இந்தியாவில் அமெரிக்கா விற்க நினைக்கும் ‘அசைவ பால்’ என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா நீண்ட காலமாக இந்தியச் சந்தையை தனது பால் பொருட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று விரும்புகிறது55 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவுக்கு அதிக வரிகளை விதிப்பது தொடர்பான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூலை 9-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படலாம் என்றும், அது விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்திய சந்தையை அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் பொருட்களுக்காக திறந்துவிடவேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கோரி வந்தாலும், இந்திய விவசாயம் மற்றும் பால் துறையை பாதுகாக்கும் பொருட்டு இந்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மறுத்து வருகிறது.

மேலும், ‘அசைவ பால்’ மீதான கலாசார கவலைகளை காரணம் காட்டி , அமெரிக்க பால் பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்த ஒப்பந்தம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பல்வேறு ஊடக செய்திகளின்படி, இந்தியா தனது ‘குடிமக்களின் பாதுகாப்பிற்காக விவசாயத் துறை மற்றும் பால் பொருட்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதையும் மேற்கொள்ள தயாராக இல்லை’ என்று தெளிவாகக் கூறிவிட்டது.

இறக்குமதி செய்யப்படும் பால், விலங்குகளின் இறைச்சி அல்லது ரத்தம் கொண்ட தீவனங்கள் கொடுக்கப்படாத பசுக்களிடமிருந்து வருவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க பால் பொருட்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதிக்க இந்தியா விரும்புகிறது.

உள்நாட்டு பால்வளத் துறை, நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெரும்பாலான சிறு விவசாயிகளுக்கான வாழ்வாதாரமாக இருப்பதால், இந்தியா பால் தொடர்பாக தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இருப்பினும், இது தேவையற்ற வர்த்தக தடை என்று அமெரிக்கா வாதிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடனான சுமார் 45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, விவசாயம் மற்றும் பால் ஏற்றுமதிக்கான கதவுகளை இந்தியா திறக்கவேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது.

தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் 23 நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் புதிய வரி விதிப்புக்கான கட்டண காலக்கெடு ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு இந்தியாவின் பால்வளத் துறை முக்கிய பங்களிக்கிறது.

இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின்படி , 2023-24 ஆம் ஆண்டில், நாட்டில் 23.92 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்த பால் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 272.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள 63,738 டன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, அமெரிக்கா, பூட்டான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இந்திய பால் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பால் பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா கணிசமான அளவு வரி விதிக்கிறது. இந்தியாவில், சீஸ் இறக்குமதிக்கு 30 சதவீதமும், வெண்ணெய் மீது 40 சதவீதமும், பால் பவுடருக்கு 60 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

இந்தியா தனது சந்தையை அமெரிக்க பால் பொருட்களுக்குத் திறக்க முடிவு செய்தால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

இந்திய ஸ்டேட் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, அமெரிக்க பால் பொருட்களை அனுமதித்தால், இந்திய பால் பொருட்களின் விலைகள் குறைந்தது 15% குறையும். இதன் எதிரொலியாக இந்திய விவசாயிகள் ஆண்டுதோறும் 1.03 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்திக்க நேரிடும்.

பால் பொருட்களுக்கான சந்தையை திறந்துவிட்டால், இந்தியா பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற நிலையில் இருந்து பால் நுகர்வு நாடு என்ற நாடாக மாறிவிடும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அசைவ பால் என்றால் என்ன?

அமெரிக்காவில், ரத்தம் மற்றும் இறைச்சியிலிருந்து விலங்கு தீவனம் தயாரிக்கப்படுகிறது

ரத்தம் மற்றும் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் விலங்கு தீவனங்களை உண்ணும் பசுக்களின் பால் அசைவ பால் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து அதிக பால் பொருட்களை இந்தியா கொள்முதல் செய்யவேண்டும் என்று அந்நாடு விரும்புகிறது. ஆனால், தனது நம்பிக்கை மற்றும் கலாசாரம் காரணமாக இந்தியா அமெரிக்க பால் பொருட்களை வாங்க விரும்பவில்லை.

அமெரிக்க பால் பண்ணைத் தொழிலில் பசுக்களின் எடையை அதிகரிக்க விலங்குகளின் இறைச்சி அல்லது ரத்தம் கலந்த தீவனம் கொடுக்கப்படுகின்றன.

சியாட்டில் டைம்ஸில் வந்த ஒரு கட்டுரையில் , “பன்றிகள், மீன், கோழி, குதிரைகள் மற்றும் பூனைகள் அல்லது நாய்களின் இறைச்சியைக் கொண்ட தீவனங்கள் பசுக்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது. கால்நடைகள் நன்கு வளர்வதற்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்புச்சத்து தேவைக்காக, பன்றி மற்றும் குதிரையின் ரத்தமும் உணவாக அளிக்கப்படுகிறது.”

‘ரத்த உணவு’ என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ரத்த உணவு’ விலங்குகளை கொழுக்க வைக்கப் பயன்படுகிறதுபிபிசி இந்தியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி , ‘ரத்த உணவு’ என்பது இறைச்சியை பொதி செய்யும் தொழிலின் ஒரு துணைப் பொருளாகும், மேலும் இது பிற விலங்குகளுக்கு உணவளிக்கப் பயன்படுகிறது.

இறைச்சிக்காக விலங்குகளைக் கொன்ற பிறகு, அவற்றின் ரத்தம் சேகரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டு அதிலிருந்து சிறப்பு வகை தீவனம் ஒன்று தயாரிக்கப்படுகிறது, இதுவே ‘ரத்த உணவு’ என்று அழைக்கப்படுகிறது.

‘ரத்த உணவு’ என்பது, லைசின் (பசு புரதத்தில் காணப்படும் பத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று) எனப்படும் அமினோ அமிலத்தின் சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது, இந்த அமிலம் கால்நடை வளர்ப்புத் தொழிலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பால் கறக்கும் கால்நடைகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும், அவை அதிக பால் உற்பத்தி செய்யவும், அவற்றுக்கு கொடுக்கப்படும் உணவில் ‘ரத்த உணவு’ தொடர்ந்து கொடுக்கப்படுகிறது.

பால் கொடுக்கும் விலங்குகளைத் தவிர, கால்நடை வளர்ப்புத் தொழிலிலும் ரத்த உணவு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நைட்ரஜனை அதிகரிக்க இது உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பசுக்களின் உடலில் காணப்படும் புரதத்தில் சுமார் பத்து வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு அமிலங்கள், லைசின் மற்றும் மெத்தியோனைன் ஆகும்.

புரதங்களை விட அமினோ அமிலங்களை எளிதாக பசுக்கள் செரிமானம் செய்துவிடும். எனவே அவற்றுக்கு ‘ரத்த உணவு’ மற்றும் சோளம் உணவாக அளிக்கப்படுகின்றன. ‘ரத்த உணவு’ லைசினின் மூலம் என்றால், சோளம் மெத்தியோனைனின் மூலமாகும்.

இருப்பினும் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சின்படி, இதுபோன்ற தீவனங்கள் விலங்குகளின் ரத்தத்தில் உள்ள லைசினின் அளவை மோசமாக்குகிறது. அதற்கு பதிலாக, சோயாபீன் லைசினின் நல்ல மூலம் என்று ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது.

இந்தியாவில் பல ஆன்லைன் மின் வணிக தளங்களில் விவசாயத்திற்காக ‘ரத்த உணவு’ விற்கப்படுகிறது.

ஃபீடிபீடியா என்ற வலைத்தளத்தின்படி, ‘ரத்த உணவை’ தயாரிப்பதால், இறைச்சி கூடத்தில் உருவாகும் கழிவுகளும் மாசுபாடும் குறைக்கிறது, ஆனால் ரத்தத்தை உலர்த்தும் செயல்முறையில் அதிக மின்சாரம் செலவாகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு