வெள்ளி விலையில் திடீர் உயர்வு: எவ்வளவு காலம் நீடிக்கும்? முதலீடு செய்யலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா தனது வர்த்தகப் பங்காளிகள் மீது கடுமையான வரிகளை அறிவித்ததில் இருந்து வெள்ளி விலை உயர்ந்து வருகிறதுஎழுதியவர், அஜித் காத்விபதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியர்களுக்கு தங்கம் மீதுதான் மிகுந்த விருப்பம் என கருதப்படுகிறது. ஆனால், இப்போது தங்கத்தைவிட வெள்ளி பற்றிய செய்திகள்தான் அதிகமாக வருகின்றன.

ஜூலை 10 முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்குக் கடுமையான வரிகளை அறிவித்ததால், வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள வெள்ளி விலை, ஒரு கிலோவுக்கு ரூ.1.13 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி விலை ஏழு சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் ஒரு சதவிகிதம்தான் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போது ஒரு அவுன்ஸுக்கு (28.35 கிராம்) 39 டாலர்களை தாண்டியுள்ளது.

ராய்ட்டர்ஸ் அளித்துள்ள தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் வெள்ளி விலை 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஐந்து சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

எனவே, லாபத்தைப் பொறுத்தவரை வெள்ளியில் தங்கத்தைவிட சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு தங்கம் 34 சதவிகிதம் லாபம் ஈட்டியது. ஆனால் வெள்ளி 23 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், இப்போது வெள்ளியின் விலை ஏன் இவ்வளவு உயர்ந்துள்ளது? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? இங்கு தெரிந்துகொள்வோம்.

வெள்ளி விலை உயர்வுக்கான காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வெள்ளி விலை உயர்வுக்கான காரணங்களை விளக்கிய ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சௌமில் காந்தி, “தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகக் கருதி வாங்கிய முதலீட்டாளர்கள் இப்போது வெள்ளியை வாங்குகின்றனர்,” என்று பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக, “தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை மிகவும் நன்றாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுக்கால தரவுகளைப் பார்த்தால், வெள்ளியின் தேவை விநியோகத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் எதிர்காலத்தில், வெள்ளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார் அவர்.

வெள்ளி விலை திடீரென உயர்ந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்குப் பதிலளித்த சௌமில் காந்தி, “ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, பிரேசில் மற்றும் பிற முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது ஆகஸ்ட் 1 முதல் டிரம்ப் வரிகளை அறிவித்துள்ளார். இது ‘பாதுகாப்பான சேமிப்பை வாங்கும்’ நிலைக்கு வழிவகுத்துள்ளது” என்றார்.

டொனால்ட் டிரம்ப் கனடாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 35 சதவிகித வரியையும், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகித வரியையும் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வெள்ளி விலைகள் உடனடியாக உயர்ந்தன. வெள்ளிக் கிழமை, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.13 லட்சத்தைத் தாண்டியது.

“சுத்தமான எரிசக்தி, மின்சார வாகனங்கள் மற்றும் பரந்த தொழில்துறை தேவை காரணமாக வெள்ளி விலைகள் உச்சத்தை எட்டின. தங்கத்தின் ஏற்றமும் வெள்ளி விலை உயர்வுக்கு ஒரு காரணம்” என்கிறார் எல்கேபி செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சி ஆய்வாளர் (பொருட்கள் மற்றும் நாணயம்) ஜதின் திரிவேதி.

கனடா, பிரேசில் உள்ளிட்ட அனைத்து முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கும் 15 முதல் 20 சதவிகிதம் வரை வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதிகரித்த கொள்முதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொழில்துறை தேவைகளுக்காக வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது, ஆனால் விநியோகம் நிலையாக உள்ளது.இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தரவுகள்படி, வெள்ளி எக்ஸ்சேஞ் டிரேடெட் ஃபண்டுகள் மே மாதத்தில் ரூ.800.5 கோடிக்கு வாங்கப்பட்டன. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை ரூ.2,005 கோடியாக அதிகரித்தது.

இந்தியாவில் வெள்ளிக்கான தேவை குறித்து சௌமில் காந்தி கூறுகையில், “முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்களின் தேர்வுகள் மாறிவிட்டன. தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதால், மக்கள் வெள்ளி நகைகளைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. இது தவிர, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெள்ளி எக்ஸ்சேஞ் டிரேடெட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் வேகம் அதிகரித்துள்ளது” என்றார்.

அதோடு, உயர்ந்துள்ள வெள்ளியின் விலை நீண்ட காலம் நீடிக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஏனெனில் இது வெறும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல. விநியோகத்தைவிட தேவை அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இது வெள்ளி விலைகளுக்குச் சாதகமானது மற்றும் அதன் அடிப்படைகளும் வலுவாக உள்ளன.

“வரி ஒப்பந்தத்தில் ஏற்படும் தாமதம் மற்றும் வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக விலையில் ஏற்ற-இறக்கம் காணப்படலாம். விலைகள் குறையும்போது முதலீட்டாளர்கள் வாங்குவதைக் கருத்தில் கொள்ளலாம்” என்று விளக்குகிறார் ஜதின் திரிவேதி.

வெள்ளிக்கான தேவை ஏன் இவ்வளவு அதிகரித்து வருகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூரிய மின்தகடுகள் உள்ளிட்ட தொழில்களில் வெள்ளிக்கு அதிக தேவை உள்ளது.சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை நீண்ட காலமாக அவுன்ஸ் ஒன்றுக்கு 37 டாலர் என்ற அளவைத் தாண்டவில்லை, ஆனால் இப்போது அது 39 டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்கப் பெரும்பாலும் அதிகளவில் வாங்கப்படும் ஓர் உலோகமாக தங்கம் உள்ளது. அதேநேரத்தில் வெள்ளி, நகைகளுக்கு மட்டுமின்றி தொழில் துறை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய வெள்ளி இறக்குமதியாளராக உள்ள அமெரிக்கா, 2024ஆம் ஆண்டில் சுமார் 4,200 டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

சூரிய மின்தகடுகள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் போன்ற துறைகளில் வெள்ளி வாங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த மூன்று துறைகளும் விரைவாக வளர்ச்சி அடைந்ததன் காரணமாக, வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது.

இது தவிர, நீர் சுத்திகரிப்பு மற்றும் சில மருந்துகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா மற்றும் பாசிகள் உருவாவதைத் தடுக்க நீர் வடிகட்டிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தேசிய மருத்துவ நூலகத்தின் அறிக்கைப்படி, வெள்ளியின் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க கட்டுகள் மற்றும் களிம்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளியில் செய்யப்படும் சாதனங்கள் இதய நோய் சார்ந்த சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. எலும்பியல் அறுவை சிகிச்சை, வடிகுழாய்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் கருவிகளிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளிக்கான தேவை, தொழில்துறை நோக்கங்களுக்காக அதிகரித்து வரும் அதேநேரத்தில், அதன் விநியோகம் தேக்கமடைந்துள்ளது.

ICICI ETF அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெள்ளிக்கான தேவையைவிட, 3,339 டன் அளவில் வெள்ளிக்கான பற்றாக்குறை இருக்கும்.

இந்த ஆண்டும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, வெள்ளியின் விநியோகம் தேவையைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 மற்றும் 2024க்கு இடையில், மின்னணுப் பிரிவில் வெள்ளிக்கான தேவை 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளி இடையிலான போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தைவிட வெள்ளி மிக அதிக வருமானத்தை அளித்துள்ளதுதங்கத்தின் விலை இரண்டு மாதங்களுக்கும் மேலாக 3,350 டாலர் மதிப்பைச் சுற்றி வருகிறது. இப்போது வெள்ளியின் விலை தங்கத்தைவிட வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிகிறது.

வெள்ளி விலைகள் மற்றும் தேவை குறித்த வெள்ளி நிறுவனத்தின் அறிக்கை, இந்தியாவில் வெள்ளிக்கான சில்லறை விற்பனை தேவை மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறுகிறது.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சில்லறை வெள்ளி முதலீட்டுத் தேவை 7% அதிகரித்துள்ளது. இது, வெள்ளியின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என்று முதலீட்டாளர்கள் நம்புவதைக் காட்டுகிறது.

தங்கத்தைவிட வெள்ளி வேகமாக உயர்ந்தால், அது தங்கம்-வெள்ளி விலை விகிதத்தைப் பாதிக்கும். ஜனவரி மாதத்தில், தங்கம், வெள்ளி இடையிலான விலை விகிதம் 100ஐ நெருங்கியிருந்தது. அதாவது ஒரு கிராம் தங்கம் வாங்க 100 கிராம் வெள்ளி தேவைப்பட்டது.

தற்போது, தங்கம் மற்றும் வெள்ளி விலை விகிதம் 85 ஆகக் குறைந்துள்ளது. இந்த விகிதத்தின் நீண்டகால சராசரி 65 முதல் 70 வரை உள்ளது. அதாவது, வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதுதான் இதன் பொருள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு