சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி,மிதிவெடி அகற்றும் குழுவின் ஆலோசனைகளுடன்  அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இப்பகுதியில் முன்னர் மயானம் ஏதும் இருந்ததா?  என்பது பற்றி தொல்பொருள் திணைக்களம் அறிக்கையை முன்வைக்க வேண்டும் அவ் அறிக்கைகளின் படி அகழ்வு பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என                                                                                                                    மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பெளசான்,  இன்றுபுதன்கிழமை (23.7.25)) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 19 ந் திகதி மிதி வெடி அகற்றும் குழுவினர் இப்பகுதியில் அகழ்வு செய்த போது மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இதனை அடுத்து மூதூர் பதில் நீதிவானின் உத்தரவை அடுத்து அகழ்வுப் பணிகள், 22 செவ்வாய்க்கிழமை  வரை இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில்  மூதூர் நீதிவானின் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி,காவற்துறை  தடயவியல் பிரிவினர்,அரச பகுப்பாய்வு அலுவலர்கள்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியக அலுவலர்கள்,காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராஜ் ரஹீம் ஆகியோர் முன்னிலையில் கள ஆய்வுகள், புதன்கிழமை (23) நடைபெற்றன.