‘கருணாநிதியின் உதவி, ஏசி வசதி’ – காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியதில் உண்மை உள்ளதா?

பட மூலாதாரம், Kamarajarudan kaal nootrandu

எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்17 ஜூலை 2025, 13:52 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

“காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கருணாநிதி” என தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம் காமராஜர் கேட்டுக் கொண்டதாகவும் திருச்சி சிவா பேசினார். “இது உண்மைக்குப் புறம்பானது” என காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமராஜர் தொடர்பாக திருச்சி சிவா பேசிய கருத்தில் உண்மை உள்ளதா?

சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 15) தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளும் அதேநாளில் வந்ததால் அவர் குறித்து சில தகவல்களை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பகிர்ந்துகொண்டார்.

திருச்சி சிவா பேசியது என்ன?

பட மூலாதாரம், Tiruchi Siva

படக்குறிப்பு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா”எனக்கு 23, 24 வயது இருந்தபோது நிறைய நிகழ்வுகளை கருணாநிதி கூறுவார். காமராஜர் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்ததாகக் கருணாநிதி என்னிடம் கூறினார்.”

ஆனால், “அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி காமராஜர் கண்டனக் கூட்டம் நடத்துவதாகவும் அவர் நம்மை எதிர்த்துப் பேசுவதாகவும்” கருணாநிதி கூறியதாக அவர் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் காமராஜரை கைது செய்ய முடியவில்லை. அப்போது திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அவர் கிளம்பினார். அப்போது முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு சென்றது.”

‘காமராஜரை போக வேண்டாம்’ என, முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாகவும் ‘நான் தி.மு.க அல்ல, காங்கிரஸ்காரன். என்னைப் போக வேண்டாம்’ எனக் கூற இவர் யார்?’ என காமராஜர் கேட்டதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டுப் பேசினார்.

அதோடு, “தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் வரை காமராஜரை நான் பாதுகாப்பேன் எனக் கருணாநிதி கூறியபோது, இவ்வளவு பெரிய உள்ளம் கொண்டவரா என காமராஜர் நெகிழ்ந்தார். தனது உயிர் போகும்போது, ‘நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என கருணாநிதியிடம் அவர் கூறினார்” எனவும் திருச்சி சிவா பேசினார்.

எளிய முதலமைச்சராக அறியப்பட்ட காமராஜர் குறித்தும், காமராஜர் – கருணாநிதி நட்பு குறித்தும் திருச்சி சிவா கூறிய கருத்துகள், அரசியல்ரீதியாகப் பேசுபொருளாக மாறியது.

‘தி.மு.க பரப்பிய கட்டுக் கதைகள்’ – ஜோதிமணி எம்.பி

பட மூலாதாரம், jothiiyc/Facebook

படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி “திருச்சி சிவா ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, கரூர் எம்.பி ஜோதிமணி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் திருச்சி சிவாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிமணி எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சராக இருந்தபோது அரசினர் விடுதியில் தங்கியிருந்த காமராஜர், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறியது உண்மைக்குப் புறம்பானது” எனக் கூறியுள்ளார்.

காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள ஜோதிமணி, “காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. ஆனால், அது அவரது சொந்த மாளிகை என தி.மு.க பரப்பிய கட்டுக்கதைகளால் தேர்தல் நேரத்தில் அவர் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆனால் அவர், “தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

விளக்கம் அளித்த திருச்சி சிவா – ஆனால்?

பட மூலாதாரம், Kamarajarudan kaal nootrandu

படக்குறிப்பு, காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதிதனது பேச்சுக்குக் கண்டனம் எழுவதைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருச்சி சிவா, “காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நான் பேசியதாக விவாதங்கள் வலுத்து வருகின்றன. எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றி நான் கண்ணியத்தோடு விமர்சிப்பதை அனைவரும் அறிவார்கள்” எனக் கூறியுள்ளார்.

“மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு ஏற்படுவதை எந்த வகையில் யார் செய்தாலும் அதை ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல” எனக் கூறியுள்ள திருச்சி சிவா, “காமராஜர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். என் உரையில் நான் கூறிய செய்தியை மேலும் விவாதப் பொருளாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

அறிக்கையில் தான் பேசிய கருத்து தொடர்பாக எந்த மறுப்பையும் திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. ஆனால், இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டே காமராஜர் பிறந்தநாளன்று தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவை தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் பலரும் தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கருணாநிதியின் ஃபேஸ்புக் பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம், facebook/pg/Kalaignar89

அந்தப் பதிவில், “முதன்முதலாக காமராஜருக்கு சிலை வைத்த பெருமை, தி.மு.க பொறுப்பில் இருந்த சென்னை மாநகராட்சியையே சாரும்” எனக் கூறியுள்ளார்.

காவிரி பிரச்னை, எமர்ஜென்சி போன்றவற்றில் ஒவ்வொரு முடிவுக்கு முன்பும் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் காமராஜரின் வீட்டுக்குச் சென்று கருத்துகளைக் கேட்டு அவ்வாறே செயல்பட்டு வந்ததாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

காமராஜருக்கு குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தது பற்றிப் பதிவிட்டுள்ள கருணாநிதி, “தி.மு.க அரசு பதவிக்கு வந்த பிறகு கடும் சுற்றுப் பயணத்தை காமராஜர் மேற்கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க செயலாளர்கள், ‘ஏ.சி இல்லாமல் அவரால் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை அவருக்கு உள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றனர்.

உடனே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ‘அவர் அதிகாரத்தில் இல்லையே எனப் பார்க்கக்கூடாது. நாமெல்லாம் அதிகாரத்தில் வருவதற்கு அவர் வழிவிட்டவர். நீங்கள் யாரும் சுணங்கக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஆம்பூரில் காமராஜர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றையும் கருணாநிதி தனது பதிவில் மேற்கோள் காட்டியுள்ளார்.

‘பேசிய பேச்சுக்குப் பரிகாரம்’ – கருணாநிதி

‘கூட்டத்துக்கு நேரமாகிவிட்டது’ எனக் கூறி கட்சிக்காரர்கள் அவரை அழைத்தனர். அதற்குப் பதில் அளித்த காமராஜர், ‘கருணாநிதியை திட்டுவதற்குத்தானே கூப்பிடுகிறாய். அவர்தான் ஊருக்கு ஊர் ஏ.சி வைத்துக் கொடுத்திருக்கிறார். அதை அனுபவித்துவிட்டு திட்டச் சொல்கிறாய்’ என்று அவர் பேசியதாகவும் தனது பதிவில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதே பதிவில் காமராஜரை தான் எதிர்த்து அரசியல் செய்ததைக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, “இந்தப் பாராட்டுகள், சிறப்புகள் எல்லாம் நான் அரசியலில் காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுகள், ஈடுபட்ட செயல்களுக்குப் பரிகாரமாக என்னை மாற்றுகின்ற அளவுக்கு இருந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘அதுவே அவரது கடைசி நிகழ்ச்சி’

‘குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா?’ என்பது தொடர்பாக, அவரது இறுதிக் காலம் வரை உதவியாளராக இருந்த வைரவன் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

‘காமராஜருடன் கால் நூற்றாண்டு’ என்ற தலைப்பில் வெளியான அந்தப் புத்தகத்தில் காமராஜரின் இறுதி நாட்கள், கருணாநிதி உடனான நட்பு ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

அதில், “இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தால் காமராஜர் மட்டுமல்ல, இந்திய அரசியலே ஆடிப் போனது. தன்னைப் பற்றி காமராஜர் கவலைப்படவில்லை. நாட்டுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலையில் மூழ்கினார்” எனக் கூறியுள்ளார்.

“மனக் கவலை எந்த ஆரோக்கியமான மனிதரையும் வீழ்த்திவிடும். ஆனால் காமராஜருக்கோ சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருந்தன” எனக் கூறியுள்ள வைரவன், “இதனால் அவரது உடல்நலம் மிக விரைவாக பாதிக்கப்பட்டது” என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“அதுவரை மாடியில் தூங்கி வந்தவர், கீழ்தளத்தில் தூங்கத் தொடங்கினார். ‘நான் பழையபடி எழுந்து நடப்பேனா?’ என மருத்துவர்களிடம் கேட்டார். எப்படியோ குணம் பெற்று நடமாடத் தொடங்கினார்” என்றும் காமராஜர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் வைரவன்.

பட மூலாதாரம், Tiruchi Siva

காமராஜர், 1975, ஜூலை 15 ஆம் தேதி தனது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடியதாகக் கூறியுள்ள வைரவன், “அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜிக்கு பிறந்தநாள். அதுவே அவரது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“மறுநாள் (அக்டோபர் 2) காந்தியின் பிறந்தநாள். காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் இருந்தனர். அடுத்த தேர்தல் வரப் போகிறது. நிச்சயமாக தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்ற கனவோடு காத்திருந்தார்கள். வழக்கமாக காந்தி பிறந்தநாளில்தான் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும்” என்கிறார் வைரவன்.

“நீங்கள் (காமராஜர்) எனக்கு ஆதரவாக இருங்கள். இந்தி பேசாத மாநிலங்களில் நீங்கள் விரும்பியவர்களை முதலமைச்சர்களாக நியமித்துக் கொள்ளுங்கள். நான் எமர்ஜென்சியை விலக்கிவிட்டு தேர்தலை நடத்துகிறேன்” என இந்திரா காந்தி கூறியதாகவும் தனது நூலில் வைரவன் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா?

இந்த நூலில் காமராஜரின் இறுதி நாள் குறித்து வைரவன் விவரித்துள்ளார்.

“தலைவர் காலையில் வழக்கம்போல எழுந்தார். பத்திரிகைகள் படித்தார், குளித்து முடித்தார், மருத்துவர் ஜெயராமன் வந்தார். இன்சுலின் ஊசி போட்டுவிட்டுப் போனார். காலை சிற்றுண்டியாக முட்டையின் வெள்ளைக் கரு போட்டு பிரட் டோஸ்ட் தயாரித்தேன். அப்போது என்னை மின்சாரம் தாக்கியது” என்கிறார்.

“கடந்த 1955இல் மும்பையில் தானியங்கி டோஸ்டர் ஒன்றை காமராஜர் வாங்கினார். அது பழுதாகிவிட்டது. அதைச் சரிபார்க்க வாங்கிச் சென்ற எலக்ட்ரீஷியன், ‘அண்ணே இன்றைக்கோடு போச்சு’ என தலைவர் இருப்பதைக் கவனிக்காமல் கூறிவிட்டான்.

‘டோஸ்டர் இனி தேறாது’ என்ற அர்த்தத்தில் அவன் சொன்னான். எப்போதும் அப்படிப் பேசாதவன் பேசியதும் என்னை மின்சாரம் தாக்கியதும் சற்று நெருடலாக இருந்தது” எனக் கூறியுள்ளார் வைரவன்.

பட மூலாதாரம், Jothimani Sennimalai/Facebook

அவசரநிலைப் பிரகடனத்தை இந்திரா காந்தி விலக்காவிட்டால் மதுரையில் இருந்து போராட்டம் நடத்துவது என காமராஜர் முடிவெடுத்ததாகக் கூறும் வைரவன், “உடனே நெடுமாறனை வரச்சொல்’ என்றார். ஆனால், சென்னையில் இருந்தாலும் அவர் வரவில்லை” என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“என்னிடம் சொன்னதற்கு மாறாக எதிரணியைச் சேர்ந்த சிவாஜியின் வீட்டுக்குப் போய்விட்டாரே என காமராஜருக்கு வருத்தம். மணி மதியம் இரண்டரை மணி. அப்போதும் நெடுமாறன் வரவில்லை. காமராஜர் மனதளவில் சோர்ந்து போனார்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“மனவெதும்பலுடன் சாப்பிட்டார். மின்விசிறி ஓடியபோதும் தலை லேசாக வியர்த்தது. துண்டால் துடைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தார். மதியம் சாப்பிட்டதும் சற்று தூங்குவது அவர் வழக்கம். அன்றும் படுத்தார். அந்த அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டது” எனக் கூறுகிறார் வைரவன்.

“காமராஜர் இருந்தால் உள்ளே குழல் விளக்கு எரியும். அவர் தூங்கும்போது நாங்களாக விளக்கை அணைத்துவிடுவோம்” எனக் கூறியுள்ள வைரவன், “அப்போது அழைப்பு மணி அவசர அவசரமாக ஒலித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வியர்ப்பதாகக் கூறி மருத்துவர் சௌரிராஜனை காமராஜர் அழைக்குமாறு கூறியதாகக் குறிப்பிட்டார். “அறையை விட்டுக் கிளம்பும்போது, ‘வைரவா விளக்கை அணைத்துவிட்டுப் போ’ எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியதில்லை” என்கிறார் வைரவன்.

மருத்துவர் சௌரிராஜன் வந்து பார்த்தபோது அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறிக் கதறி அழுததாக வைரவன் தெரிவித்துள்ளார். ஆனால், கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்’

அதே புத்தகத்தில் கருணாநிதி-காமராஜர் நட்பு குறித்தும் வைரவன் விவரித்துள்ளார்.

“தேசிய அளவில் காங்கிரஸ் பிளவுபட்டபோது தி.மு.கவினர் இந்திரா காந்திக்கு நேசக்கரம் நீட்டினார்கள். இந்திரா காந்திக்கும் தி.மு.கவுக்கும் காமராஜரை எதிர்ப்பது நோக்கமாக இருந்தது” எனக் கூறுகிறார்.

இந்த நிலையில், தி.மு.க பிளவுபட்டு அ.தி.மு.கவை தொடங்கிய எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார். “அப்போதுதான் காமராஜர் மீது கருணாநிதிக்கு அன்பு மலர்ந்தது. அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்” என வைரவன் குறிப்பிடுகிறார்.

“நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியபோது, தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் நச்சுக்கத்தி எட்டிப் பார்த்தது. அதைத் தடுக்க உதவும் முக்கியக் கேடயமாக காமராஜர் இருந்தார். அதைக் கருணாநிதியும் உணர்ந்தார்” என்கிறார் வைரவன்.

மு.க.ஸ்டாலினின் திருமண நிகழ்வில் காமராஜர் பங்கேற்றது குறித்துக் கூறியுள்ள வைரவன், “சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடியார் மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் திருமணம் நடந்தது. அதற்கு நேரில் வந்து கருணாநிதி அழைப்பு கொடுத்தார். அப்போது காமராஜர் உடல் நலிவுற்று இருந்தார். அவரால் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாது.”

காமராஜரின் கார் நேராக மணமேடை வரை போவதற்கு கருணாநிதி ஏற்பாடு செய்திருந்ததாகவும் காமராஜரும் சென்று வாழ்த்தியதாகவும் கூறியுள்ள வைரவன், ஆட்சியில் இருந்தபோதும் நெருக்கடி நிலையின்போதும் காமராஜரை பலமுறை சந்தித்து கருணாநிதி ஆலோசனை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ வெளியிட்ட காமராஜர் நூற்றாண்டு மலரிலும் இதைப் பற்றிக் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ‘எனக்குப் பெருந்துணையாக விளங்கிய காமராஜர்’ என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது.

அதில், “ஆட்சிப் பொறுப்பில் நான் இருந்தாலும் காவிரி பிரச்னை போன்ற பொதுப் பிரச்னைகளில் காமராஜரின் ஆலோசனைகளைப் பெறவும் எமர்ஜென்ஸி நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து விவாதிக்கவும் அவரது இல்லத்திற்குப் பலமுறை சென்றுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு