திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கோரி பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பல வருட காலமாக கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது, சிலர் நகர்ப் பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளதாகவும், முறையான இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் 

” NPP ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு அநீதியா? ” 

”அவசியம் இடமாற்றம் வேண்டும் ”

”வேலை கிடைத்தது முதல் ஓய்வுக்காலம் வரை இங்குதானா?” 

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது குறித்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன முதலான அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் தடுத்து, தமக்கு நியாயமான தீர்வினை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நடாத்துவதற்கு இடமளிக்குமாறும் தங்களுடைய கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.