விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். 

மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக  கலந்துரையாடினர். 

மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதன் அங்கமாக, மாவட்ட செயலரை சந்தித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்த தன்மையை வெளிக்காட்டி அதனை வர்த்தமானி அறிவித்தலில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதன் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், 

 காணி விடுவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அதற்கமாய கட்டம் கட்டமாக காணி விடுவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். 

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாகவும், மற்றும் பலாலி வீதியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டதற்கமைய, அவ்வீதித் தடை அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த 234 ஏக்கர் காணிகள் விவசாய தேவைகளுக்காக மாத்திரம் விடுவிக்கப்பட்டிருப்பதாவும், குடியிருப்புக்காக அந்த காணிகளை விடுவிப்பதற்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் (காணி) திரு. பா.ஜெயகரன், மீள்குடியேற்ற கிளை உத்தியோகத்தர்கள், மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதியாக இருந்த கால பகுதியில் வலி. வடக்கில்  234 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது. 

குறித்த காணிகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காணிகளுக்கு காலையில் சென்று மாலையில் திரும்பி விடவேண்டும், அக்காணிகளில் தங்கி நிற்பதற்கோ , தற்காலிக கொட்டகைகளையோ அமைக்க இராணுவத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.