கன்வார் யாத்திரை: உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் உணவக உரிமையாளர்கள், ஊழியர்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, வட இந்திய மாநிலங்களில், கன்வர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளதுஎழுதியவர், பிரேர்னா பதவி, பிபிசி செய்தியாளர் 15 நிமிடங்களுக்கு முன்னர்

இந்து மத நாட்காட்டியின்படி, ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இந்த பன்னிரண்டு மாதங்களில் ஒன்றாக சாவன் எனும் மாதம் உள்ளது.

இந்துக்களுக்கு, இது சிவபெருமானை பக்தியோடும் நம்பிகையோடும் வழிபடுவதற்கு உகந்த மாதம். ஆனால் சிலருக்கு, இது உதவியற்ற நிலை, வாழ்வாதாரம் குறித்த கவலைகள் மற்றும் அடையாளம் குறித்த கேள்விகள் எழும் மாதமாக உள்ளது.

குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கன்வார் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பெயர் மற்றும் அடையாளம் குறித்த சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டு, கன்வார் யாத்திரைக்குச் செல்லும் வழியில் அனைத்து தாபாக்கள் , ஹோட்டல்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களும் கியூஆர் (QR) குறியீடு ஸ்டிக்கர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உரிமங்களை ஒட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆவணங்களிலும், ஓட்டல் உரிமையாளரின் பெயர், முகவரி, தொடர்பு எண் போன்ற தகவல்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன் விளைவாக, இஸ்லாமிய உரிமையாளர்களுக்குச் சொந்தமான (முழுமையாக அல்லது பகுதியளவில்) பல ஓட்டல்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

படக்குறிப்பு, இதுபோன்ற சுவரொட்டிகள் பல ஓட்டல்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.ஹரித்வாரில் இருந்து கங்கை ஆற்றின் புனித நீரைக் கொண்டு வரும் சிவபெருமானின் பக்தர்களுக்கு முசாபர்நகர் வழியாகச் செல்லும் டெல்லி–டேராடூன் நெடுஞ்சாலை முக்கிய பாதையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள பல ஓட்டல்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

அசைவ உணவகங்களை கன்வார் யாத்திரையின் போது மூட வேண்டும் என்று நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய உரிமையாளர்களுக்குச் சொந்தமான சைவ உணவகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.

முஜீப் அகமது, இந்த பாதையில் “பிரதான் ஃபுட் கோர்ட்” என்ற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். கன்வார் யாத்திரையின் போது எந்தப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஃபுட் கோர்ட்டை மூடிவிட்டதாக அவர் கூறுகிறார்.

அவர்களது உணவு விடுதிக்கு அருகில் ஒரு சிறிய கடையை நடத்தி வரும் மெயின்பால், உணவக உரிமையாளர் முஜீப் ஒரு இஸ்லாமியர் என்றும், அதனால் அவர் இப்போது தனது கடையை மூடிவிட்டதாகவும் கூறுகிறார்.

ஜூலை 24ஆம் தேதி, அதாவது கன்வார் யாத்திரை முடிந்த பிறகு, முஜிப் அவரது உணவகத்தை மீண்டும் திறக்க திட்டமிட்டிருப்பதாக அவர் கருதுகிறார் .

“பல்வேறு ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன”

படக்குறிப்பு, சோனு பால் ஒரு இஸ்லாமிய நண்பருடன் ஒரு தாபாவை நடத்துகிறார்.இந்த வழித்தடத்தில் பல ஓட்டல்கள் உள்ளன, அவற்றின் உரிமையாளர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் உள்ளனர். அதாவது இந்த தாபாக்கள் இரு மதங்களைச் சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகின்றன.

இந்த ஓட்டல்களின் உரிமையாளர்களிடம் பேசியபோது, ஆண்டின் பெரும்பாலான நாட்களில் அவை அமைதியாக இயங்குகின்றன எனத் தெரியவந்தது.

ஆனால் கன்வார் யாத்திரை நடக்கும் 15–20 நாட்களில், பல இஸ்லாமிய தொழில் கூட்டாளிகள், எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, தங்கள் தாபாக்களிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக விலகி இருப்பதாகக் கூறுகின்றனர்.

சோனு பால் முகமது யூசுப்புடன் இணைந்து பஞ்சாபி தாபா என்ற சைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.

கன்வார் யாத்திரையின் போது, பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓட்டல்களுக்கு வந்து விசாரணை நடத்துவதாகவும், அதனால் எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க, யூசுப் மற்றும் அவரைப் போன்ற பிற இஸ்லாமிய ஓட்டல்களின் உரிமையாளர்கள் சில நாட்களுக்கு அவர்களுடைய ஓட்டல்களில் இருந்து விலகி இருப்பதாகவும் சோனு பால் கூறுகிறார்.

படக்குறிப்பு, பஞ்சாபி தாபாஆனால், இந்த சூழலுக்கு மத்தியிலும், இஸ்லாமியர்களால் நடத்தப்படும் சில ஓட்டல்கள் திறந்திருக்கின்றன, அவற்றின் உரிமையாளர்கள் நிர்வாகத்திடமிருந்து முழு ஆதரவைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

உதாரணமாக, ராஜஸ்தானி ஷுத் கல்சா தாபாவை நடத்தும் ஃபர்கான், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சூழல் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்.

ஓட்டல் நடத்துவதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் யாத்திரைக்குச் செல்லும் பக்கதர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஃபர்கான்.

“முன்பு, நான் தாபாவில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் செலவிடுவேன், ஆனால் கன்வார் யாத்திரையின் போது, பதினெட்டு மணி நேரம் தாபாவில் தங்க வேண்டியிருக்கும். இதற்குக் காரணம், யாராவது வந்து விசாரித்தால், நான் அங்கு இருக்க வேண்டும். நான் இல்லாத நேரத்தில் எந்தவிதமான தகராறும் நடக்கக்கூடாது.

இதுபோன்ற விஷயங்கள் நடப்பதற்கு, எங்கள் தரப்பில் இருந்து எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. சாலையில் ஒரு சிறிய வெங்காயத் தோல் தெரிந்தால் கூட , இங்குள்ள துப்புரவுப் பணியாளர்கள் அதை மண்ணால் மூட ஓடுகிறார்கள்” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

கன்வார் யாத்திரையின் போது தாபாவில் அதிகமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், “கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படும் பருவத்தில், பல பக்தர்கள் பெயரைப் பார்த்தவுடன் தாபாவில் நிற்பதில்லை. அதனால் வியாபாரம் சற்று மந்தமாகிறது” என்கிறார் ஃபுர்கான்.

நேபாளி தாபா என்ற சைவ உணவகத்தை நடத்தி வரும் இன்டெகாப் ஆலமுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் உள்ளன.

மதத்தின் அடிப்படையில் யாரும் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கக் கூடாது என்பது ஓட்டல் உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், கன்வார் யாத்திரையின் போது தங்களிடம் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் இஸ்லாமியத் தொழிலாளர்களை சிலர் விடுப்பில் அனுப்புகிறார்கள்.

தேவ் ராமன் கடந்த 27 ஆண்டுகளாக மா லட்சுமி என்ற பெயரில் ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார்.

“எங்களிடம் இரண்டு இஸ்லாமிய ஊழியர்கள் உள்ளனர், ஒருவரின் பெயர் ஆரிஃப், மற்றொருவர் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டவர். கன்வார் யாத்திரையின் போது, அவர்களின் செலவுகளுக்காகப் பணம் கொடுத்த பிறகு நாங்கள் அவர்களுக்கு விடுப்பு வழங்குகிறோம். அவர்கள் எந்தப் பிரச்னையையோ அல்லது கேள்விகளையோ எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று பகிர்ந்துகொள்கிறார் தேவ் ராமன்.

இந்து-இஸ்லாமியர் எனும் அடிப்படையில் பாகுபாடு காட்ட விரும்பவில்லை என்றும், ஆனால் கன்வார் யாத்திரையின் போது, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் தேவ் ராமன் கூறுகிறார்.

கன்வார் யாத்திரையின் போது, இஸ்லாமிய ஊழியர்கள் சிலர் தங்களது வேலைகளை விட்டுச் செல்வதும் உண்டு என்று சில ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஓட்டல் உரிமையாளர் சோனு பால் பிபிசியிடம் கூறுகையில், “எங்களிடம் 12 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் , மீதமுள்ளவர்கள் இந்துக்கள். இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கன்வார் யாத்திரைக்கு சென்றுவிட்டனர், அதே நேரத்தில் இஸ்லாமிய ஊழியர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டனர். நாங்கள் அவர்களுக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கினோம், ஆனால் அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை”என்கிறார்.

“இஸ்லாமியர்கள் பலரும் வேலையை விட வேண்டிய நெருக்கடி”

ஆனால் இப்போது, எந்த பொருளாதார உதவியோ அல்லது மாற்று வேலையோ இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய ஊழியர்களின் நிலை என்னவாக உள்ளது?

தௌஹீத் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபாவில் பணிபுரிந்தார். கன்வார் யாத்திரை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் வேலைக்கு வருவதை, அவரது உரிமையாளர் அனுமதிக்கவில்லை.

நாங்கள் அவரிடம் பேசுவதற்காக அவரது கிராமத்தை அடைந்தோம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, கன்வார் யாத்திரையின் போது, எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது என்று பகிர்ந்துகொண்டார் தௌஹீத் .

“கன்வார் யாத்திரையின் போது, யாரும் அதைப் பிரச்னையாக்கி விடக்கூடாது என்பதற்காக, இஸ்லாமிய ஊழியர்கள் ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” என்று தௌஹீத் கூறுகிறார்.

பத்து பேர் கொண்ட குடும்பத்தில் தௌஹீத் மட்டுமே வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் நபர்.

“வீட்டில் உட்கார்ந்திருப்பதால், எங்களுக்கு மாதந்தோறும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. செலவுகளைச் சமாளிக்க பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்க வேண்டியிருந்தது. இப்போது வேலை மீண்டும் தொடங்கியதும், இந்தக் கடனை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்” என்கிறார் தௌஹீத்.

படக்குறிப்பு, முசாபர்நகரைச் சேர்ந்த தாஜாமுல், தனது ஓட்டல் உரிமையாளர் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகக் கூறுகிறார்.இந்த முறை கன்வார் யாத்திரையின் போது, முசாபர்நகரில் உள்ள ஓட்டல்களில் நடந்த இரண்டு வன்முறைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஒரு சந்தர்ப்பத்தில், உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதாகக் கூறி பக்தர்கள் ஓட்டலைச் சேதப்படுத்தியுள்ளனர்.

மற்றொரு வழக்கில், தனது இஸ்லாமிய ஊழியரின் அடையாளத்தை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஒரு ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டுள்ளார்.

முசாபர்நகரில் உள்ள பஜ்ஹேரி கிராமத்தில் வசிக்கும் தஜ்ஜாமுல், ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.

கன்வார் யாத்திரை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்து மதத்தைச் சேர்ந்த அவரது உரிமையாளர் தனக்கு கோபால் என்று பெயரிட்டதாகவும், இதன் காரணமாக அவர் தாக்கப்பட்டதாகவும் தஜ்ஜாமுல் கூறுகிறார்.

இந்த வழக்கில், அவரைத் தாக்கியவர்கள் அவரது ஆடைகளைக் கழற்றி அவரைப் பரிசோதித்ததாகக் கூறப்படுகிறது.

“முதலில் அவர்கள் உரிமையாளரை அடித்தார்கள், பின்னர் என்னை அடித்தார்கள். என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, என் பேன்ட்டைக் கழற்றி, நான் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்று கேட்டார்கள்” என்று அந்தச் சம்பவத்தை விவரிக்கிறார் தஜ்ஜாமுல்.

இந்த சம்பவம் நடந்த ஓட்டலின் உரிமையாளரிடம் நாங்கள் பேச முயற்சித்தோம், ஆனால் அவர் இது தொடர்பாகப் பேச மறுத்துவிட்டார்.

இனி எந்த ஓட்டலிலும் வேலை செய்ய மாட்டேன் என்று கூறுகிறார் தாஜஜ்முல் .

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சமூக கட்டமைப்பில் இதன் தாக்கம் என்னவாக உள்ளது?

படக்குறிப்பு, முசாபர்நகர் எஸ்.பி. சத்யநாராயணன்மறுபுறம், யாத்திரையின் போது சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் கூறுகிறது.

“சமூகக் கட்டமைப்பைப் பராமரிக்க, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் பேசுவது முக்கியம். கன்வாரை முன்னிட்டு, அனைத்து குழுக்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதைத் தவிர, நிர்வாகத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து விழிப்புணர்வும் பரப்பப்படுகிறது,” என்று முசாபர்நகர் நகர எஸ்பி சத்யநாராயண் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் இருந்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய ஊழியர்கள் பயத்தாலும், அழுத்தத்தாலும் சூழப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

“கன்வார் யாத்திரையின் போது பல குற்றவாளிகளும் வருவதால் பயம் உள்ளது. பலர் பணம் இல்லாமல் வருகிறார்கள். பணம் கூட கொடுக்க வேண்டாம் அல்லது கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் பயப்படுகிறோம்” என்கிறார் ஓட்டல் உரிமையாளர் தேவ் ராமன்.

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கல்வியாளர் அபூர்வானந்த் மற்றும் சில ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

“கியூஆர் குறியீடு மற்றும் உரிமம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் அறிவுறுத்தல்கள் இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும் ஒரு வழிமுறையாக மாறி வருகின்றன, இது சமூகத்தில் ஆழ்ந்த விரோதத்தை உருவாக்குகிறது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, கன்வார் யாத்திரையின் போது பல நேரங்களில் பெரிய தகராறுகள் அல்லது சண்டைகள் ஏற்படுகின்றன .கடந்த ஆண்டும், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் நிர்வாகத்தின் ஒரு முடிவு பெரிதும் விவாதிக்கப்பட்டு சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டது.

இந்த முடிவின் கீழ், கன்வார் வழித்தடத்தில் உள்ள தாபாக்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களைப் பகிர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து, தாபா அல்லது ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியது.

ஆனால் அடையாளம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அதே விவாதங்களும், அதே கவலைகளும் மீண்டும்மீண்டும் எழுகின்றன.

இப்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் நீதிமன்றத்தில் எத்தகைய வாதங்களை முன்வைக்கும்? நீதிமன்றத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? என்பதில்தான் அனைவரின் கவனமும் உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு