Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளிக் குறிப்பு, இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது.நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சார்பாக டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்திற்கு 1,000 கிலோ மாம்பழப் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள கசப்பைச் சரி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக மாம்பழங்கள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளன என்பதில் இந்திய ஊடகங்களுக்குச் சந்தேகமில்லை.
முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் பிரதமர் மோதிக்கு மாம்பழங்களை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சொல்லப்போனால், ஒரு நாட்டுத் தலைவருக்கு இதுபோல மாம்பழம் வழங்கப்படுவது ராஜீய ரீதியிலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
புவிசார் அரசியல் நிபுணரான ப்ரியஜித் தேப்சர்கார் இதைப்பற்றிப் பேசுகையில், “இந்தியாவுடனான இந்த வழக்கமான ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளை முனைவர் யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு பின்பற்றும் என்று நான் நம்புகிறேன். ஏன் என்றால் அமெரிக்காவின் சுங்கவரி, மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, மியான்மரில் சமகால அரசியல் சூழல் போன்ற பல்வேறு அழுத்தங்களை அந்த நாடு சந்தித்து வருகிறது” என்று கூறினார்.
மேலும் அவர், “டெல்லியுடனான உறவை மீண்டும் புதுப்பிக்கலாமா என்று தற்போது வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். மோசமடைந்த இரு நாட்டு உறவுகளில் இது எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தியா, மெக்சிகோ மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளர்களாக உள்ளனர். இந்தப் பட்டியலில் வங்கதேசமும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.
உலகின் இந்தப் பகுதியில், மாம்பழம் வெறும் சுவையான பழமாக மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் ராஜீய ரீதியிலான நடவடிக்கையால் சூழப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1950களில் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு பெட்டி மாம்பழங்களைப் பரிசாக எடுத்துச் செல்வார்.
அதேபோல ஒரு வெளிநாட்டு அதிபர் அல்லது பிரதமர் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம், நேரு அவர்களுக்கு மாம்பழங்களைப் பரிசளிப்பார்.
நேரு 1955 ஆம் ஆண்டு சீனாவிற்குப் பயணம் செய்தபோது, குவாங்சோ (Guangzhou) மக்கள் பூங்காவில் நடப்பட்ட எட்டு துஷேரி (Dussehri) மற்றும் லங்க்டா (Langda) மாம்பழக் கன்றுகளைச் சீனப் பிரதமர் சோவ் யென் லாய்க்கு (Chou Enlai) பரிசாக வழங்கினார்.
அதே ஆண்டு சோவியத் தலைவர் நிகிதா குருசேவ் (Nikita Khrushchev) இந்தியாவுக்குப் பயணம் செய்தார். அப்போது அவர் மாஸ்கோவிற்குத் திரும்பும் விமானத்தில் நேருவால் பரிசளிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபலமான மலிஹாபாதி துஷேரி மாம்பழங்களின் பல கூடைகளுடன் சென்றார்.
இந்தியாவைப் போல மாம்பழங்களைப் பரிசளிப்பதில் பாகிஸ்தான் பின்தங்கியிருக்கவில்லை.
ஆகஸ்ட் 1968 இல், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மியான் அர்ஷத் ஹுசைன் (Mian Arshad Hussain) பெய்ஜிங்கிற்கு பயணம் செய்து சீனத் தலைவர் மாவோ சேதுங்கிற்கு (Mao Zedong) ஒரு பெட்டி மாம்பழங்களை வழங்கினார்.
எதிரி நாடுகளாக இருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாட்டுப் பதற்றத்தைக் குறைக்க ராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
1981 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக் (Zia-ul-Haq), பாகிஸ்தானில் ‘அன்வர் ரதௌல்’ (Anwar Rataul) என்று அழைக்கப்படும் மாம்பழப் பெட்டியை இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார்.
2008 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியும் (Asif Ali Zardari) இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு மாம்பழப் பெட்டியைப் பரிசாக வழங்கினார்.
ஆனால் மும்பையில் அரங்கேறிய நவம்பர் 26 தாக்குதல் அந்த நிலையை மோசமாக்கியது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் அப்போதைய தலைவர் நவாஸ் ஷெரீஃப் (Nawaz Sharif), இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மாம்பழக் கூடைகளை அனுப்பினார். ஆனால் இரு நாட்டிற்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலைத் தணிக்க அது உதவவில்லை.
இந்தியா சுமார் 1,200 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் பாகிஸ்தான் சுமார் 400 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது.
உலகில் மாம்பழங்களுக்கான பாரம்பரிய சந்தைகள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகும். இது தவிர, ஐரோப்பா தெற்காசிய மாம்பழங்களுக்கான பெரிய சந்தையாகவும் உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு