிழமை, பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் மழைக்கால கூட்டத்தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில் மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சபையில் தனது நாளைத் தொடங்கினார் ஜெகதீப் தன்கர்.
இதன் பின்னர் மாநிலங்களவையின் புதிய உறுப்பினர்களுக்கும் அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதனையடுத்து, எதிர்க்கட்சிகள் முன்வைத்த 18 ஒத்திவைப்பு தீர்மானங்களை தன்கர் நிராகரித்தார்.
இந்த தீர்மானங்கள் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகாரில் வாக்காளர் பட்டியல் மறுஆய்வு ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் எனக் கூறின.
ஆனால் தன்கர் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்தார்.
இதன் பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சபை மீண்டும் தொடங்கிய போது, எதிர்க்கட்சிகள் சார்பில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து அவையில் பேசிய தன்கர், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
பத்திரிகை தகவல் பணியகம் என்ன சொன்னது?
நீதிபதி யஷ்வந்த் வர்மா புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பெரும் தொகையை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
மார்ச் 14-ஆம் தேதி அவரது வீட்டின் ஒரு சேமிப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது, அங்கு அவரது வீட்டிலிருந்து பெரும் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். தற்போது, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.
மாநிலங்களவையைப் போலவே, மக்களவையிலும் நீதிபதி வர்மாவுக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் ஆளும் கூட்டணியால் மக்களவையில் கொண்டு வரப்பட்டது.
தன்கர் சபையின் அலுவல் ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.
பிற்பகல் 3:53 மணிக்கு, பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது, அதில் ஜெகதீப் தன்கர் புதன்கிழமை ஒரு நாள் ஜெய்ப்பூருக்கு வருகை தருவார் என்று கூறப்பட்டது.
“இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 2025ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி ஒரு நாள் பயணமாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர் ஜெய்ப்பூரில் உள்ள ராம்பா அரண்மனையில் ராஜஸ்தானின் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் (CREDAI) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகியது எப்போது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தன்கர் பதவி விலகலுக்கான உண்மையான காரணம் வேறு ஏதாவது இருக்கலாம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.ஆனால் பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், ” குடியரசுத் தலைவர் அவர்களே, உடல் நலனுக்கு முன்னுரிமை அளித்து மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவதற்காக, அரசியலமைப்பின் 67(a) பிரிவின் கீழ் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவியை இதன்மூலம் நான் ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தனது கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமைச்சரவைக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார் ஜெகதீப் தன்கர்.
ராஜினாமாவுக்குப் பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், 5 மணி வரை அவருடன் இருந்ததாக எழுதினார்.
” குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் திடீர் பதவி விலகல் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் இருந்தேன், பல எம்.பி.க்களும் அங்கு இருந்தனர், மேலும் இரவு 7:30 மணிக்கு நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன்” என திங்கட்கிழமை அன்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் கூறியிருந்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஜூலை 10 அறிக்கையும் எய்ம்ஸில் சிகிச்சையும்
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜெகதீப் தன்கரின் ஜூலை 10 தேதியிட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “கடவுள் ஆசீர்வதித்தால், 2027-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரை முழு பதவிக்காலமும் பதவியில் தொடர்வேன்” என்று தன்கர் கூறியிருந்தார்.
பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து ஊகங்கள் பல இருந்தாலும், தன்கர் தனது கடிதத்தில் உடல்நலனை காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’ என்று ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவுக்கு நன்றி தெரிவித்த அவர், பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒத்துழைப்புக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.
மார்ச் மாதம் டெல்லி எய்ம்ஸில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்ட ஜெகதீப் தன்கர், சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதன் பிறகும் அவர் நாடாளுமன்றத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு