பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜேன் பர்கின், அந்த அசல் பையை வைத்திருந்தார்.எழுதியவர், இயன் யங்ஸ்பதவி, கலாசார செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஃபேஷன் உலகில் மிகவும் பிரபலமான ஆபரணமாகக் கருதப்படும் அசல் பிர்கின் பை, ஜூலை 10ஆம் தேதியன்று சுமார் 8.6 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 85.8 கோடி) ஏலம் போனது.

இதன் மூலம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கைப்பையாக இது மாறியுள்ளது.

இந்த கருப்புத் தோல் பை 1985ஆம் ஆண்டு பாடகி ஜேன் பிர்கினுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு விமானப் பயணத்தின்போது, பாடகி பிர்கின், ஆர்மெஸ் என்ற நபரின் அருகில் அமர்ந்திருந்தார். ஆர்மெஸ் ஒரு பிரெஞ்சு சொகுசு ஃபேஷன் பிராண்ட் நிறுவனத்தின் தலைவர். அந்தப் பயணத்தின்போது பிர்கினின் பொருட்கள் கீழே விழுந்தன.

பின்னர் அவர் ஆர்ம்ஸ் நிறுவனத்தின் தலைவரிடம், ‘உங்கள் நிறுவனம் ஏன் பெரிய பைகளைத் தயாரிப்பதில்லை என்று கேட்டார்?’. இதையடுத்து ஆர்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் அதே விமானப் பயணத்தில் ஒரு புதிய வடிவமைப்பைத் தயாரித்தார்.

ஜூலை 10ஆம் தேதி, பாரிஸ் நகரில் சோத்பி’ஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில், அதே வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாதிரி (Prototype) கைப்பையை ஜப்பானை சேர்ந்த ஒரு தனியார் சேகரிப்பாளர் வாங்கினார். இந்தக் கைப்பை, முந்தைய சாதனையான 4.39 லட்சம் யூரோவைவிட மிக அதிக விலைக்கு ஏலம் போனது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஏல நிறுவனம் என்ன சொன்னது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜேன் பர்கின், அந்த கைப்பையை பத்து ஆண்டுகளுக்கு பயன்படுத்தினார்.ஏல நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஏலத்தின்போது சுமார் பத்து நிமிடங்களுக்கு, பையை வாங்க ஆர்வம் காட்டிய 9 பேரிடையே கடுமையான போட்டி நிலவியது.

“சின்னச் சின்ன வரலாற்றுக் கதைகளின் சக்தியையும், சேகரிப்பில் ஆர்வமுடையவர்கள் மத்தியில் இதுபோன்ற சிறப்புப் பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் விருப்பத்தையும் அந்தக் கதைகள் எவ்வாறு தூண்டுகின்றன என்பதையும் இந்த விலைக்கு கைப்பை ஏலம் போயிருப்பது பிரதிபலிக்கிறது,” என்று சோத்பி’ஸ் நிறுவனத்தின் கைப்பைகள் மற்றும் பேஷன் துறையின் சர்வதேச தலைவரான மோர்கன் ஹலிமி கூறினார்.

“பிர்கின் முன்மாதிரி என்பது பிர்கின் பை உருவானதன் கதையின் தொடக்கம். இப்போது உலகின் மிகவும் விரும்பப்படும் கைப்பையாக உள்ளதன் நவீன சின்னம்” என்று அவர் கூறினார்.

ஏலத்தில் அந்த கைப்பை கமிஷன்கள் மற்றும் பிற கட்டணங்கள் உள்பட சுமார் 8.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. ஏலத்திற்கு முன்பு சோத்பி’ஸ் நிறுவனம் விலை மதிப்பீட்டை வெளியிடவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தப் பையின் வரலாறு மற்றும் சிறப்பு

ஆங்கிலோ-பிரெஞ்சு பாடகி மற்றும் நடிகை ஜேன் பிர்கினுக்காக இந்தப் பையை உருவாக்கிய பிறகு, ஆர்மெஸ் அதை வணிகரீதியான தயாரிப்பிற்குக் கொண்டு வந்தார். அப்போதிருந்து இது ஃபேஷன் உலகில் அந்தஸ்தின் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சில பிர்கின் பைகள் மில்லியன் கணக்கான டாலர்கள் விலை கொண்டவை. அவற்றைப் பெறுவதற்கென ஒரு நீண்ட காத்திருப்புப் பட்டியல் உள்ளது.

கேட் மோஸ், விக்டோரியா பெக்காம், ஜெனிஃபர் லோபஸ் போன்ற சர்வதேச பிரபலங்கள் பலர் இந்தப் பையை வைத்திருக்கிறார்கள்.

ஏலத்தில் விற்கப்பட்ட சிறப்புப் பையின் முன் மடலில் பிர்கினின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஜேன் பிர்கின் 2023ஆம் ஆண்டு தனது 76வது வயதில் உயிரிழந்தார்.

அவர் அந்தப் பையை ஏறக்குறைய பத்து ஆண்டுகள் வைத்திருந்தார். பின்னர், 1994ஆம் ஆண்டு எய்ட்ஸ் தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் திரட்டுவதற்காக அதை ஏலத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

பின்னர், பாரிஸில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் ஒரு கடையை நடத்தும் கேத்தரின் பெனியர் அதை வாங்கினார். அதை 25 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக வைத்திருந்த அவர், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 10) ஏலத்தில் விற்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு