ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக இந்தியாவை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி நிருபர்56 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

யுக்ரேனில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்குமாறு சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ள வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) பொதுச் செயலாளர் மார்க் ரூட், அப்படிச் செய்யவில்லை என்றால் அமெரிக்காவின் தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

மறுபுறம், 50 நாட்களுக்குள் யுக்ரேன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவுக்கு இப்படியொரு எச்சரிக்கை என்றால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

“இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் விளாதிமிர் புதினை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், இந்த மூன்று நாடுகளும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ரூட் ஜூலை 16ஆம் தேதி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நேட்டோ தலைவர் மார்க் ரூட் திங்கள் கிழமையன்று(ஜூலை 14) டிரம்பை சந்தித்தார்மார்க் ரூட்டின் இந்த எச்சரிக்கை குறித்து ஜூலை 17ஆம் தேதி பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி பாதுகாப்பே இந்தியாவிற்கு முன்னுரிமை என்று கூறினார்.

“எண்ணெய் இறக்குமதியில், சந்தை மற்றும் சர்வதேச நிலைமைகளின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இந்த விஷயத்தில் எந்த வகையான இரட்டை நிலைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

மார்க் ரூட்டின் எச்சரிக்கை வெளியான அடுத்த நாள் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால், இந்தியாவுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஏனெனில் நாங்கள் எண்ணெய்க்காக எந்தவொரு நாட்டையும் சார்ந்து இல்லை” என்று கூறினார்.

இந்தியாவின் பிரச்னைகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ரஷ்ய அதிபர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் பேசியும் எந்தத் தீர்வையும் எட்ட முடியவில்லை. புது டெல்லியில் நடைபெற்ற ‘எரிசக்தி உரையாடல் 2025’ மாநாட்டில் பேசிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரி, “எங்களுக்கு எந்த வகையான அழுத்தமும் இல்லை. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி எந்த நாட்டையும் சார்ந்து இல்லை. முழு விஷயத்தைப் பற்றியும் எங்களுக்கு எந்த வகையிலும் கவலையில்லை. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நாங்கள் அதைக் கையாள்வோம். எண்ணெய் விநியோகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.

இந்தியாவும் சீனாவும்தான், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

பெட்ரோலிய அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 88 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. மறுபுறம், இந்தியா, ரஷ்யாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 38 சதவிகிதத்தை வாங்குகிறது.

கடந்த 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்பு, ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது என்று சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸ் தெரிவித்துள்ளது. ரஷ்யா, தனது எண்ணெய் இறக்குமதிக்கு தள்ளுபடிகளை வழங்கியதால், இந்தியாவின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவில் இதற்கு முந்தைய ஜோ பைடனின் ஆட்சியின்போதுகூட, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கும் இந்திய அரசாங்கம் மிகவும் ஆக்ரோஷமாக பதிலளித்தது.

இருப்பினும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, அவர் இந்தியாவிடம் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை எச்சரித்து வரும் டிரம்ப், பிரிக்ஸ் அமைப்புக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருக்கும் பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக டிரம்ப் கருதுகிறார்.

பிரிக்ஸ் நாடுகள் மீது தனித்தனி வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவிகித வரியை விதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட்டர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியா தலை வணங்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதினின் இந்திய வருகை பற்றிய செய்திகள் பல மாதங்களாகவே இருந்து வருகின்றன. ஆனால் இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜன் குமார், தற்போது இந்தியாவின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என்றும், இந்த அழுத்தத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்றும் நம்புகிறார்.

“இந்தியா இரு வேறு சவால்களை எதிர்கொள்ளும். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால், இந்தியாவுக்கு எண்ணெய் மலிவாகக் கிடைக்காது. இதுதவிர, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கும். இதன் பொருள் இந்தியா அதிக விலையில் எண்ணெயை வாங்க வேண்டியிருக்கும், ஆனால் விஷயம் எண்ணெய் பற்றியது மட்டுமல்ல.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா எப்படிப் பெறுவது என்ற சவால் எழும். எனவே, அமெரிக்காவின் இந்த அழுத்தத்தை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்கிறார் முனைவர் ராஜன் குமார்.

இந்தியா அடிபணிந்தால் ரஷ்யா உடனான உறவு பாதிக்குமா?

அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்தால், அது ரஷ்யாவுடனான உறவுகளில் ஏற்படும் தாக்கம் என்ன?

முனைவர் ராஜன் குமாரின் கூற்றுப்படி, “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையிலுமே செயல்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.” ஆனால், இந்தியாவின் நிர்ப்பந்தத்தை ரஷ்யா புரிந்துகொள்ளும் என்றே தான் கருதுவதாக அவர் கூறுகிறார்.

அதேவேளையில், இந்தச் சிக்கல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் இருக்கிறது என்கிறார். “சீனா அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஒவ்வொன்றுக்கும் சீனா பதிலளித்துள்ளது. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Reuters

அதாவது, டிரம்ப் தனது நண்பர்களுடன் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறார். மறுபுறம், அவரது பாணியிலேயே அவருக்கு பதில் அளிப்பவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்கிறார். சீனா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த அரிய மண் தாதுக்கள் மற்றும் செமிகண்டக்டர்களின் விநியோகத்தை நிறுத்தியிருந்தது. ஆனால் இந்தியா, சீனாவை போன்றல்ல.”

ரஷ்யா சீனாவை சார்ந்திருப்பது அதிகரித்து வருகிறது என்ற அச்சம் ஏற்கனவே இருக்கும் சூழ்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்தால், அது சீனாவுக்கு சாதகமாக இருக்குமா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முனைவர் ராஜன் குமார், “ரஷ்யா சீனாவை சார்ந்திருப்பது மேலும் அதிகரிக்கும் என்பது வெளிப்படையானது. அது இந்தியாவுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல. ரஷ்யாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 47 சதவிகிதம் சீனாவுக்கானது என்ற நிலையில், ரஷ்யாவுக்கும் இப்போது சீனாவை தவிர வேறு வழியில்லை.

இப்படிப்பட்ட நிலை இருந்தபோதிலும், சீனா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவது என்பது முற்றிலும் சாத்தியமில்லை. ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் மிகப் பெரியது. ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான நாடாக சீனா இருந்தபோதிலும், அது ரஷ்யாவுக்கு பாதுகாப்பு உபகரணங்களை விநியோகம் செய்வதில்லை” என்று விளக்கினார்.

நேட்டோவின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாக இந்தியா மாறியுள்ளதுரஷ்யாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரும் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான கன்வல் சிபல், நேட்டோ தலைவர் மார்க் ருட்டின் அறிக்கையைத் தனது எக்ஸ் பக்கத்தில் மறுபதிவிட்டு, “நேட்டோ இப்போது இந்தியாவை அச்சுறுத்துகிறது. நேட்டோ தலைவர்கூட, சீனாவை குறிப்பிடுவதற்கு முன் இந்தியா பற்றியே குறிப்பிட்டுள்ளார். இந்தியா, சீனா மற்றும் பிரேசிலை அச்சுறுத்துவதன் மூலம், நேட்டோ தலைவர் புவிசார் அரசியல் ஆழம் குறித்த தனது அறியாமையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்” என்று எழுதியுள்ளார்.

“இந்த மூன்று நாடுகளுக்கும் நேட்டோ அறிவுறுத்தல்களை வழங்குமா? அத்தகைய எச்சரிக்கைகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நேட்டோ பொதுச் செயலாளர் உணரவில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெயை இறக்குமதி செய்வது நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கி. நேட்டோ பொதுச் செயலாளர், துருக்கி மீதும் தடைகளை விதிப்பாரா? நேட்டோ தனது வசதிக்கு ஏற்ப துருக்கி விஷயத்தில் அமைதியாக இருக்கிறது” என்று கன்வல் சிபல் எழுதியுள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் தேவையில் ஏழு சதவிகிம் தற்போதும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா மீதும் தடைகள் விதிக்கப்படுமா? இந்த இரண்டு நாடுகளும் நேட்டோவின் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், இது குறித்து மார்க் ருட் மௌனமாக இருக்கிறார். இது அதிகாரம் சார்ந்த ஏமாற்று வேலை. நேட்டோ எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும், அப்போதுதான் டிரம்புக்கும் செய்தி சென்றடையும்” என்று கன்வல் சிபல் எழுதியுள்ளார்.

யுக்ரேன், ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் விரும்புகிறார், ஆனால் அதற்கு புதின் தயாராக இல்லை. எனவே, ரஷ்யாவை நேரடியாக குறிவைப்பதற்குப் பதிலாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளை டிரம்ப் குறிவைக்கிறார். அதில், சீனாவும் இந்தியாவும் உலகின் இரண்டு முக்கியமான பொருளாதாரங்கள்.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 192 பில்லியன் டாலர் சம்பாதித்தது. இந்த வருமானத்தை இலக்காகக் கொள்ளவே டிரம்ப் முயல்கிறார். ஆனால் அதன் தாக்கம் ரஷ்யாவுக்கு மட்டுமானதாக இருந்துவிட முடியாது. ரஷ்யா நாளொன்றுக்கு 70 லட்சம் பீப்பாய்களுக்கு அதிகமாக எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது, இந்த எண்ணெய் விநியோகம் சீர்குலைந்தால் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேட்டோ உறுப்பினரான துருக்கியே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது. ஆனால் நேட்டோ பொதுச் செயலாளர் துருக்கி பற்றி இன்னும் எதுவும் கூறவில்லை.வாஷிங்டனில் இயங்கி வரும் ஸ்டிம்சன் மைய சிந்தனைக் குழுவின் சீனா திட்டத்தின் இயக்குநரான யுன் சன், அமெரிக்க செய்தி சேனலான சி.என்.என் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் அளவை வேண்டுமானால் சீனா குறைக்கலாம். ஆனால், இது ரஷ்யா மீதான சீனாவின் அணுகுமுறையை மாற்றாது. அமெரிக்காவின் கட்டளைப்படி ரஷ்யா மீது சீனா அழுத்தம் கொடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார்.

மேற்கத்திய நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவாவிடம் பிபிசி கேட்டது.

“இந்தியா இந்த அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது, ஏனெனில் இதுவே அமெரிக்காவின் கடைசி அழுத்தமாக இருக்காது. அவர்களின் கோரிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா விஷயத்தில் இலக்கு நிலை சரி செய்யப்படவில்லை. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது, நாம் அதை வாங்க வேண்டும்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால், எண்ணெய் விலை அதிகரித்து அது இந்திய மக்களை நேரடியாகப் பாதிக்கும். ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், இந்தியாவின் உத்தி கொஞ்சம் மாறிவிட்டதாகத் தெரிகிறது. ஜோ பைடன் ஆட்சியின் கீழ், இந்தியா அமெரிக்காவுக்கு உரிய பதிலை துல்லியமாகக் கொடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்தியா அமைதியாகவே உள்ளது” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

“சீனா தவிர வேறு எந்த நாடும் அமெரிக்காவிடம் உறுதியாகப் பேசவில்லை. டிரம்பின் கோரிக்கைகள் ஒருபோதும் முடிவடையாது. அமெரிக்கா, சுங்க வரி வசூலிப்பது போன்றே வரிகளை விதிக்க நினைக்கிறது. ஆனால் டிரம்ப் நினைத்த எதையும் அவரால் இதுவரை சாதிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளுக்கும், அதில் பெரிய அளவு உடன்பாடு இல்லை. அமெரிக்க மக்கள் இதன் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும்” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு