பட மூலாதாரம், Anush Kottary

படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார்.எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தாம் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார்.

தன்னால் “குற்ற உணர்வோடு இதற்கு மேலும் உயிரோடு இருக்கமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவரது குற்றச்சாட்டு வெளியே வந்தபின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பெண்ணின் தாயும் முன்வந்துள்ளார். உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில், இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

“உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிகிறது,” என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேவி தனஞ்செய் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஞாயிறன்று அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகிக்கிறார்.

இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ” அரசு எந்த அழுத்தத்தின் மீதும் பணி செய்யாது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறையினர் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்,” என தெரிவித்திருந்தார்.

புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் ஶ்ரீ ஷேத்ர தர்மஸ்தாலா மஞ்சுநாதா ஸ்வாமி கோயிலில் பணியாற்றினார். இந்த கோயில் தர்மஸ்தாலா கோயில் என்றும் அறியப்படுகிறது.

இந்தக் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது ஒரு சைவ கோயில், ஆனால் பூசாரிகள் வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ஜெயின் வம்சத்தினரிடம் உள்ளது.

புகார்தாரர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையை தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகக் கூறினார். பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது மற்றும் “கடுமையான குற்றங்களின் ஆதாரங்களை மறைப்பது” என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பல பெண்களின் உடல்களை பார்த்ததாகவும், அவை “ஆடைகள் இல்லாமல், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலின் தெளிவான அடையாளங்களுடன்” இருந்ததாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார். “உன்னை துண்டு துண்டாக வெட்டுவோம்,” “உன் உடலை மற்றவர்களைப் போல புதைப்போம்,” “உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்” என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

“2010-ல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அடியோடு உலுக்குகிறது. கலையரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன, பாலியல் வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கட்டிப்போடப்பட்ட தழும்புகள் இருந்தன. அவரையும் அவரது பள்ளி பையையும் புதைக்க ஒரு குழியை தோண்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது,” என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“என்னால் மறக்கமுடியாத மற்றொரு சம்பவம் 20 வயது பெண் ஒருவரின் முகம் ஆசிடால் எரிக்கப்பட்டதுதான்.”

முதல் தகவல் அறிக்கையின் கூற்றுப்படி, ஆண்கள் கொல்லப்பட்ட விதம் “மிகவும் கொடூரமானதாக” இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு அறையில் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு துண்டு ஒன்றால் அவர்கள் வாயைப் பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புகார்தாரரின் கூற்றுப்படி இந்த சம்பவங்கள் அவர் கண்முன்னே நிகழ்ந்துள்ளன. “நான் பணியாற்றிய காலத்தில் நான் தர்மஸ்தாலா பகுதியில் பல இடங்களில் உடல்களை புதைத்துள்ளேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

“சில சமயம் அவர்களது உடல்கள் மேல் டீசலை ஊற்றும்படி சொல்வார்கள். பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க அவர்களை எரிக்கும்படி உத்தரவு வரும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான உடல்கள் அழிக்கப்பட்டன.”

“மன அழுத்தத்தை” தம்மால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை என்றும் குடும்பத்துடன் மாநிலத்தைவிட்டே வெளியேறியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

“நான் குறிப்பிடும் நபர்கள் தர்மஸ்தாலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது, ஏனெனில் சிலர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் எதிர்ப்பவர்களை அழிக்கக் கூடியவர்கள். எனக்கும் என் குடும்பத்திற்கும் சட்ட பாதுகாப்பு கிடைத்தவுடன், அனைவரின் பெயர்களையும் அவர்களின் பங்கையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்,” என முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

தனது புகாரை நிரூபிக்கவும் ஆதாரங்களை வழங்கவும், தூய்மைப் பணியாளர் தானே ஒரு கல்லறையை தோண்டினார். பின்னர் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

அவரது வாக்குமூலம் இந்திய பொது பாதுகாப்பு சட்டம் (BNSS) பிரிவு 183-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

நீதிபதியின் முன் ஆஜரானபோது புகார்தாரர் தலை முதல் கால்வரை முழுமையாக கருமையான துணியால் மூடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

விசாரணை மந்தகதியில் நடைபெறுகிறதா?

மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி. தனஞ்ஜய், விசாரணையின் மந்தமான வேகம் கவலையளிக்கிறது என்று கருதுகிறார்.

“புகார் ஜூலை 4-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர், BNSS பிரிவு 183-ன் கீழ் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்தார். ஆனால், எட்டு நாட்களுக்கு மேலாகியும், புகார்தாரரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்ய எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.

“இதுபோன்ற அலட்சியத்தை புரிந்துக் கொள்ளமுடியவில்லை, இது காவல்துறை செல்வாக்கு மிக்க நபர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்பதற்கான முக்கியமான தீவிர அறிகுறியாகும், அல்லது முறையான விசாரணை அல்லது இடங்களை சீல் வைப்பதற்கு முன்பு எந்தவொரு ஆதாரங்களை அகற்றுவதில் அல்லது சேதப்படுத்துவதில் வெற்றிபெற அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் வேறு கருத்து தெரிவிக்கிறார்.

“பொதுவாக, 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் இது, வழக்கு என்னவென்பதை பொறுத்து, விசாரணை அதிகாரியின் (IO) பொறுப்பில் உள்ளது. அதன் பின், விசாரணை நடைமுறையின்படி நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது மேலும் தகவல்களை பகிர முடியாது,” என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

கல்லறையை தோண்டி எச்சங்களை எடுத்த இடத்திற்கு கூட புகார்தாரர் அழைத்து செல்லப்படவில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருண், “முதலாவதாக அவரது புகாரில் இருக்கும் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதி செய்யவேண்டும். அவரே குழியை தோண்டியுள்ளார். அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பதை பார்க்கவேண்டும். அடுத்த கட்டம் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்வதுதான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் புகார்தாரர் ஒரு கல்லறையை தோண்டுவதும் குற்றம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. விசாரணை செய்து உறுதி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் தேவை, ” என கூறினார்.

மீண்டும் திறக்கப்பட்ட பழைய காயங்கள்

தூய்மைப் பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்மணி, 22 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.

அப்பெண் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக இருந்தார். தாயின் கூற்றுப்படி, அவரது மகள் கடைசியாக கோயிலில் காணப்பட்டார்.

அவரது வழக்கறிஞர் மஞ்சுநாத், “அவர் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. இந்த தூய்மைப் பணியாளரின் புகாரின் அடிப்படையில் உடல்கள் தோண்டப்பட்டால், அவற்றின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே அவரது விருப்பம். மகளின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்,” என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

“நான் அந்த மதத் தலத்திற்கு சென்றேன். அங்கு அதிகாரிகளிடம் பேச முயன்றேன்,ஆனால் அங்கிருந்து விரட்டப்பட்டேன். அதன் பின்னர் நான் காவல்நிலையத்திறுல் சென்றேன், அங்கும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அப்பெண்ணின் தாய்.

இது ஒரு தனி வழக்காக பார்க்கப்படுவதாக அருண் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். “இதை அந்த வழக்குடன் இணைக்கமுடியாது. ஆனால் அதுவும் விசாரிக்கப்படுகிறது,” என அவர் சொல்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தூய்மைப் பணியாளரின் குற்றச்சாட்டுகள் நம்பகமானவையா?

தூய்மைப் பணியாளார் 100-க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருப்பதாக கூறியுள்ளார். இது கவனத்தை கவர்வது மட்டுமல்லாது, மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும்.

2012-ல் 17 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மாநிலத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. அப்போது, வி.எஸ். உக்ரப்பா தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை விசாரிக்க ஒரு எம்எல்ஏக்கள் குழு அமைக்கப்பட்டது.

“ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில், 402 பெண்கள் மாயமான வழக்குகளும், 106 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன.” என உக்ரப்பா, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

இந்த குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

1983-ல் தர்மஸ்தாலாவில் நான்கு பெண்கள் காணாமல் போன விவகாரம் கர்நாடக சட்டமன்றத்தில் பெல்தங்கடி எம்எல்ஏ கே. வசந்த பங்கேடாவால், எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு