Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், ESO/O. Hainaut
படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிக பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, அறிவியல் மற்றும் காலநிலை செய்தியாளர்50 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான விண்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தை விட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது.
இதுபோன்று நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை மூன்றாவது முறையாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
டர்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்தின் ராயல் வானியல் சங்கத்தின் தேசியக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதற்கட்ட கண்டுபிடிப்புகள் அளிக்கப்பட்டன.
“நாங்கள் அனைவரும் 3I/Atlas பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்”என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையேயான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன்.பின்னர், எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு பொருளைக் கண்டுபிடித்தோம்,” என்று அவர் கூறினார்.
3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.
மேலும், இதுவரை காணப்பட்ட விண்மீன்களுக்கு இடையேயான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது, அப்போது அது சூரியனிலிருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது.
இப்போது, மிகப் பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்தப் பொருள், பூமியிலிருந்து வியாழன் கோளின் தூரத்தில் உள்ளது.
அந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையை கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
அது பால்வீதியின் “தடிமனான வட்டில்” (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ்.
அந்த பகுதியில், பண்டைய நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியின் மேலும் கீழும் சுற்றி வருகின்றன.
பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது விண்மீன் மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Matthew Hopkins
படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் இது சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியிலிருந்து வந்த பொருள்,’ என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட்.
“இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தை விட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விண்மீன்களுக்கு இடையேயான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், “அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்த தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது” என்று கூறுகிறார்.
இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியிலிருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/’ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்திவாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையேயான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு