எம்ஆர்ஐ ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி? – மருத்துவர்களின் ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால், எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு.

எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும்போது, அந்த குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார்.

எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது என்றே பெரும்பாலான மருத்துவ அமைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இதனை பரிந்துரைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன? எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு வலியில்லா செயல்முறையாகும்.எம்ஆர்ஐ (Magnetic Resonance Imaging) என்பது உடலின் உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மருத்துவ தொழில்நுட்பம் ஆகும்.

எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மூளை மற்றும் முதுகுத் தண்டுஎலும்புகள் மற்றும் மூட்டுகள்மார்பகங்கள்இதயம் மற்றும் ரத்த நாளங்கள்கல்லீரல், கருப்பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற உள்ளுறுப்புகள் என உடலின் பல்வேறு பகுதிகளை பரிசோதிக்க எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுகிறது.இந்த ஸ்கேனின் முடிவுகள் உடலின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சைகளைத் திட்டமிடவும், முந்தைய சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை மதிப்பிடவும் உதவும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரையின்படி, எம்ஆர்ஐ ஸ்கேனர் கருவி என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட, இரு முனைகளிலும் திறந்திருக்கும் ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட ஒரு தட்டையான படுக்கையில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தலை அல்லது கால் முதலில் என ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.

சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உடல் பகுதியின் மேல், அதாவது தலை அல்லது மார்பு போன்றவற்றின் மேல் ஒரு ஃபிரேம் வைக்கப்படலாம். இந்த ஃபிரேம்-இல் ஸ்கேன் செய்யும்போது உங்கள் உடலால் அனுப்பப்படும் சிக்னல்களைப் பெறுவதற்கான ரிசீவர்கள் இருக்கும். சிறந்த, தரமான எம்ஆர்ஐ படத்தை உருவாக்க இது உதவும்.

ஸ்கேன் செய்யப்படும் பகுதியின் அளவு மற்றும் எத்தனை படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்கேன் 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதுவொரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது முடிந்தவரை அசையாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை.எம்ஆர்ஐ ஸ்கேனரை இயக்க ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கேனரால் உருவாக்கப்படும் காந்தப்புலத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்தக் கணினியை இயக்குவார்.

“ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களையும், எம்ஆர்ஐ தொடர்பான விதிகளையும் முறையாக பின்பற்றினால் எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு சிறந்த மருத்துவ தொழில்நுட்பமாகும்,” என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார்.

“எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்க அனுமதிக்கப்படலாம். குழந்தைகள் என்றால், பெற்றோர்களில் ஒருவர் குழந்தையுடன் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் நோயாளிக்கான அனைத்து விதிகளும் பொருந்தும்” என்கிறார் அவர்.

எம்ஆர்ஐ அறைக்குள் நுழைவதற்கு முன், உங்களிடம் பல்வேறு கேள்விகள், ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் படிவத்தைப் பயன்படுத்தி கேட்கப்படும். உங்கள் உடலில் ‘பேஸ்மேக்கர்’ போன்ற கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அந்த படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறைக்கு முன் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் போன்றவற்றை நிச்சயம் அகற்ற வேண்டும்.அடுத்து, உங்களிடமுள்ள அனைத்து உலோகப் பொருட்களையும், உலோக நகைகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்படும். உங்களுடன் எம்ஆர்ஐ அறையில் இருக்கப்போகும் நபரும் அனைத்து விதமான உலோகப் பொருட்களையும் அகற்றிவிட வேண்டும், ஸ்கிரீனிங் படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

“காரணம், எம்ஆர்ஐ கருவி சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் உடலில் உலோகம் இருந்து, அது காந்தத்தால் ஈர்க்கப்பட்டால், பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும். எனவே, உடலில் ஏதேனும் உலோகம் அல்லது மின்னனுக் கருவிகள் இருந்தால் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.” என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

பர்ஸ், பணப்பை, கிரெடிட் கார்டுகள், காந்தப் பட்டைகள் கொண்ட அட்டைகள்செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள்காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள்உலோக நகைகள் மற்றும் கடிகாரங்கள்பேனாக்கள், சாவிகள், நாணயங்கள்ஹேர்பின்கள், ஹேர் கிளிப்புகள் மற்றும் சில ஹேர் ஆயின்மென்ட்கள்ஷூக்கள், பெல்ட் கொக்கிகள், பாதுகாப்பு பின்கள்உலோகப் பொருள் கொண்ட எந்தவொரு ஆடை போன்ற வெளிப்புற பொருட்களை எம்ஆர்ஐ அறைக்கு நிச்சயம் கொண்டு செல்லக்கூடாது என ‘ரேடியாலஜிஇன்ஃபோ’ இணையதளம் எச்சரிக்கிறது.”சுத்தத் தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது, ஆனால் தங்க நகைகள் உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் உடலுக்கு ஆபத்து என்பதோடு மட்டுமல்லாது உலோகப் பொருட்கள் எம்ஆர்ஐ படங்களை சிதைத்துவிடும்.” எனக் கூறுகிறார்.

பொதுவாக, எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு முன், மருத்துவமனை நிர்வாகத்தால் ‘மெட்டல் டிடக்டர்’ போன்ற சாதனம் கொண்டு ஒருவர் சோதிக்கப்படுவார் என்கிறார் விஸ்வநாத்.

உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள் குறித்த எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் இப்போது நவீன தொழில்நுட்பம் கொண்டு எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன'”ஒருவரின் உடலுக்குள் இருக்கும் உலோக அல்லது மின்னணு கருவி (இம்பிளான்ட்), எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாது (MRI Compatible) என சான்று பெற்றது என்றால் அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதில் பிரச்னையில்லை” என்கிறார் விஸ்வநாத்.

இத்தகைய இம்பிளான்ட் சாதனங்கள் அல்லது உடலுக்குள் இருக்கும் உலோகங்களுக்கு உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது அமெரிக்காவின் ‘மாயோ கிளினிக்’ மருத்துவ அமைப்பு.

பேஸ்மேக்கர்- ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மின் சாதனம்.செயற்கை இதய வால்வுகள்.இதய டிஃபிபிரிலேட்டர்.மருந்து உட்செலுத்துதல் பம்புகள்.நரம்பு தூண்டுதலுக்கான கருவிகள்.உலோக கிளிப்புகள்.அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் உலோக பின், ஸ்க்ரூ, பிளேட், ஸ்டென்ட் அல்லது ஸ்டேபிள்ஸ்.கோக்லியர் இம்பிளான்ட்ஸ் (காது கேளாமை போன்ற பிரச்னைக்கு)தோட்டா அல்லது வேறு எந்த வகையான உலோகத் துண்டு.கருப்பையக சாதனம்.தொடர்ந்து பேசிய மருத்துவர் விஸ்வநாத். “கர்ப்பிணிப் பெண்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் காந்தப் புலன்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால், சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதால் பாதுகாப்பானது தான்” என்கிறார்.

பிற சவால்கள் என்ன?

படக்குறிப்பு, கிளாஸ்ட்ரோஃபோபியா உடையவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.ஆனால், கிளாஸ்ட்ரோஃபோபியா எனப்படும் குறுகிய அல்லது மூடப்பட்ட இடங்களில் தனியாக இருப்பது தொடர்பான அச்சம் கொண்டவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்றும் விஸ்வநாத் குறிப்பிடுகிறார்.

“எம்ஆர்ஐ செயல்முறை பெரும்பாலும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாஸ்ட்ரோஃபோபியா கொண்டவர்களுக்கு அப்படியே அசையாமல் படுத்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தணிக்க அவர்களுடன் உறவினர் அல்லது நண்பர் இருக்கலாம்” என்கிறார் அவர்.

ஸ்கேனர் கருவிக்குள் கால்கள் முதலில் செல்வது பதற்றத்தைக் குறைக்க உதவலாம், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சில எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனப்படும் பொருளும் ஒருவரது உடலுக்குள் செலுத்தப்படும். இது உடலின் சில திசுக்கள் மற்றும் ரத்த நாளங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் காண்பிக்கும்.

சில நேரங்களில் இந்த கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள்,

காய்ச்சல், சோர்வுதோல் வெடிப்புதலைவலிதலைச்சுற்றல்,போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

அதேநேரம், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் திசு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ‘கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்’ குறித்து மருத்துவரிடம் முன்பே கலந்தாலோசிப்பது சிறந்தது என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.

“எம்ஆர்ஐ ஸ்கேன்களின்போது பயன்படுத்தப்படும் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகும். அதைக் குறித்து அச்சம், பதற்றம் கொள்ள தேவையில்லை” என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு