மாணவர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்த பிளஸ் டூ மாணவர் – அதிகரிக்கும் வன்முறைக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Ravi

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோர், உறவினர்கள் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ்50 நிமிடங்களுக்கு முன்னர்

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]

ஈரோட்டில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் சக பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சக மாணவியிடம் பேசிப்பழகுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இச்சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக, பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள மாணவர்களிடம் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களும், வன்முறையைக் கையாள்வதில் தவறான வழிகாட்டுதல்களுமே இதற்குக் காரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இத்தகைய இளம்பருவத்திலுள்ள மாணவர்களை சரியான முறையில் வழிநடத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் பெரும் பங்கிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்தவர் சிவா (வயது 45). துணி நிறுவனத் தொழிலாளி. இவருடைய மகன் ஆதித்யா (வயது 17). குமலன்குட்டையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 2 ஆம் தேதியன்று மாலையில், பள்ளிக்கு அருகில் ஆதித்யா மயங்கிக் கிடந்ததாகவும், பல்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் சிவாவுக்கு போன் வந்துள்ளது. அங்கு அவர் சென்றபோது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளார் ஆதித்யா. மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஆதித்யா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாணவன் ஆதித்யாவின் மரணம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், “அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வேறு பிரிவு மாணவிகளுடன் ஆதித்யா பேசுவது தொடர்பாக அவருக்கும், அந்த பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் நடந்துள்ளது. அப்போது மாணவர்கள் தாக்கியதில் ஆதித்யா கீழே விழுந்து மயங்கியுள்ளார். அவருடன் இருந்த நண்பர்கள், அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் நாடித்துடிப்பு மிகவும் குறைந்து மரணமடைந்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மாணவர் ஆதித்யாவைத் தாக்கியதாக பிளஸ் 2 மாணவர்கள் இருவர் மீது, கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளில் (BNS 296(b) & 103) ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதல் போக்கு வன்முறையாக மாறுவதில் போதையின் பங்கு மிக அதிகமென்று உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.வீரப்பன்சத்திரத்திலுள்ள ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார் தெரிவித்த தகவலின்படி, “ஆதித்யாவும், சக மாணவர் ஒருவரும் அன்று பள்ளிக்கே வராமல் மாற்று உடையணிந்து வெளியில் சுற்றியுள்ளனர். அன்று மாலையில் பள்ளிக்கு அருகில் வந்தபோது, இவ்விரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கொலையில் முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி காட்சியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஆதித்யாவும், அந்த மாணவர்களும் கைகலப்பில் ஈடுபட்டதும், பலரும் சேர்ந்து அவரை சந்துக்குள் தள்ளிச்செல்வதும் தெரிகிறது.” என்றனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன், ”ஆதித்யாவை ஆயுதத்தால் யாரும் தாக்கவில்லை. கையால் அடித்ததில் கன்னத்தில் மட்டுமே ஒரே ஒரு காயம் இருந்தது. மாணவர்கள் தாக்கியதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கீழே விழுந்ததும் மயங்கிவிட்டார். பல்ஸ் மிகவும் குறைந்துள்ளது. அவருக்கு உடலில் வேறு ஏதேனும் பாதிப்பு இருந்ததா என்பதும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் தெரியும். மாணவர்கள் பலர் இருந்தாலும் இருவர் மட்டுமே தாக்கியதால் அவர்களை கைது செய்தோம்.” என்றார்.

இந்த மாணவர்களுக்கு இடையில் சாதி ரீதியாகவோ, வேறு விதமாகவோ எந்த மோதலும் இல்லை என்று கூறிய துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன், முதற்கட்ட விசாரணையில் இவர்களுக்கு இடையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மோதல் இருந்தது தெரியவந்துள்ளது, மாணவிகளிடம் பேசியதில் ஏற்பட்ட பிரச்னை மட்டும்தான் காரணமா என்பது விசாரணையில்தான் தெரியவரும் என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய ஆதித்யாவின் தந்தை சிவா, ”வழக்கமாக எனது பைக்கில் கொண்டு போய் பள்ளியில் விடுவேன். அன்று அவனே புறப்பட்டுச் சென்றான். மாலையில் அவன் மயங்கிக் கிடப்பதாகத் தகவல் தெரிந்து நாங்கள் மருத்துவமனைக்கு போவதற்குள் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிட்டனர். சீருடையுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவன் சீருடை இல்லாமல் மாற்று உடையில் இருந்தான். அவன் இறந்தபின்பே, அன்று பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். காலையிலேயே தெரிந்திருந்தால் நாங்கள் தேடியிருந்திருப்போம்.” என்றார்.

பட மூலாதாரம், Ravi

முன்பு கருங்கல்பாளையத்தில் குடியிருந்த தங்களின் குடும்பம், குமலன்குட்டை பள்ளியில் தரமான கல்வி கிடைப்பதாக அறிந்து, அதற்காகவே 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு குடிபெயர்ந்து வந்ததாகத் தெரிவித்தார். கடந்த 9 ஆம் வகுப்பிலிருந்து 3 ஆண்டுகளாக அங்கு ஆதித்யா படித்துள்ளார். இவருக்காகவே தங்களுடைய மகளையும் அந்தப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்ததாகவும் சிவா தெரிவித்தார்.

”எனது மகன் படிக்கும் பள்ளியில் வேறு சில குரூப்களில் படிக்கும் மாணவர்கள், அவர்கள் வகுப்பு மாணவிகளிடம் பேசக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறினான். நான் வகுப்பாசிரியரிடம் சொல்லச் சொல்லி சமாதானப்படுத்தினேன். அதன்பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இப்போது எனது மகன் இறந்தபின் போதையில் இருந்தான் என்று பொய் சொல்கின்றனர். எனது மகனுக்கு அதுபோன்று எந்தப் பழக்கமும் கிடையாது. அவனை மோசமாகத் தாக்கியதில்தான் அவன் உயிரிழந்திருக்கிறான்.” என்றார் சிவா.

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதாரண மோதல், கொலையில் முடிவடைந்திருப்பது, ஈரோடு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதேபோன்று மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் தொடர்ந்து கொலைகளும், தற்கொலைகளும் நடப்பதும் பெற்றோர் தரப்பையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த மே 21 ஆம் தேதியன்று சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மதுரையைச் சேர்ந்த மாணவர் கோவையில் மயக்க மருந்து ஊசி ஏற்றி கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்திலும் ஒரு மாணவியிடம் பழகுவதில் ஏற்பட்ட மோதலே காரணம் என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதேபோன்று, கடந்த ஜனவரி 4 ஆம் தேதியன்று, கோவையில் தனியார் கல்லுாரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த திருப்பூர் மாணவர், தனது பிறந்தநாளன்று ஆடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கிலும் கல்லுாரி மாணவி ஒருவரிடம் பழகியது தொடர்பாக, இவருக்கும், மற்ற மாணவர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே முக்கியக் காரணமென்று விசாரணையில் தெரியவந்தது.

இத்தகைய மோதல்கள், மாணவர்களிடையே காலம் காலமாக நடந்து வந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் தற்கொலையிலும் கொலைகளிலும் முடிவடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள். இதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு கவனத்தில் கொள்ள வேண்டியது என்கிறார், கீழ்பாக்கம் மனநல மருத்துவ மையத்தின் பேராசிரியரும் மனநல மருத்துவருமான பூர்ண சந்திரிகா.

பட மூலாதாரம், Dr.Poorna Chandrika

படக்குறிப்பு, இத்தகைய வன்முறைகள் நடப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாக கூறுகிறார், மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா ”முன்பு ஒருவர் மீது கோபம் இருந்தால் அவரைத் தேடிக் கண்டுபிடித்து நேரில் பார்ப்பதற்குள் ஒரு கால இடைவெளியாகிவிடும். அதற்குள் வாழ்க்கையில் வேறு சில நிகழ்வுகளால் அப்போதிருந்த கோபம், ஆக்ரோஷம் குறைந்துவிடும். ஆனால், இப்போதுள்ள தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஒரு சிறு கோபத்தை வன்மமாக மாற்றுவதும் அதை மேலும் துாண்டிவிடுவதும் எளிதாக நடக்கிறது. வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இதில் பெரும் பங்காற்றுகின்றன.” என்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

இதைப் பற்றி மேலும் விளக்கிய அவர், ” பழியுணர்வு என்பது நேரமாகும்போது கரையக்கூடியது. ஆனால், இப்போதுள்ள சமூக வலைத்தளங்களின் தகவல் தொடர்பு வசதி அதை உக்கிரமாக மாற்றி வன்முறைக்கு வித்திடுகிறது.” என்றார்.

எதிர்பாலினங்களிடம் ஈர்ப்பு என்பது இயல்பான ஒன்று என்று கூறும் மனநல மருத்துவர் சத்தியநாதன், ஆனால் வளரிளம் பருவத்தில் இத்தகைய ஈர்ப்பை சரியாகக் கணிப்பதில்தான் நிறைய தவறுகள் நடக்கின்றன என்கிறார். இதை பெரும்பாலானவர்கள் சில சிறிய பாதிப்புகளுடன் கடந்துவிடும் நிலையில், சிலர் மட்டுமே சிக்கலாக்கிக்கொள்வதாகச் சொல்கிறார்.

”இந்தப் பருவத்தில் ஒரே பெண்ணிடம் பழகுவதில் ஆண்களிடம் ஏற்படுகிற மிதமான மோதல் போக்கை உளவியலில் Cute aggression என்பார்கள். ஒரு பெண் தனக்கானவள் மட்டுமே என்று நினைக்கிற மனோபாவம், வளரிளம் பருவத்தில் இருப்பவர்களுக்கு அதிதீவிரமாக இருக்கும். அது பொறாமையாகும். அந்த பொறாமை வன்மமாகவும் ஆக்ரோஷமாகவும் மாறும். இத்தகைய பொறாமையைத்தான் பச்சைக் கண்களைக் கொண்ட அசுரன் என்று ஷேக்ஸ்பியர் சொல்வார். அந்தப் பொறாமைதான் இளம் பருவத்தில் இருக்கும் பலருடைய கண்களையும் மறைத்து விடுகிறது.” என்கிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன்.

பெண்களுக்காக குறிப்பாக மாணவிகளுக்காக மாணவர்களிடம் ஏற்படும் மோதல் போக்கு, வன்முறையாக மாறுவதில் போதையின் பங்கு மிக அதிகமென்று உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். போதை, தொழில்நுட்பம், சினிமா மற்றும் கூட்டு உளவியல் என பலவிதமான காரணிகளும் ஒன்று சேர்ந்து இன்றைய இளம் தலைமுறையை எளிதில் தடம் மாறச் செய்வதாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

போதையில் இருக்கும்போது உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டு, ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல்தான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் எதிர்வரும் சூழ்நிலைக்கேற்ப இயக்குவதா, நிறுத்துவதா என்பதைத் தெளிவாகக் கணிக்க முடியாததைப் போலவே மற்ற விஷயங்களிலும் தெளிவான முடிவெடுக்க முடியாது என்கிறார்.

தனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பெண்ணின் மீது அமிலம் ஊற்றுவது அல்லது மற்றவரைக் கொல்வது போன்ற வன்முறைத் தீர்வுகளை நாடுவதாக கூறுகிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன்.

பட மூலாதாரம், Dr.Sathyanathan

படக்குறிப்பு, இத்தகைய சம்பவங்களில் போதையின் பங்களிப்பு அதிகம் என கூறுகிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன்தற்கொலை எண்ணம் நீங்க…

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு