யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (21.07.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மறைப்பதற்கும், அதன் வரலாற்றை மழுங்கடிப்பதற்கும் அநுர அரசு ஒரு சதித்திட்டத்தை மிகச் சாதுர்யமாக முன்னெடுக்க முயல்கிறது.

இதற்காக, தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அநுர அரசின் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி ‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது.

எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தென்னிலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இணைந்து அநுர அரசின் ஆதரவாளர்களின் இந்த முயற்சியில் தமிழ் மக்கள் பங்கேற்கக் கூடாது. அந்த நாளை ஒரு கறைபடிந்த நாளாகக் கருதி, கறுப்புக் கொடி கட்டி எமது துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.