இந்தியா, பாகிஸ்தான் பின்பற்றும் ‘மாம்பழ’ ராஜ தந்திரத்தை மீண்டும் கையிலெடுத்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சுப்ஜோதி கோஷ்பதவி, பிபிசி வங்க செய்திகள் 21 ஜூலை 2025, 03:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியின் ஏழாவது லோக் கல்யாண் மார்க்கில் அமைந்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வீட்டிற்கு பல பெட்டிகளில் ஆயிரம் கிலோ மாம்பழங்கள் இந்த வாரம் வந்து சேர்ந்துள்ளன. அவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸால் அனுப்பிவைக்கப்பட்டவை.

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள கசப்பை சரி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக மாம்பழங்கள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளன என்பதில் இந்திய ஊடகங்களுக்கு சந்தேகமில்லை.

யூனுஸ் மட்டுமல்ல, இதற்கு முந்தைய கோடைக் காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் மோதிக்கு மாம்பழங்களை அனுப்பி வைப்பார்.

அப்போது, இந்தியாவுக்கான வங்கதேச தூதர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, “சைவ உணவை உட்கொள்ளும் நரேந்திர மோதிக்கு பத்மா நதியில் கிடைக்கும் ஹில்சா மீன்களை அனுப்பி வைப்பதில் ஒரு பலனும் இல்லை. ஆனால் இந்த துணைக் கண்டத்தில் மாம்பழங்கள் அனைவராலும் விரும்பப்படும் ஓர் அன்பளிப்பு,” என்று கூறினார்.

அப்போதிருந்து, ரங்க்பூரி ஹரிபாங்கா மாம்பழங்களோ அல்லது ராஜ்ஷாஹியின் அம்ரபள்ளி மாம்பழங்களோ ஷேக் ஹசீனாவால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டெல்லியில் உள்ள பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் முகவரிகளுக்கு மட்டுமின்றி, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களின் வீடுகளுக்கும் மாம்பழங்கள் வந்த வண்ணம் இருந்தன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆயிரம் கிலோ மாம்பழங்களை அனுப்பியுள்ளார் முகமது யூனுஸ் வங்கதேசத்தின் நிலைப்பாடு மென்மையாகக் காரணம் என்ன?

புவிசார் அரசியல் நிபுணரான ப்ரியஜித் தேப்சர்கார், “முனைவர் யூனுஸ், இந்தியவுடனான இந்த வழக்கமான ராஜாங்க நடவடிக்கைகளை வங்கதேசம் பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏன் என்றால் அமெரிக்காவின் சுங்கவரி, மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, மியான்மரில் சமகால அரசியல் சூழல் போன்ற பல்வேறு அழுத்தங்களை அந்த நாடு சந்தித்து வருகிறது.

டெல்லியுடனான உறவை மீண்டும் புதுப்பிக்கலாமா என்று தற்போது வெளிப்படையாக பேசி வருகின்றனர். மோசமடைந்த இரு நாட்டு உறவுகளில் இது எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

உலகில் மிகப்பெரிய மூன்று மாம்பழ ஏற்றுமதி நாடுகள் இந்தியா, மெக்ஸிகோ மற்றும் பாகிஸ்தான். வங்கதேசம் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. உலகில் புதிய சந்தைகளை கண்டடைய இந்த நாடுகள் மத்தியில் போட்டிகளும் நிலவுகின்றன.

37 ஆண்டுகளுக்கு முன்னதாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரும், அதிபருமான ஜியா – உல் -ஹக் மர்மமான முறையில் விமான விபத்தில் உயிரிழந்தார். அதற்கும் மாம்பழக் கூடைகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூட பேச்சுகள் அடிபட்டன.

உலகின் இந்த பிராந்தியத்தில் மாம்பழங்கள் என்பது வெறும் சுவையான பழங்கள் மட்டுமல்ல. ஒரு கூடை மாம்பழங்கள் என்பது மர்மம், அரசியல், போட்டி மற்றும் ராஜ தந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதும் கூட.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1955-ஆம் ஆண்டு சீனாவுக்கு அரசு பயணம் மேற்கொண்ட நேரு அங்கே சீன பிரதமர் சோவ் என்லாய்க்கு 8 துஷேரி மற்றும் லங்க்டா மாங்கன்றுகளை பரிசுகளாக வழங்கினார். நேரு காலம் தொட்டே தொடரும் பழக்கம்

இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் தேசிய பழமாக மாம்பழம் இருக்கிறது. 1947-ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு இவ்விரு நாடுகளும் சுதந்திர நாடுகளாக உருப்பெற்றன. பிற நாடுகளை நாடவும், ராஜ்ஜிய நடவடிக்கைகளுக்காகவும் மாம்பழங்களை இவ்விரு நாடுகளும் பயன்படுத்தியுள்ளன.

1950-களில் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் போதும் மாம்பழங்களை அன்பளிப்பாக பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

வெளிநாடுகளில் இருந்து அதிபர்களோ, பிரதம அமைச்சர்களோ இந்தியாவுக்கு வரும் போது அவர்களுக்கு மாம்பழங்களை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.

1955-ஆம் ஆண்டு சீனாவுக்கு அரசு பயணம் மேற்கொண்ட நேரு அங்கே சீன பிரதமர் சோவ் என்லாய்க்கு 8 துஷேரி மற்றும் லங்க்டா மாங்கன்றுகளை பரிசாக வழங்கினார். அவைகள் காங்சாவ் மக்கள் பூங்காவில் நட்டு வைக்கப்பட்டன.

அதே ஆண்டு, சோவியத் தலைவர் நிகிதா குருஷேவ் இந்தியா வந்தார். அவர் மாஸ்கோவுக்கு திரும்பிச் செல்லும் போது சில பெட்டிகளில் மாம்பழங்களை எடுத்துச் சென்றார். உத்தரபிரதேசத்தில் புகழ்பெற்ற மாம்பழ வகைகளில் ஒன்றான மலிஹாபாதி துஷேரி மாம்பழங்களை நேரு அவருக்கு பரிசாக வழங்கினார்.

1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் செல்லும் போது அந்த நாட்டு அதிபருக்கு மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பழமும் மாம்பழம் தான். ஆனால் சுவை, மணம் மற்றும் இதர பண்புகள் இந்திய மாம்பழங்களில் இருந்து வித்யாசமானவை.

பாகிஸ்தானும் மாம்பழங்களை அன்பளிப்பாக கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. சீனாவுக்கு பாகிஸ்தான் மாம்பழங்களை வழங்கியது கலாசார புரட்சியின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

1968-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மியான் அர்ஷத் ஹூசைன் பெய்ஜிங்கிற்கு சென்றார். சீன தலைவர் மாவோ சேதுங்கிற்கு அவர் பெட்டி நிறைய மாம்பழங்களை வழங்கினார்.

மாம்பழங்கள் குறித்து சீனா அதிகம் அறியாத நாட்கள். எனவே மாவோ அந்த பழத்தை சுவைப்பதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே அவர் அந்த மாம்பழங்களை பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைத்தார்.

கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நாட்டின் தலைவர் அன்பளிப்பு வழங்கியது அந்த நாட்டின் வரலாற்றின் ஓர் அங்கமாக மாறியது. பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அந்த மாம்பழங்களை பதப்படுத்தி, கண்ணாடி ஜாடிகளில் அடைத்து பாதுகாத்து வைத்து, நாட்டின் தலைவர் மீதான தங்களின் மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

படக்குறிப்பு, சீனாவுக்கு பாகிஸ்தான் மாம்பழங்களை வழங்கியது கலாசார புரட்சியின் அடையாளமாக பார்க்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான பழக்கமான மாறிய மாம்பழம்

எதிரி நாடுகளாக இருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாட்டுப் பதற்றத்தைக் குறைக்க ராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது உண்டு.

1981-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக், அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு மாம்பழங்களை அனுப்பினார். பாகிஸ்தானின் அன்வர் ரதௌல் மாம்பழங்களை அவர் அனுப்பினார்.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ரதௌல் என்ற கிராமம் உள்ளது என்பதால் அன்பளிப்பாக வந்த மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாவா பாகிஸ்தானா என்ற விவாதமே ஏற்பட்டது.

2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மாம்பழங்களை அனுப்பி வைத்தார். ஆனால் மும்பையில் அரங்கேறிய நவம்பர் 26 தாக்குதல் அந்த நிலையை மோசமாக்கியது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 பாகிஸ்தான் தலைவர் நவாஸ் ஷெரிஃப் இந்திய பிரதமர் மோதி, அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மாம்பழங்களை அன்பளிப்பாக அனுப்பினார். ஆனால் இரு நாட்டிற்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலை தணிக்க அது உதவவில்லை.

இந்தியாவில் 1200 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. பாகிஸ்தானில் 400 வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் மாம்பழ விளைச்சலும் அதிகம். ஆனால் இந்திய ஏற்றுமதியில் மாம்பழங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் போல பாகிஸ்தானில் பெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் இந்திரா காந்திக்கு மாம்பழங்களை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார் இந்திய மாம்பழங்களுக்கு விதித்த தடையை அமெரிக்கா நீக்கியது எப்படி?

மாம்பழங்களுக்கான வழக்கமான சந்தை என்பது அமெரிக்காவும் சீனாவும் தான். தெற்காசிய மாம்பழங்களுக்கு ஐரோப்பாவில் பெரிய சந்தை உள்ளது.

சீனாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

2004-ஆம் ஆண்டு சீனா, இந்திய மாம்பழங்களுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்களால் பெரிய தாக்கத்தை அங்கே ஏற்படுத்த இயலவில்லை.

அமெரிக்காவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது.

2006-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கு வருகை தந்த போது அந்த தடை நீக்கப்பட்டு, “மேங்கோ இனிஷியேடிவ்” செயல்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.

புஷ்ஷிற்கு மாம்பழங்கள் பிடிக்கும் என்பதால் மாம்பழங்கள் மீதான தடை நீக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதன் பிறகு 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி 150 பெட்டிகளில் இந்திய மாம்பழங்கள் நியூயார்க்கின் ஜே.எஃப்.கே. விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. நியூயார்க் டைம்ஸ் தன்னுடய செய்தியில், “வரலாற்றில் அதிகமாக எதிர்பார்த்துக் காத்திருந்த பழ விநியோகம் இதுவாக இருக்கலாம்,” என்று குறிப்பிட்டிருந்தது.

வாஷிங்டனில் அமைந்துள்ள பாகிஸ்தானின் தூதரகமும் அமெரிக்க செனட்டர்கள், தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு மாம்பழங்களை வழங்கும். அடிக்கடி “மாம்பழ பார்ட்டிகள்” நடப்பதும் வழக்கம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எத்தனை நாட்களுக்கு மாம்பழங்கள் கெடாமல் இருக்கும்?

டெல்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மாம்பழ ஏற்றுமதியாளர் ப்ரதீப் குமார் தாஸ்குப்தா பிபிசியிடம் பேசிய போது, “உண்மையில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் மாம்பழங்கள் தான் ஏற்றுமதிக்கு ஏற்றவை. ஏன் என்றால் லண்டன் அல்லது நியூயார்க்கில் உள்ள கடைகளை அடைய குறைந்தது ஐந்து முதல் ஏழு நாட்களாவது ஆகும். அப்போது இப்பழங்கள் அழுகாமல் இருக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்.

கொங்கன் மற்றும் மகராஷ்டிராவில் இருந்து வரும் அல்போன்சோ மாம்பழங்களைத் தவிர, பெரும்பாலான மாம்பழ ரகங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவை. அவை விரைவில் அழுகிவிடும். ஆனால் சுவை மற்றும் மணத்தில் எதற்கும் குறைந்ததல்ல.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, வறண்ட காலநிலையே நீடிப்பதால் மாம்பழங்களில் குறைவான நார்ச்சத்து இருக்கும். அதன் நீடித்து நிலைக்கும் காலமும் அதிகம்.

“அதனால் தான் அல்போன்சோ தவிர இதர இந்திய ரக மாம்பழங்கள் குறைவான அளவிலேயே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் பாகிஸ்தானின் சிந்தூரி, சௌன்சா, அன்வர் ரதௌல் உள்ளிட்ட மாம்பழங்களுக்கு மேற்கத்திய சந்தைகளில் நல்ல மதிப்பு இருக்கிறது,” என்றும் தாஸ்குப்தா தெரிவிக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு