“ஏர் இந்தியா விமான விபத்துக்கான சாத்தியமான 3 காரணங்கள்” – காக்பிட் குரல் பதிவுகளால் குழப்பம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜூன் மாதம் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டபோது, விபத்து தொடர்பான கேள்விகளில் சிலவற்றுக்கு ஒரு முடிவு கிடைக்கும் எனப் பலரும் நம்பினர்.

ஆனால், அந்த 15 பக்க அறிக்கை மேலும் அதிகமான ஊகங்களை கிளப்பியுள்ளது. அந்த அறிக்கை கவனமான தொனியில் அமைந்திருந்தாலும், ஒரு தகவல் மட்டும் தான் புலனாய்வாளர்கள், விமான வல்லுநர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரையும் ஒருசேர உறுத்திக் கொண்டிருக்கிறது.

12 ஆண்டுகள் பழமையான அந்த போயிங் விமானம் புறப்பட்ட சில வினாடிகளுக்குப் பிறகு, அதன் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு நகர்ந்து, என்ஜின்களுக்கு எரிபொருளைக் குறைத்து மொத்த மின் இழப்பை ஏற்படுத்தின – இது பொதுவாக தரையிறங்கிய பிறகு மட்டுமே செய்யப்படும் ஒரு நடவடிக்கையாகும்.

காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் “ஏன் ‘கட்-ஆஃப்’ செய்தீர்கள்?” என்று கேட்பது பதிவாகியுள்ளது. அதற்கு அந்த நபர் “நான் செய்யவில்லை” என்று பதிலளிக்கிறார். இரு விமானிகளில் யார் என்ன சொன்னார்கள் என்பதை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. புறப்படும் நேரத்தில், கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, துணை விமானி விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

விமானத்தில் உள்ள சுவிட்சுகள் அவற்றின் இயல்பான நிலைக்கு திரும்ப தானாக என்ஜின் தூண்டப்பட்டது. விபத்து நிகழ்ந்தபோது, ஒரு என்ஜின் மீண்டும் சக்தியை பெறத் தொடங்கியிருந்தது, மற்றொன்று மீண்டும் இயங்கத் தொடங்கியிருந்தாலும் முழுமையான சக்தியை அப்போது பெறவில்லை. விமானம் ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரமே பறந்த பிறகு, ஆமதாபாத் நகரத்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதற்கட்ட விசாரணை அறிக்கைக்கு வெளியிடப்பட்டதிலிருந்து பல ஊகக் கோட்பாடுகள் வெளிவந்துள்ளன.முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து பல ஊகக் கோட்பாடுகள் வெளிவந்துள்ளன – ஒரு வருடத்தில் முழு அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கடந்த மாத ஏர் இந்தியா விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள புதிய விவரங்கள், காக்பிட்டில் இருந்த மூத்த விமானியின் மீது கவனத்தைத் திருப்புகின்றன” என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலிய செய்தித்தாளான கோரியர் டெல்லா செரா, முதல் அதிகாரி கேப்டனிடம் ‘ஏன் இயந்திரங்களை நிறுத்தினார்’ என்று பலமுறை கேட்டதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

அந்த விமானத்தின் கேப்டனாக 56 வயதான சுமீத் சபர்வால் இருந்தார். அதே நேரத்தில் விமானத்தை இயக்கிய துணை விமானியாக 32 வயதான கிளைவ் குந்தர் இருந்தார். இரண்டு விமானிகளும் கூட்டாக 19,000 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தை இயக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தனர் – அதில் கிட்டத்தட்ட பாதி போயிங் 787 விமானத்தில் பெற்றிருந்தனர். விபத்துக்கு முன்னர் இருவரும் விமானத்திற்கு முந்தைய அனைத்து மருத்துவ சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

புதிதாக வெளிவந்த ஊகங்களின் அடிப்படையிலான தகவல் கசிவுகள், விசாரணை அதிகாரிகளை குழப்பி, இந்திய விமானிகளை கோபமடையச் செய்துள்ளது.

கடந்த வாரம், இந்த விபத்தின் முதன்மை விசாரணை அமைப்பான விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB – ஏஏஐபி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சில பன்னாட்டு ஊடகங்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை கொண்டு வர தொடர்ந்து முயல்கின்றன” எனத் தெரிவித்தது. விசாரணை இன்னும் தொடரும் நிலையில் இது போன்ற செயல்கள் மிகவும் பொறுப்பற்றவை எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத் (NTSB-என்டிஎஸ்பி) தலைவரும் இந்த விசாரணையில் உதவி வழங்கும் அமைப்பின் பிரதிநிதியுமான ஜெனிபர் ஹோமெண்டி, ஊடகங்களில் வரும் செய்திகள் “முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலானது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், இந்த அளவிலான விசாரணைக்கு நேரம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், இந்திய வணிக விமானிகள் சங்கம், “முந்திக் கொண்டு விமான குழுவை குறை கூறுவதை ‘மோசமானது மற்றும் உணர்வுகளை அவமதிப்பது'”எனக் கண்டித்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கை வெளியாகும் வரை அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்திய விமானிகள் சங்கத்தின் (ALPA India) தலைவர் சாம் தோமஸ், பிபிசியுடன் பேசும் போது, “தெளிவாக உள்ள தகவல்களை விட ஊகங்கள் மேலோங்கியுள்ளன” என்று கூறினார். மேலும், விமானத்தின் பராமரிப்பு வரலாறு மற்றும் தொடர்புடைய காக்பிட் ஒலிப்பதிவு தரவுடன் விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சர்ச்சையின் மையத்தில் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுருக்கமான காக்பிட் பதிவு உள்ளது – இறுதி அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் முழு எழுத்துப்பதிவு (Transcript), உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு விமான விபத்து விசாரணை நிபுணர், பெயரைக் குறிப்பிட விரும்பாமல் பேசுகையில், “அறிக்கையில் உள்ள உரையாடலின் பகுதி பல்வேறு சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது” எனத் தெரிவித்தார்.

உதாரணமாக, “பைலட் ‘பி’ தான் அந்த ஸ்விட்சுகளை இயக்கியவராக இருந்து அதனை அறியாமலோ அல்லது கவனக்குறைவாலோ செய்திருந்தால் – பிறகு அவர் அதை தான் செய்யவில்லை என மறுப்பது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்,” என்று கூறுகிறார்.

“ஆனால் பைலட் ‘ஏ’ தான் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் சுவிட்சுகளை இயக்கியிருந்தால், காக்பிட் குரல் பதிவு கருவி ஆய்வு செய்யப்படும் என்பதை நன்கறிந்தவாறே அவர் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம்; இது கவனத்தை திருப்பி, தன்னை பொறுப்பாளியாக அடையாளம் காண்பதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அமைந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

“இறுதியில் ஏஏஐபி (AAIB) யார் என்ன சொன்னார்கள் என்பதை நிறுவ முடிந்தாலும்கூட, அதனால் ‘இருவரில் எந்த பைலட் எரிபொருளை அணைத்தார்?’ என்ற கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்காது,” என்று அவர் கூறினார்.

“அந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரியாமலே போகலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் சுவிட்சுகள் கையால் நிறுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தெரிந்தாலும், “முன்முடிவுகள் இல்லாமல் அணுகுவது” முக்கியமானது என விசாரணை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

என்ஜினின் ஆரோக்கியம் மற்றும் ஃபெர்பாமன்ஸை கண்காணிக்கும் விமானத்தின் முழு அதிகார டிஜிட்டல் எஞ்சின் கட்டுப்பாடு (FADEC) அமைப்பில் ஏற்படும் ஒரு கோளாறு, கோட்பாட்டளவில் சென்சார்களிலிருந்து தவறான சிக்னல்களைப் பெறுவது, தானாகவே எஞ்சின் நிறுத்தப்படுவதை தூண்டக்கூடும் என்று சில விமானிகள் பரிந்துரைக்கின்றனர்.

எனினும் விமானி எழுப்பிய “நீ ஏன் (எரிபொருளை) நிறுத்தினாய்?” என்கிற கேள்வி – அந்த ஸ்விட்சுகள் கட் ஆப் நிலைக்கு சென்ற பிறகே வந்திருந்தால் (முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது), அது அந்தக் கோட்பாட்டை பலவீனப்படுத்தும்.

இதனைத் தெளிவுபடுத்த இறுதி அறிக்கையில் நேர முத்திரையுடன் கூடிய உரையாடலும், எஞ்சின் தரவின் விரிவான பகுப்பாய்வும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் என்ன சொன்னார்கள் என்பதைக் காட்டிலும், என்ன சொல்லப்படவில்லை என்பதால்தான் ஊகங்கள் அதிகமாக எழுப்பப்படுகின்றன.

முதல்கட்ட அறிக்கையில், காக்பிட் குரல் பதிவின் (CVR) முழுமையான எழுத்துப்பதிப்பை வெளியிடாமல் இறுதி தருணத்தில் பேசப்பட்ட முக்கியமான, ஒற்றை வரி மட்டும் வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது: உரையாடியவர்களின் அடையாளங்களை விசாரணை குழு நிச்சயமாகக் கண்டறிந்துவிட்டதா, ஆனால் உணர்வுப்பூர்வ காரணங்களால் மீதியை வெளியிடாமல் வைத்ததா? அல்லது அவர்கள் கேட்ட குரல்கள் யாருடையவை என்பதில் இன்னும் உறுதியாக இல்லையா? முடிவுகளை வெளியிடுவதற்கு முன் முழுமையாக விசாரிக்க மேலும் நேரம் தேவைப்படுகிறதா? போன்றவை இதில் முக்கியமான கேள்விகளாக உள்ளன.

முன்னாள் என்டிஎஸ்பி மேலாண்மை இயக்குநராக இருந்த பீட்டர் கோல்ஸ், பைலட் குரல்கள் அடையாளம் காணப்பட்டு, காக்பிட் குரல் பதிவின் எழுத்துப்பதிப்பை ஏஏஐபி வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

“எந்தவொரு கோளாறும் புறப்படத் தயாராகத் துவங்கும்போது தொடங்கியிருந்தால், அது ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) இல் பதிவு செய்யப்பட்டு இருக்கும் மற்றும் அது விமான மேலாண்மை அமைப்பில் எச்சரிக்கைகளைத் தூண்டியிருக்கும். அந்த எச்சரிக்கைகளை குழுவினர் நிச்சயமாக கவனித்திருப்பார்கள், முக்கியமாக அதைப் பற்றி விவாதித்திருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

விசாரணை அதிகாரிகள், விபத்து தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் சுவிட்சுகள் நிறுத்தப்பட்டன என அனுமானிப்பது எளிது. அது விமானியின் தவறு, தற்கொலை அல்லது வேறெதாவது உள்நோக்கம் கொண்ட செயலை குறிப்பிடுவது ஆகும். ஆனால் நம்மிடம் உள்ள மிகக் குறைவான தகவல்களை வைத்து அத்தகைய முடிவுக்கு வருவது, மிகவும் ஆபத்தான போக்கு ஆகும்,” என்று ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் விமான வல்லுநரும் முன்னாள் விமான விபத்து விசாரணை அதிகாரியுமான ஷான் புருஷ்னிக்கி பிபிசியிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மாற்றுக் கோட்பாடுகள் தொடர்ந்து பரவி வருகின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்கள், வால் பகுதியில் ஒரு சாத்தியமான மின் தீ விபத்தின் மீது முக்கியமாக கவனம் செலுத்துகின்றன. ஆனால் இரு எரிபொருள் சுவிட்சுகளும் “கட்-ஆஃப்” நிலைக்குச் சென்றதாலே என்ஜின்கள் நிறுத்தப்பட்டன என முதல்கட்ட அறிக்கை தெளிவாக கூறுகிறது, இது ரெக்கார்டர் தரவாலும் உறுதி செய்யப்படுகிறது. வாலில் தீப்பற்றியிருந்தால், அது விபத்துக்குப் பின் ஏற்பட்ட எரிபொருள் கசிவு அல்லது சேதமடைந்த பேட்டரிகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என ஒரு சுயாதீன விசாரணையாளர் கூறுகிறார்.

கடந்த வாரம், ஏஏஐபி தலைவர் ஜி.வி.ஜி. யுகந்தர், முதல்கட்ட அறிக்கை, என்ன நடந்தது என்பது பற்றிய தகவலை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.

“தெளிவான முடிவுகளைக் கூறுவது தற்போது மிகவும் அவசரமான நடவடிக்கை” என்று அவர் தெரிவித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை வலியுறுத்திய அவர் இறுதி அறிக்கையில் “அடிப்படை காரணங்கள் மற்றும் பரிந்துரைகள்” இடம்பெறும் என்றும் தெரிவித்தார். மேலும், “தொழில்நுட்பம் அல்லது பொதுநலன் சார்ந்த விஷயங்களில்” தேவைகள் எழுகிறபோது தகவல்களைப் பகிர்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த விசாரணை இரண்டு சாத்தியங்களை நோக்கி தான் நகரும் எனக் கூறுகிறார் புருஷ்னிக்கி. ஒன்று திட்டமிட்ட செயல் அல்லது குழப்பம், அல்லது தானியங்கி அமைப்பு (automation) சார்ந்த பிரச்னை என இதில் ஒன்றாகத் தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த அறிக்கை மனிதத் தவறு அல்லது திட்டமிட்ட செயல் என விரைந்து குற்றம் சாட்டவில்லை. அது திட்டமிட்டு செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை,” என்று தெரிவித்தார்.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், எப்போதும் முழுமையாகக் கிடைக்காத அசௌகரியமான பதிலுக்கான காத்திருப்பாகத் தான் இருக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு