உலக எமோஜி தினம்: மக்கள் அதிகம் பயன்படுத்திய எமோஜி எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

52 நிமிடங்களுக்கு முன்னர்

மகிழ்ச்சி, துக்கம், நையாண்டி என அனைத்து வகை உணர்வுகளையும், ‘சாட்டில்’ வெளிப்படுத்த நீங்கள் தினமும் எமோஜிக்களை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் எமோஜிக்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஜூலை 17, அதாவது இன்றுதான், உலக எமோஜி தினம். இந்த தினம் ஏன் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது என்று தெரியுமா? நீங்கள் உங்கள் ஃபோன்களில் பார்க்கும் நாட்காட்டியை குறிக்கும் எமோஜியில் காட்டப்படும் தேதி ஜூலை 17. அதனால்தான் இந்த நாள் எமோஜி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஜப்பானிய வடிவமைப்பாளர் ஷிகேதாகா குரிதா என்பவரால் முதல் எமோஜி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பிரபலமான எமொஜிக்கள், இன்று நாள்தோறும் 10 பில்லியன் முறை மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று 12வது உலக எமோஜிக்கள் தினம். பிரபலமான எமோஜிக்கள் உள்படப் பல எமோஜிக்களின் பின்னால் உள்ள சுவாரசியமான தகவல்களை இங்கே பார்ப்போம்.

அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி எது?

பட மூலாதாரம், Getty Images

எந்த எமோஜியை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வது என்பதை முடிவெடுக்க யுனிகோட் கன்சோர்டியம் என்ற குழு ஒன்று உள்ளது. அந்த குழுதான் ஒவ்வொரு எமோஜியையும் உறுதி செய்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மொத்தமாக 3521 எமோஜிக்கள் இருக்கின்ற சூழலில், எதைப் பயன்படுத்துவது என்று அறிவது சிரமம். ஆனால் எமோஜிபீடியா தகவலின்படி, மூன்று எமோஜிக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சிவப்பு இதயம்

கிளாசிக் சிவப்பு இதய எமோஜிதான் அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

நீங்கள் ஒருவரையோ, ஒன்றையோ விரும்பும்போது இது பயன்படுத்தப்படுகிறது. எமோஜிபீடியா தகவலின்படி, அனைத்து காலகட்டத்திலும், பழைய மற்றும் புதிய எமோஜிக்கள் இடையே அதிகம் பிரபலமான ஒன்றாக இது உள்ளது.

கதறி அழும் எமோஜி

பட மூலாதாரம், Getty Images

எமோஜிபீடியாவின் தகவல்படி, அதிகமாகப் பயன்படுத்தப்படும் எமோஜிக்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சத்தமாகக் கதறி அழுவதைச் சுட்டும் எமோஜி.

இது சோகமாக இருந்தால் பயன்படுத்தப்படும் ஒன்று. அதே நேரத்தில் அழுதுகொண்டே சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் ஒன்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கண்ணில் கண்ணீர் தேங்கும் வரை மிகவும் நகைச்சுவையாகப் பார்த்தது என எதைக் கூறுவீர்கள்?

நெருப்பு

ஃபையர் எமோஜி மூன்றாவது இடத்தில் உள்ளது.

“நெருப்பு எரிவதை” குறிப்பிட்டு இந்த எமோஜியை அனுப்பினால், அது நல்லது என்று அர்த்தம். உங்கள் நண்பரின் உடை உங்களுக்குப் பிடித்திருந்தாலோ, ஒரு புதிய பாடலை நீங்கள் விரும்பினாலோ இதைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.

பட மூலாதாரம், Getty Images

எமோஜி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?

உணர்ச்சிகளுக்கு ‘எமோஷனல்’ என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து மறுவி அல்லது அதன் நீட்சியாக எமோஜி என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இரண்டு ஜப்பானிய வார்த்தைகளின் கூட்டுதான் எமோஜி. ‘காஞ்சி’ (ஜப்பானிய) மொழியில் படம் மற்றும் எழுத்திற்கான வார்த்தைகளைப் பயன்படுத்தியே இந்தச் சொல் உருவாக்கப்பட்டது.

எமோஜியில் முதலில் வரும் வார்த்தை ‘யே’ என்ற ஒலிக்கப்படும் வார்த்தை. அது இவ்வாறு 絵 எழுதப்படுகிறது. மற்றொன்று எழுத்து. அது மோஜி என்று உச்சரிக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் அது 文字 என்று எழுதப்படுகிறது. இந்த இரண்டையும் சேர்த்தே இந்தச் சொல் உருவாக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1999ஆம் ஆண்டு ஜப்பானிய வடிவமைப்பாளர் ஷிகேதாகா குரிதா என்பவரால் முதல் எமோஜி உருவாக்கப்பட்டது எமோஜிக்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்ன?

எமோஷன் என்ற வார்த்தையில் இருந்து உண்மையில் உருவானது எமோட்டிகான்தான்.

எமோஜிக்களின் பயன்பாட்டிற்கு முன்பு உபயோகத்தில் இருந்தது இதுவே.

பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செல்போன் குறியீடுகள், எழுத்துகள் மற்றும் எண்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அரைப் புள்ளியோடு அடைப்புக் குறியைப் பயன்படுத்தினால் அது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்று இருக்கும். 🙂

படக்குறிப்பு, எமோட்டிகான்கள் எமோஜிக்கள் எப்படி உருவாக்கப்பட்டு, அங்கீகாரம் பெறுகிறது?

லாபநோக்கமற்ற அமைப்பான யுனிகோட் கன்சோர்டியம் என்பதுதான் எமோஜிக்களை உருவாக்குவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் எமோஜிக்களை முன்மொழியலாம். ஆனால் இந்த அமைப்பு அதைப் பார்த்து முடிவெடுக்கும்.

உலக மக்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், அதை எப்படிப் பயன்படுத்துவார்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கருத்தில் கொண்டே அவர்கள் முடிவெடுப்பார்கள்.

ஒருமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டால் அது யுனிகோட் ஸ்டேண்டர்டுக்கு மாற்றப்படும். பிறகு ஆப்பிள் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களின் கருவிகளில் அதைப் பயன்படுத்துவார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு