‘கீழடியில் என்னுடைய காலக் கணிப்பு சரியானது, அதை மாற்ற மாட்டேன்’ – பிபிசி தமிழுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி

படக்குறிப்பு, இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார்.எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 நிமிடங்களுக்கு முன்னர்

தான் அளித்த கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை மாற்றப்போவதில்லை என அங்கே முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.

மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது.

தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 – 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.

தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் வெளிவந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, வேறொரு கண்காணிப்பாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வு நடந்தது.

இதற்குப் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. தமிழ்நாடு அரசு, பல கட்டங்களாக கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

கீழடியில் மூன்று பண்பாட்டு காலகட்டங்கள்

பட மூலாதாரம், Archaeological Survey of India

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது.

கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது. குறிப்பாக, “முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும்.

முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிகிறது. அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்று இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மேலும் சில விஷயங்கள் குறித்தும் தொல்லியல் துறை சில திருத்தங்களைச் செய்யும்படி கோரியிருந்தது.

கீழடியின் பழமையைக் கண்டுபிடிக்க செய்தது என்ன?

பட மூலாதாரம், keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு, கீழடி அகழாய்வுத் தளம் – வான்வழிப் பார்வைஅமர்நாத் ராமகிருஷ்ணாவைப் பொறுத்தவரை, ஒரு தொல்லியல் தளத்தில் காலத்தை முடிவுசெய்ய ஏஎம்எஸ் முறை மட்டுமே இறுதியானதோ, போதுமானதோ அல்ல.

“அகழாய்வு அறிக்கை என்பது அடிப்படையில், நாம் என்னெவெல்லாம் அகழாய்வு செய்திருக்கிறோமோ அதனைத் தொகுத்துத் தரும் அறிக்கைதான். எவ்வாறு கீழடி கண்டுபிடிக்கப்பட்டது, அதன் முக்கியத்துவம் என்ன, ஏன் அதனைத் தேர்ந்தெடுத்தோம், அகழாய்வை எந்த முறையில் மேற்கொண்டோம் என்ற விவரங்கள் இருக்கும்.

இரண்டாண்டுகளில் மொத்தம் 102 குழிகள் அகழாய்வு செய்யப்பட்டன. அதில் என்னென்ன கிடைத்தன என்பதைத்தான் விரிவான அறிக்கையாகக் கொடுத்திருக்கிறேன். காலக் கணிப்பைப் பொறுத்தவரை, அங்கு கிடைத்த மண்ணடுக்குகளின் (stratigraphy) அடிப்படையில் காலங்கள் கணிக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் மேட்டைப் பொறுத்தவரை ஆறு மீட்டருக்கு பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண்ணடுக்குகளைக் கொண்ட ஒரு தொல்லியல் மேடு.

அந்த ஆறு மீட்டரில் கீழ் பகுதி எப்போது உருவானது, மேல் பகுதி எப்போது முடிவடைந்தது என்பதை காலக் கணிப்பு செய்ய வேண்டும். இதற்கு தொல்லியல் துறையில் மண் அடுக்குகளின் அடிப்படையில் காலத்தை முடிவுசெய்ய வழிமுறைகள் உள்ளன. இந்த முடிவுக்கு, அங்கு கிடைத்த கரிமப் பொருளின் மீது மேற்கொள்ளப்படும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு துணை நிற்கும். ஒரு இடத்தின் காலத்தைக் கணிக்க ஏஎம்எஸ்சும் ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே போதாது. மண் அடுக்குகள்தான் முக்கியமானவை” என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையில் கீழடியின் துவக்க காலகட்டம் (Early Phase) கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கீழடி அவ்வளவு பழமையான இடமாக இருக்க முடியாது எனவும் அதிகபட்சம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது.

“அகழாய்வில் கிடைத்த தரவுகள்தான் அந்த இடம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற முடிவைச் சொல்கின்றன. நான் என் விருப்பப்படி அதைச் சொல்ல முடியாது. அகழாய்வு செய்யும்போது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய களக் குறிப்பேட்டில் (Site Notebook) எல்லாவற்றையும் ஆவணப் படுத்துவோம்.

அதைத் தவிர, அங்கே வரைபடம் வரைபவர் ஒருவரை வைத்து வரைபடங்கள் வரையப்படும். அங்கே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, அந்த அடுக்குகள் எப்படி இருக்கின்றன என்பதெல்லாம் பதிவுசெய்யப்படும். இவை எல்லாவற்றையும் ஆவணப் படுத்தி அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் காலக்கணிப்பு செய்யப்படுகிறது. அங்கு கிடைத்த மண் அடுக்குகள், தொல் பொருட்கள்தான் காலக் கணிப்பைச் சொல்கின்றன” என்கிறார் அமர்நாத்.

கீழடியின் முதல் காலகட்டம் 2,800 – 2,500 ஆண்டுகள் பழமையானது என சொல்வது ஏன்?

படக்குறிப்பு, அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.ஆனால், இந்தியத் தொல்லியல் துறையைப் பொறுத்தவரை, அமர்நாத் ராமகிருஷ்ணா தன் முடிவுகளை ஏஎம்எஸ் காலக் கணிப்பின்படி உறுதிசெய்திருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

“எல்லா அடுக்குகளிலும் கரிமப் பொருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல கரிமப் பொருட்களை எடுத்த உடனே ஆய்வுக்கு அனுப்பினால்தான் அதன் காலம் சரியாக இருக்கும். அதனை ஐந்தாறு வருடம் வைத்து அனுப்பினால் மாசுபட்டுவிடும். அதில் கிடைக்கும் காலமும், பண்பாட்டு அடுக்கில் கிடைக்கும் காலமும் ஒத்துப்போகாது. இதையெல்லாம் ஆராய்ந்துதான் கடைசியில் ஒரு முடிவுக்கு வருவோம்.

நாங்கள் தோண்டிய 102 குழிகளில் 88 கரிம மாதிரிகள் கிடைத்தன. இவற்றில் 23 மாதிரிகளைத்தான் என்னால் காலத்தை கணிக்கும் ஆய்வுக்கு அனுப்ப முடிந்தது. 2017ல் 2 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. 2020 6 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழகத் தொல்லியத் துறை 10 மாதிரிகளுக்கு நிதி உதவி அளித்தது.

அவற்றை 2023ல் ஆய்வுக்கு அனுப்பினோம். ஆகவே பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இப்படி பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பும்போது, அதில் மாசுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எடுத்த உடனேயே ஆய்வுக்கு அனுப்பும்போதுதான் நம்மால் காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை. அப்படி கிடைக்கும் காலக் கணிப்பையும் மண் அடுக்குகளோடு ஒப்பிட்டுத்தான் காலத்தை கணிப்போம். இறுதியில் மண் அடுக்குகள்தான் பேசும்.

உதாரணமாக, கீழடியில் ஆறு மீட்டருக்கு மண் அடுக்குகள் இருந்தன. இதில் 3 மீட்டரில் கிடைத்த கரிமத்தை சோதித்தபோது, கி.மு. 300 என காலம் வந்தது. எனக்குப் பின்பாக தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைக்கிறது. 6 மீட்டர் அளவுக்கு மண் அடுக்குகள் உள்ள பகுதியில், மூன்றரை மீட்டரில் கிடைத்த கரிமம், கி.மு. 580 எனக் காட்டினால், அதற்குக் கீழுள்ள பகுதி இன்னும் பழமையானதாகத்தானே இருக்கும்? ஆகவே, தொல்லியலில் எப்போதுமே மண் அடுக்குகளும் அதில் கிடைக்கக்கூடிய பண்பாட்டு தொல் எச்சங்களும்தான் முக்கியம்.

கீழடியின் முதல் காலகட்டத்திற்கு கி.மு. 800 முதல் கி.மு. 500 ஏன் கொடுக்கப்பட்டது என்று ஒருவர் கேட்கலாம். அந்த காலகட்டம்தான் ஒரு நகரம் உருவாவவதற்கு முந்தைய ஒரு காலம் இருந்திருக்கிறது. கறுப்பு – சிவப்பு வண்ணப் பானைகள் கிடைத்தன. பெருங்கற்காலத்தில் கிடைத்த பானைகளோடு ஒத்துச் செல்லக்கூடிய பானைகள் அவை. மேலும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்தன. ஆனால், அதற்காக அது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பகுதி எனச் சொல்லிவிட முடியாது.

தங்கள் முன்னோர்களின் நினைவாக அந்தக் கருவிகளை வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல முடியும். அதேபோல, கட்டடங்கள் வருவதற்கு முன்பாக கூரை வீடுகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. இதைவைத்துத்தான் கீழுள்ள பகுதி கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலமாக இருந்திருக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து அந்தப் பகுதி வீழ்ச்சியடைத் துவங்கியது. அதற்குப் பிந்தைய தரவுகள் கிடைக்கவில்லை” என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

கரிமப் பொருள் கிடைக்காமல், காலத்தை நிர்ணயித்தது எப்படி?

பட மூலாதாரம், keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு, இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார்.தவிர, கீழடியில் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏஎம்எஸ் ஆய்வு செய்யத்தக்க கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை என்கிறார் அமர்நாத்.

“நாங்கள் தோண்டிய குழிகளில் ஆறு மீட்டர் ஆழத்தில் கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனால், கரிமப் பொருளின் மீது செய்யப்படும் ஏஎம்எஸ் சோதனையின் முடிவுதான் இறுதியானதெனச் சொல்ல முடியாது.

அப்படியே ஏஎம்எஸ்ஸை ஏற்றுக்கொள்வோம் என்றால், தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைத்ததே? அப்படியானால் ஆறு மீட்டர் ஆழத்திற்கு எந்தக் காலத்தைக் கொடுப்பது? கண்டிப்பாக, இதைவிட பின்னோக்கித்தானே இருக்க முடியும்?

கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலகட்டத்தில் ஒரு நகரம் உருவாவதற்கான தன்மை அங்கே இருந்திருக்கிறது என எங்கள் முடிவுகள் சொல்கின்றன. பல்வேறு விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து எங்கள் கால கணிப்பை அளித்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. இந்த காலக் கணிப்போடு, தனித்த கரிமப் பொருளின் காலக் கணிப்பையும் இணைப்போம். தனித்த கரிமப் பொருளின் ஏஎம்எஸ் காலக் கணிப்பை மட்டும் துல்லியமானது எனச் சொல்ல முடியாது” என்கிறார் அவர்.

இந்த அறிக்கை குறித்து இந்தியத் தொல்லியல் துறை எழுப்பிய பிற கோரிக்கைகளை எளிதில் செய்துவிட முடியும் என்று கூறும் அமர்நாத், கீழடியின் காலம் குறித்த கணிப்பை மாற்ற முடியாது என்கிறார்.

“இலக்கணப் பிழைகள், படங்களில் உள்ள தவறுகளை பதிப்பிற்குப் போவதற்கு முன்பாக செய்ய தயாராக இருக்கிறோம். அதைச் சரிசெய்திருக்கிறோம். பெயர்களை (nomenclature) மாற்ற வேண்டும் என்கிறார்கள். pre என்பதை early எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். அதையெல்லாம் செய்யலாம். ஆனால், காலத்தை மாற்றியமைக்கச் சொன்னால் அது முடியாது.

அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது. அப்படி மாற்றியமைக்க வேண்டுமானால் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். அதில் என்ன கிடைக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதில் வேறு ஒரு காலக் கணிப்பு கிடைக்கலாம். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டிருக்கும் அகழாய்வின் முழுமையான முடிவுகள் வரும்போது அவர்கள் என்ன காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்” என்கிறார்.

சிந்துச் சமவெளி அகழாய்வில் கரிமப் பொருள் ஆய்வு செய்யப்பட்டதா?

பட மூலாதாரம், keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு, கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்)மேலும் சிந்துச் சமவெளியின் காலம் எந்த ஏஎம்எஸ் முறையின் கீழ் இறுதிசெய்யப்பட்டது எனக் கேள்வியெழுப்புகிறார் அமர்நாத்.

“சிந்துச் சமவெளி அகழாய்வை ஜான் மார்ஷல் மேற்கொள்ளும்போது ஏஎம்எஸ் முறையே கிடையாது. அப்புறம் எப்படி சிந்துச் சமவெளி கி.மு. 2,500 ஆண்டைச் சேர்ந்தது என எப்படிச் சொல்லப்பட்டது? சிந்துச் சமவெளி நாகரீகத்தைப் பொறுத்தவரை அது ஹரப்பா, மொஹஞ்சதாரோவோடு நிற்கவில்லை. பல இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எல்லா இடங்களிலும் மண் அடுக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு கிடைத்த கலாசார, தொல் பொருட்கள் எப்படி பிற இடங்களோடு ஒத்துப்போகின்றன என்று ஆராயப்பட்டது.

தமிழ்நாட்டில் காவிரி பூம்பட்டினம், புதுச்சேரி அரிக்கமேடு போன்ற வாழ்விடப் பகுதிகளில் நடந்த அகழாய்வில் இதுபோல விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதைத் தவிர்த்து அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் எல்லாமே இறந்தவர்களைப் புதைத்த இடங்கள்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதன் முதலில் கொற்கை அகழாய்வில்தான் ஏஎம்எஸ் முறையில் காலக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் கி.மு. 785ஆம் ஆண்டு எனக் கிடைத்தது. ஆனால், அந்தக் காலக் கணிப்பு ஏற்கப்படவில்லை. அந்த இடம் கி.மு. 300ஐச் சேர்ந்தது என்றுதான் குறிப்பிட்டார்கள்.

வைகை நதிக் கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளைக் கண்டுபிடித்தோம். தேனி மாவட்டத்தில் டொம்பிச்சேரி பகுதியை அகழாய்வு செய்ய கேட்டிருந்தோம். எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது தமிழ்நாடு அரசு பல இடங்களில் செய்கிறார்கள். அகரம், கொந்தகை, வெம்பக்கோட்டை போன்ற இடங்களில் அகழாய்வு செய்கிறார்கள். இங்கு கிடைக்கும் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்” என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”கீழடி அறிக்கையில் குறிப்பிடும் காலத்தை மாற்ற முடியாது”: அமர்நாத்

கீழடியின் காலத்தை மேலும் மேலும் கீழே கொண்டுசெல்வது ஒரு குறுங்குழுவாத மனப்பான்மை என்று சொல்வதை புறக்கணிக்கிறார் அமர்நாத்.

“நாங்கள் எல்லாவற்றையுமே அகழாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் தான் கணித்திருக்கிறோம். ராக்கிடி உட்பட இதற்கு முந்தைய எல்லா காலக் கணிப்புகளும் ஏஎம்எஸ் முறைப்படி செய்யப்பட்டவை அல்ல. எல்லாமே இந்தியத் தொல்லியல் துறையின் நெறிமுறைப்படுத்தப்பட்ட காலக் கணிப்பு முறைகளின் அடிப்படையில்தான் கணிக்கப்பட்டிருக்கின்றன.

அதே முறையில்தான் இங்கேயும் கணித்திருக்கிறோம். இங்கே கூடுதலாக ஏஎம்எஸ் கணிப்பும் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நடந்த ஆய்வுகளில் எப்படி காலக் கணிப்பு செய்யப்பட்டதோ, அப்படித்தான் இங்கேயும் செய்யப்பட்டிருக்கிறது. வேறெந்த புதிய முறையிலும் இதனைச் செய்யவில்லை” என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

மேலும், ஒரு அகழாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அந்த அகழாய்வாளருடன் நடக்கும் விவாதத்தில்தான் சந்தேகங்கள் கேட்பது, விளக்கங்கள் கேட்பது போன்றவை நடைபெறும் எனக் குறிப்பிடும் அமர்நாத் ராமகிருஷ்ணன், இதுபோல கடிதம் அனுப்பப்பட்டதில்லை என்கிறார். மேலும், அறிக்கையில் உள்ள காலக் கணிப்பை மாற்றப்போவதில்லை என்கிறார் உறுதியாக.

“நான் கேட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை அளித்துவிட்டேன். எப்போதுமே விளக்கம் கேட்பது என்பது, ஒரு விவாதத்தில்தான் கேட்கப்படும். இதுபோல எழுத்துப் பூர்வமாக கேட்க மாட்டார்கள். என் அறிக்கையை கொடுத்து, அதில் பிரச்னை இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டினால், அதனை விளக்குவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும்.

பொதுவாக அப்படித்தான் நடக்கும். அதற்கு விளக்கம் அளிப்போம். அந்தத் திருத்தங்களைச் செய்து அச்சுக்கு அனுப்புவோம். இனி என் அறிக்கை மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். ஏனென்றால், இப்போது சொல்லப்பட்ட முடிவு ஒரு அகழாய்வின் முடிவு. அது சரியில்லை என்றால் மீண்டும் அகழாய்வு செய்து ஒரு அறிக்கையை அளியுங்கள். இதைத் தவிர வேறு ஏதும் நான் சொல்ல முடியாது” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு