Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா – இந்தியாவை எப்படி பாதிக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிலப்பரப்பில் மிகவும் பெரியதும் ஆழமானதும் என சொல்லப்படும் யார்லுங் சாங்போ கணவாயில் அணை அமைந்துள்ளது எழுதியவர், டெஸ்ஸா வாங்பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சீன அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய புனல் மின்நிலைய அணையை திபெத்திய பிரதேசத்தில் கட்டத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கவலைகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவில் பிரம்மபுத்ரா என அழைக்கப்படும் ஆறு) கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்காக சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு சீனப் பிரதமர் லி கியாங் தலைமையேற்றார்.
இந்த ஆறு திபெத்திய பீடபூமி மற்றும் பல தெற்காசிய நாடுகளின் வழியாக பாய்கிறது. ஆற்றின் ஓட்டத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் வங்கதேச மக்கள் மட்டுமல்லாது அப்பகுதி சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் திபெத்தியர்கள் மீது ஏற்படுத்த சாத்தியமுள்ள தாக்கம் காரணமாக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் வளர்ச்ச்சியை ஊக்குவிக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
மோடு புனல் மின் நிலையம் எனவும் அழைக்கப்படும் இந்த 12 பில்லியன் யுவான் ($1.67 பில்லியன்; £1.25 பில்லியன்) மதிப்பிலான திட்டம் நிறைவடையும்போது, த்ரி கோர்ஜஸ் அணையை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய புனல் மின் நிலையமாக மாறி அதைவிட முன்று மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
எல்லை தாண்டி தெற்கு நோக்கி பாய்ந்து இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தில் சியாங், பிரம்மபுத்ரா மற்றும் ஜமுனா ஆறுகளுக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் யார்லுங் சாங்போ ஆற்றை கட்டுப்படுத்தவோ திசைதிருப்பவோ சீனாவுக்கு இந்த புதிய அணை ஆற்றலை அளிக்கும் என நிபுணர்களும், அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவை மையமாக கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிட்யூட் என்ற சிந்தனைக் குழு 2020-ல் வெளியிட்ட அறிக்கையில், “[திபெத்திய பீடபூமியில் உள்ள] இந்த ஆறுகளின் மீதான கட்டுப்பாடு, இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது சீனாவுக்கு ஒரு கட்டுப்பாட்டை அளிக்கிறது” என்று குறிப்பிட்டது.
இந்த அணை கட்டுமானம் நிறைவடைந்தால் சியாங் மற்றும் பிரம்மபுத்ரா ஆறுகள் “கணிசமான அளவு” வறண்டு போய்விட வாய்ப்பு இருப்பதாக இம்மாதத்தின் முற்பகுதியில் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அருணாச்சலபிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கவலை தெரிவித்திருந்தார்.
“இந்த அணை நமது பழங்குடி மக்களுக்கும், நமது வாழ்வாதாரத்திற்கும் இருத்தலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது. சீனா இதை ஒரு வகையான ‘நீர் குண்டு’ (ஆயுதமாக) ஆகவும் பயன்படுத்தலாம் என்பதால் இது மிகவும் தீவிரமானது,” என அவர் தெரிவித்தார்.
“அணை கட்டப்பட்டு, அவர்கள் திடீரென நீரை வெளியேற்றினால், எங்கள் முழு சியாங் பகுதியும் அழியும்,” என்றார். “குறிப்பாக, ஆதி பழங்குடி மற்றும் இதேபோன்ற குழுக்கள்… அவர்களின் சொத்து, நிலம் மற்றும் குறிப்பாக மனித உயிர்கள் பேரழிவு விளைவுகளை சந்திக்கும்.”
இந்தியாவின் மத்திய அரசு இந்த அணை ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள சமூகங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து சீனாவிடம் கவலைகளை தெரிவித்துள்ளது. சீனாவின் அணையிலிருந்து திடீரென நீர் வெளியேற்றப்பட்டால் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க, சியாங் ஆற்றில் ஒரு புனல்மின்நிலைய அணையைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம் 2020-ல் இந்தியாவுக்கு பதிலளித்து, ஆற்றில் அணை கட்டுவது சீனாவின் “சட்டபூர்வ உரிமை” என்றும், கீழ்நோக்கி ஏற்படும் தாக்கங்களை கருத்தில் கொண்டிருப்பதாகவும் கூறியது.
இந்த திட்டம் குறித்து வங்கதேசமும் கவலை தெரிவித்து, அணை பற்றிய கூடுதல் தகவல்களை கோரி அதிகாரிகள் பிப்ரவரி மாதத்தில் கடிதம் எழுதினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யார்லுங் சாங்போ ஆறு திபெத்திய பீடபூமி வழியாக பாய்ந்தோடுகிறதுசீன அதிகாரிகள் நீண்ட காலமாக திபெத் தன்னாட்சி பகுதியில் இந்த அணை அமையவுள்ள இடத்தின் நீர் மின்சக்தி உற்பத்தி திறனை கவனித்து வருகின்றனர்.
நிலப்பரப்பில் உலகின் மிக ஆழமான மற்றும் நீளமான கணவாயின் ஒரு பகுதியில் திபெத்தின் மிக நீளமான ஆறான யார்லுங் சாங்போ நம்சா பர்வா மலையை சுற்றி ஒரு யு (U) வளைவு எடுக்கும் பகுதியில் இந்த அணை அமையவுள்ளது.
“தி கிரேட் பெண்ட்” என அழைக்கப்படும் இந்த வளைவை எடுக்கும் நடைமுறையின் போது ஆறு பல நூறு மீட்டர் உயரத்திலிருந்து கீழே பாய்கிறது.
நம்சா பர்வா மலையில் 20 கிமீ நீளமுள்ள பல சுரங்கங்களை தோண்டி, ஆற்றின் ஒரு பகுதியை திசைதிருப்ப அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக முந்தைய செய்திகள் தெரிவித்தன.
லி கியாங்கின் வருகை குறித்து கடந்த வார இறுதியில் சின்ஹுவா வெளியிட்ட செய்தியில் ஐந்து அடுக்கடுக்கான மின்சக்தி நிலையங்களை உருவாக்க பொறியாளர்கள் , “சுரங்கங்கள் வழியாக நீரை திசைதிருப்புவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புனல்மின்அணையின் மின்சாரம் திபெத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பெரும்பாலும் வேறு பகுதிகளில் பயன்படுத்துவதற்காக பிராந்தியத்திற்கு வெளியே அனுப்பப்படும் என்று சின்ஹுவா மேலும் தெரிவித்தது.
நாட்டின் கிழக்கு மாநகரங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிராமப்புற மேற்கில் திபெத்திய பகுதிகள் அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் பெரிய ஆறுகளை மாபெரும் அணைகள் மற்றும் நீர் மின்சக்தி நிலையங்களைக் கட்டுவதற்காக சீனா கவனித்து வந்திருக்கிறது.. அதிபர் ஷி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் “ஜிடியாண்டாங்சாங்” அல்லது “மேற்கு மின்சாரத்தை கிழக்குக்கு அனுப்புதல்” என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சீன அரசு மற்றும் அரசு ஊடகங்கள் இந்த அணைகளை மாசை குறைத்து, சுத்தமான ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒரு அனைத்து தரப்பும் வெற்றிகரமான தீர்வாகவும், கிராமப்புற திபெத்தியர்களை உயர்த்தும் திட்டமாகவும் முன்வைத்துள்ளன.
இந்த அணைகள், திபெத்தியர்களையும் அவர்களின் நிலத்தையும் சீனா சுரண்டுவதற்கு மற்றொரு உதாரணம் என்றும் கடந்தகால எதிர்ப்புகள்? நசுக்கப்பட்டுள்ளன எனவும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு, மற்றொரு புனல் மின் அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான திபெத்தியர்களை சீன அரசு கைது செய்தது. இது கைதுகள் மற்றும் தாக்குதல்களில் முடிந்து, சிலர் பலத்த காயமடைந்ததை பிபிசி ஆதாரங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட காட்சிகள் மூலம் தெரிந்துகொண்டது.
உயிரியல் பன்முகத்தன்மைக்கு புகழ்பெற்ற திபெத்திய பள்ளத்தாக்குகளை வெள்ளத்தில் மூழ்கடிப்பது மற்றும் பூகம்ப பிளவு கோடுகள் நிறைந்த பகுதியில் அணைகளை கட்டுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த சுற்றுச்சூழல் கவலைகளும் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு