சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். 

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று இருந்தனர். 

அதன் போது விகாரை வளாகத்தினுள் , கட்டட ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது. 

விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில் , புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. 

இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.