முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை மீட்பதற்காக நாளைய தினம் வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாக உள்ளது. 

அதனை முன்னிட்டு நாளைய தினம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தும் செயற்பாட்டோடு ஆவணப்படம் ஒன்றும் வெளியீடு செய்யப்படவிருக்கிறது.

அத்துடன், சிறைக்குள் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கைதியின் விடுதலை தொடர்பாக பல விடயங்கள் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கிய ஆவண நூல் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

எனவே கிட்டு பூங்காவிற்கு வருகின்றனமாணவர்கள் கண்காட்சி கூடத்தை இரண்டு நாளும் பார்வையிட முடியும். நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் ஆற்றுகை அரங்க நிகழ்வுகளும் இடம்பெற இருக்கிறது.

இந்தவிடத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து தமிழர்களுடைய விடுதலையை நெஞ்சில் நிறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெற வேண்டும் என்று ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு  நீரினை கொண்டு வந்து எங்களுடைய பொதுவான பானைகளில் விடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற உறவுகளை மீட்பதற்கான செய்கருமத்திற்காக ஒன்றிணைந்து அனைவரும் குரல் கொடுத்து மிகுதியாக இருக்கின்ற உறவுகளை சிறை மீட்பதற்கு உங்களுடைய பூரண ஆதரவை ஒத்துழைப்பையும் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்ந்து விடுதலை விருட்சம் செயற்பாடு மூன்று மாதங்களுக்கு இடம்பெறும். 

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டத்திலும் ஒரு விருட்சம் நடப்படவுள்ளது. அதற்கான விடுதலை நீர் உலகம் முழுவதும் சேகரிக்கும் செயற்பாடு ஆரம்பித்து இருக்கிறது. 

விடுதலையை நேசிக்கின்ற விடுதலையை விரும்புகின்ற மனிதாபிமானம் கொண்ட அனைவரும் இதில் பங்கு கொள்ள முடியும். 

தமிழர் தாயகத்தை நேசிக்கின்ற தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு இலங்கைக்கு விஜயம் செய்கின்ற பொழுது உங்களுடைய வீடுகளில் தற்காலிகமாக வசிக்கின்ற நாடுகளில் இருந்து இந்த விடுதலை நீரை கொண்டு வந்து 27 புதுமை மாதா கோயில் கிழக்கு வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலும் நல்லூர் திருவிழா காலத்தில் சிவகுரு ஆதீன வளாகத்துடன் எமது கொட்டகை அமைக்கப்படவுள்ளது. அதிலும் அந்த நீரை தந்து குறித்த செயற்பாட்டை வலுப்படுத்தி பூரண ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்.

எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் பெரிய நிதி வளங்களைக் கொண்ட அமைப்பல்ல. எந்த நிதியையும் நாம் இதுவரை கையாளவில்லை. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொதுமக்களிடமிருந்து பொதுவாக உண்டியல் குலுக்கல் மூலம் தான் நிதியைப் பெறுகிறோம். எனவே விடுதலைக்கான இந்த பயணத்தில் எங்களுடைய செயற்பாட்டுக்கு உங்கள் பூரண ஆதரவையும் நிதிப் பங்களிப்பையும் செய்யும்படியும் கோருகிறோம்.  

இரண்டு நாள் போராட்ட களத்தில் நேரடியாக நிதியை வழங்கி பங்களிக்க முடியும் – என்றார்