தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்துள்ளார் 

ஊடகங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், 

இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியளிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஸ்டிக்கின்றது. 

கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். 

தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்கள்ளாகவும் கொன்றழித்தனர். 

ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன. அழிக்கப்பட்டன.

 இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன.

இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்திமூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. 

ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. 

இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். 

இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.