நிமிஷா பிரியா: ‘பழிக்குப் பழி’ முறையில் கோரப்படும் மரண தண்டனை – ஷரியா சட்டம் கூறுவது என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டில் நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு மன்னிப்பு வாங்கித் தருவதற்கான முயற்சிகளில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

ஏமன் நாட்டு குடிமகனான தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தலால் மஹ்தியின் உடல் தண்ணீர் தொட்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. 34 வயதான நிமிஷா பிரியா தற்போது ஏமன் தலைநகர் சனாவில் அமைந்திருக்கும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிமிஷாவுக்கு 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மரண தண்டனை என்ற அந்தத் தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் தண்டனையை ஒத்தி வைப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபதா மஹ்தி பிபிசி அரபி சேவையிடம் பேசியபோது மன்னிப்புக்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “இந்த வழக்கில் மன்னிப்பு தொடர்பாக நாங்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் ஷரியா சட்டத்தின் கீழ் இருக்கும் கிசாஸ் பின்பற்றப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கிசாஸ் என்றால் என்ன?

படக்குறிப்பு, நிமிஷா பிரியா டோமி தாமஸ் என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கிசாஸ் என்பது ஓர் அரபி வார்த்தை. அதன் பொருள் வஞ்சம் அல்லது வன்மம். இஸ்லாத்தை பொறுத்தமட்டில், ரத்தக் காயங்களை உண்டாக்கும் வகையிலான குற்றங்களில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்குப் பொருந்தும் ஒரு தண்டனைதான் இந்த கிசாஸ்.

எளிமையாகக் கூற வேண்டுமெனில், ஒரு உயிருக்கு ஈடாக மற்றொரு உயிர். பழிக்குப் பழி என்பதே இதன் அடிப்படை. அதாவது, ஒருவர் மற்றொருவருக்கு வலியை உண்டாக்கினால், அந்தச் செயலில் ஈடுபட்ட நபரும் அதே வலியை உணர வேண்டும். அதற்கு குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் வழங்கப்படும் தண்டனை வகை இது.

வழக்கறிஞராகப் பணியாற்றும் முஃப்தி ஒசாமா நத்வி, “கிசாஸ் என்பது இஸ்லாத்தில் நீதிக்கான ஒரு கொள்கை. இது வேண்டுமென்றே கொலை அல்லது காயப்படுத்துவதற்கான தண்டனை சமமாகவும் நியாயமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது,” என்று விளக்குகிறார்.

கிசாஸ் என்ற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இந்தச் சொல், பொதுவாகப் பின்தொடர்வது அல்லது கண்காணிப்பது எனப் பொருள்படுகிறது. இஸ்லாமிய சட்டத்தைப் பொறுத்தவரை இதன் பொருள் வேண்டுமென்றே கொலை செய்வது அல்லது ஒருவரைக் காயப்படுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சமமாக தண்டனை வழங்குவதைக் குறிப்பதாகும்.

குர்ஆனில் பல இடங்களில் கிசாஸ் குறிப்பிடப்பட்டு இருப்பதாக அவர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக சுரா அல்-பகராவில், வசனம் 178இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

“மரண வழக்கில் உணக்கு கிசாஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.”

“விடுதலைக்கு விடுதலை, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்.”

“தனது தமையனுக்காக சகோதரர் ஒருவர் மற்றொருவரை மன்னிக்கிறார் என்றால், மன்னிப்பைப் பெற்றவர் அதை நன்மையுடன் பின்பற்றி நல்ல முறையில் தனது கடமைகளைச் செலுத்த வேண்டும்.

இது கடவுளிடம் இருந்து கிடைக்கும் கருணை. ஆனால் அதன் பிறகு ஒருவர் அதை மீறினால் வலிமிகுந்த தண்டனை அவருக்குக் காத்துக் கொண்டிருக்கிறது.”

அடுத்த வசனம், “கிசாஸில் உனக்கு வாழ்க்கையும் இருக்கிறது. மக்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் காப்பற்றப்படலாம். (அதனால் இந்தச் சமூகத்தில் மரணம் தொடர்பான அச்சம் தொடர்ந்து நீடிக்கும்).

மரண தண்டனையில் இருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு ஏதேனும் வழி உள்ளதா?

படக்குறிப்பு, நிமிஷாவின் கணவர் கிசாஸ் கொள்கைகளில் மன்னிப்பு மற்றும் இழப்பீடுக்கான வாய்ப்புகள் இருப்பதாக முஃப்தி ஒசாமா நத்வி கூறுகிறார். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த தீர்வைத் தேர்வு செய்தால் மட்டுமே அது சாத்தியம்.

அதில், குருதிப் பணம் (ப்ளட் மணி) என்பது ஒரு பகுதி. மஹ்தியின் குடும்பத்தினர் விரும்பினால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு நிமிஷா பிரியாவை மன்னித்துவிடலாம்.

அல்-ஏமன்-அல்-காத் செய்திகளில், நிமிஷாவின் வழக்கறிஞர்கள், ஷரியா சட்டத்தின்படி, 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குருதிப் பணமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதில் முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

பெண் என்பதால் அவருக்கான தண்டனையில் இருந்து விலக்கோ அல்லது மன்னிப்போ கிடைக்குமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முஃப்தி ஒசாமா, “பழிக்குப் பழி என்பதுதான் இங்கே இருக்கும் கொள்கை. ஒருவர் மற்றொருவரின் கண்ணை குத்தினால், அந்த குற்றச் செயலில் ஈடுபட்டுவருக்கும் அதே தண்டனை வழங்கப்படும். இதில் ஆண் பெண் பேதமில்லை,” என்றார்.

ஆனால் மனிதாபிமான அடிப்படையிலும் சில தண்டனைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு குற்றம் செய்த நபர் பாலூட்டும் தாய்மார் என்றால், அவரது குழந்தை வளரும் வரை அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இது எந்தவொரு நாட்டின் சட்டமும் இல்லை. இது குர்ஆனின் சட்டம். இருப்பினும், இதைப் பின்பற்ற ஒரு நாடு இஸ்லாமிய நாடாகவும், அது ஷரியாவை பின்பற்றும் நாடாகவும் இருக்க வேண்டும்.

தற்போது நிமிஷாவை காப்பாற்ற கையில் இருக்கும் ஒரே வழி மஹ்தியின் குடும்பத்தினர் அவரை மன்னிப்பதுதான்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நடந்தது என்ன?

நிமிஷா பிரியா கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து ஏமனுக்கு செவிலியராக பணிக்குச் சென்றார்.

தலால் அப்தோ மஹ்தி கொலைக்குப் பிறகு நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏமன் குடிமகனான மஹ்தி நிமிஷாவுடன் சேர்ந்து கிளினிக் ஒன்றைத் துவங்கியிருந்தார்.

நிமிஷா மீது வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிமிஷா மறுத்துள்ளார். மேலும் அவரின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் வாதிடும்போது மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரிடம் இருந்த பணத்தையும் பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுவதற்காகவே மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்ததாகவும், ஆனால் தவறுதலாக அதன் அளவு அதிகரித்துவிட்டதாகவும் கூறினார் அவர். தற்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபதா மஹ்தி இந்த குற்றச்சாட்டுகளை பொய் என்று மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ஆதாரமற்றவை என்று கூறிய அவர், “நிமிஷா பிரியா மஹ்தி அவருடைய பாஸ்போர்ட்டை பறித்து வைத்திருந்தார் என்று கூறவில்லை,” என்று குறிப்பிடுகிறார். தலால் நிமிஷாவிடம் இருந்து பணம் பறித்ததாகக் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வதந்தி என்று கூறுகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து நிமிஷாவின் குடும்பத்தினர் ஏமன் நாட்டு உச்சநீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவரது மேல் முறையீடு 2023ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹ்தி அல்-மஷாத் நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்தார். அவர் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கான உச்ச அரசியல் குழுவின் தலைவராக உள்ளார்.

ஏமனின் இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் கீழ், அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மஹ்தியின் குடும்பம்தான். அவர்கள் விரும்பினால், ‘குருதிப் பணத்தை’ பெற்றுக் கொண்டு நிமிஷாவை மன்னிக்கலாம்.

வீட்டு வேலை செய்து வந்த நிமிஷாவின் அம்மா 2024ஆம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருந்து, தனது மகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அரசாங்கம் செய்தது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு டிசம்பரில் நிமிஷாவின் குடும்பம் இந்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி கொடுத்தது.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “இந்திய அரசாங்கம் நிமிஷா பிரியா வழக்கில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. அமைச்சகம் அவரது குடும்பத்தாருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்துள்ளது,” என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், “நிமிஷாவை வழக்கறிஞர் தொடர்ச்சியாக இடையூறின்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.

“சமீபத்திய நாட்களில் அவரின் குடும்பத்தினருக்குக் கூடுதல் நேரம் தருவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் மற்ற தரப்பினருடன் பரஸ்பர ஒப்புதலின் மூலம் ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அதோடு, “இந்திய அரசாங்கம் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும், நட்பு நாடுகளுடனும் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு