Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘ஏமாற்றம்தான், ஆனால் புதின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை’ – டொனால்ட் டிரம்ப் பிபிசிக்கு சிறப்புப் பேட்டி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிபிசிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்எழுதியவர், கேரி ஓ’டோனோகு பதவி, பிபிசியின் வட அமெரிக்க தலைமை செய்தியாளர்33 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் மீதான நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஓவல் அலுவலகத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த நேர்காணலில், ரஷ்ய அதிபரை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, “நான் யாரையும் நம்புவதில்லை” என்று பதிலளித்தார்.
யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் திட்டத்தை அறிவித்த டிரம்ப், 50 நாட்களுக்குள் யுக்ரேனுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இது நடந்து சில மணிநேரத்திற்குப் பிறகு டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் நேட்டோவை காலாவதியான ஒன்று என விமர்சித்திருந்த டிரம்ப், தற்போது நேட்டோ அமைப்பின் பொதுவான பாதுகாப்புக் கொள்கைக்குத் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் ஓர் ஆண்டு நிறைவைத் தொடர்ந்து அவரிடம் பேட்டி காண பிபிசி முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், பிபிசிக்கு அமெரிக்க அதிபர் அலுவலகம் விடுத்த தொலைபேசி அழைப்பில், டிரம்ப் சுமார் 20 நிமிடங்கள் பேசினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே திங்கள் கிழமையன்று(ஜூலை 14) டிரம்பை சந்தித்தார்படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்த அனுபவம் அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்ற பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அந்தச் சம்பவம் பற்றி முடிந்தவரை குறைவாகவே சிந்திக்க விரும்புவதாகக் கூறினார்.
“அது என்னை மாற்றியதா என்று நான் யோசிக்க விரும்பவில்லை,” என்று கூறிய டிரம்ப், அதைப் பற்றி தற்போது சிந்தித்தால் “அது என் வாழ்க்கையையே மாற்றக் கூடியதாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.
வெள்ளை மாளிகையில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவை சந்தித்த பிறகு பிபிசியிடம் பேசிய அமெரிக்க அதிபர், இந்த உரையாடலில் ரஷ்ய அதிபரின் மீதான தனது ஏமாற்றத்தை விரிவாகப் பதிவு செய்தார்.
யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் வெவ்வேறு சந்தர்பங்களில் நான்கு முறை ஏற்படவிருந்ததாக டிரம்ப் குறிப்பிட்டார்.
புதினுடனான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதா என்ற பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அவருடனான உரையாடல்கள் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. அவரால் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆனால், அவர் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை” என்று தெரிவித்தார்.
“போரையும் ரத்தம் சிந்துவதையும் நிறுத்த” டிரம்ப் எவ்வாறு புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்ற கேள்விக்கு, “நாங்கள் அதைச் செய்து வருகிறோம், கேரி,” என்று நிருபரின் பெயரைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் பதிலளித்தார்.
“எங்கள் பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெறும். அப்போது, ‘சரி, நாம் அதைச் செய்து முடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன்,’ என்று நான் சொல்வேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் ரஷ்யாவின் நிலைமையை மோசமாக்கிவிடுவார்.”
சமீபத்திய வாரங்களில் யுக்ரேன் நகரங்கள் மீது ரஷ்யா தனது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது, இதனால் பொது மக்களும் உயிரிழந்துள்ளனர். 2022இல் ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
தனக்கும் அமைதியைக் கொண்டு வருவதில்தான் விருப்பம் என்று புதின் கூறினாலும், போரின் “மூல காரணங்கள்” எனத் தான் கருதும் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். யுக்ரேன், நேட்டோ மற்றும் “கூட்டு மேற்கு” நாடுகளால் நிலவும் வெளிப்புற அச்சுறுத்தல்களின் விளைவாக ரஷ்யாவின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படலாம் என்பதே போருக்கான காரணம் என்றும் புதின் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின் அமெரிக்க அதிபருடனான உரையாடலில் நோட்டோ தொடர்பாகவும் பேசப்பட்டது.
நேட்டோ அமைப்பை, முன்னர் “காலாவதியான” அமைப்பு என்று டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், தற்போதும் நேட்டோ தொடர்பான அவரது கருத்து அப்படியே இருக்கிறதா என்று கேட்டப்பட்டது.
இந்தக் கேள்விக்கு, “இல்லை. இனி அதற்கு நேர்மாறாக நேட்டோ மாறி வருவதாக நான் கருதுகிறேன். உறுப்பு நாடுகள் நேட்டோவின் செலவுகளில் தங்கள் பங்கைச் செலுத்தத் தொடங்கியிருப்பதால், அது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறேன்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
பெரிய நாடுகளுக்கு எதிராகச் சிறிய நாடுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்பதால் கூட்டுப் பாதுகாப்பில் தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் கூறுகிறார்.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் தன்னை மட்டுமல்ல, தனது முடிவெடுக்கும் திறனையும் மதிக்கத் தொடங்கி இருப்பதாகவும், இரண்டு முறை அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் தனக்கு “பல திறமைகள்” இருப்பதாக உலகத் தலைவர்கள் நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
சில நேரங்களில், உலகத் தலைவர்கள் “வெளிப்படையாக முகஸ்துதி செய்கின்றனரா” என்று கேட்டதற்கு, அவர்கள் “நல்லவர்களாக இருக்க முயல்வதாகவே” தான் உணர்வதாக டிரம்ப் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Reuters
உலக அரசியலில் பிரிட்டனின் எதிர்காலம் குறித்தும் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர், பிரிட்டன் ஒரு சிறந்த இடம் எனத் தான் கருதுவதாகக் கூறினார். மேலும், “எனக்கு அங்கே சொத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.
பிரெக்ஸிட் பிரச்னையில், பிரிட்டன் “சோர்வாக இருந்தது, ஆனால் அது சரியாகி வருவதாக நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
சர் கியர் ஸ்டோர்மரை பற்றிப் பேசிய டிரம்ப்: “பிரதமர் ஒரு தாராளவாதியாக இருந்தாலும், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், பிரிட்டன்-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தையும் டிரம்ப் பாராட்டினார். பிரிட்டனுடன் தனக்கு “சிறப்பானதொரு பிணைப்பு” இருப்பதாகவும், அதனால்தான் அந்த நாட்டோடு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, “பெரும்பாலும், அவர்களது போட்டியாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படையில் எந்த ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் பிரிட்டனுக்கு அமெரிக்க அதிபர் மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது அரசு முறைப் பயணத்தை அவர் எவ்வாறு எதிர்நோக்குகிறார் என்பது குறித்தும் டிரம்ப் பேசினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்இந்த அரசுமுறைப் பயணத்தில் தான் சாதிக்க விரும்புவது குறித்துப் பேசிய டிரம்ப், “நல்ல நேரத்தை அனுபவிக்கவும், மன்னர் சார்லஸுக்கு மரியாதை செலுத்தவும் விரும்புகிறேன். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த மனிதர்” என்று கூறினார்.
செப்டம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றம் கூடாது என்பதைக் குறிப்பிட்ட டிரம்ப், சிறப்பு அமர்வு கூட்டப்படுவதைத் தான் விரும்பவில்லை என்றும் கூறினார். நாடாளுமன்றத்தைக் கூட்டினால், தான் அங்கு உரை நிகழ்த்த முடியும் என்றாலும், எம்.பி.க்கள் தங்களுடைய தனிப்பட்ட நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதால் அதை விரும்பவில்லை என்றார். அதுகுறித்துப் பேசியபோது, “அவர்கள் தங்கள் பொழுதை நன்றாகக் கழிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றார்.
கனடாவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் தொடங்கியபோது, அதில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆற்றிய தொடக்கவுரையால் தனக்கு வருத்தம் ஏதும் இல்லை என்றும் டிரம்ப் கூறினார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கலாம் என்ற அமெரிக்க அதிபரின் பரிந்துரையை அடுத்து, கனடாவின் அரச தலைவரான பிரிட்டிஷ் மன்னர், கனடாவின் இறையாண்மையை வலியுறுத்தி கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
“அரசர் சார்லஸ் கனடாவுடன் தொடர்புடையவர். ஆகையால் அவர் ஏதாவது சொல்ல வேண்டிய தேவை இருந்தது. அவருக்கு வேறு வழி இருக்கவில்லை,” என்று டிரம்ப் கூறினார். மேலும், “சார்லஸ் ஒரு நல்ல விதமாக, மரியாதையுடன் பேசினார் என்று நான் நினைக்கிறேன்” என்றார் டிரம்ப்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா இப்போது கனடாவுடன் பேசி வருவதாகவும், விஷயங்கள் நல்லபடியாக நடக்கும் எனத் தான் நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
வெளிநாடுகள் தொடர்பான விஷயங்களுக்குப் பிறகு, உள்நாட்டு விஷயங்கள் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்பதில் “சிறப்பான வேலையை” செய்ததாகக் கூறினார்.
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் மாதங்களில் சட்டவிரோதக் குடியேற்றம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைவிட அதிகமாகவே செய்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தற்போது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரை அடையாளம் காண்பது, அவர்களைத் தடுத்து வைப்பது மற்றும் நாடு கடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
மக்களை நாடு கடத்தும் திட்டத்தைச் செயல்படுத்த வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள சிறைகளுக்கு குற்றவாளிகளை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது, இந்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தைப் பற்றி டிரம்பிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எந்த அளவிலான நாடு கடத்தல்களை மேற்கொள்வது, இந்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்ததைக் குறிக்கும் என்று கேள்வி எழுப்பியபோது, “எண்ணிக்கை அடிப்படையில் இலக்கு வைக்க மாட்டேன். குற்றவாளிகளை விரைவாக வெளியேற்ற விரும்புகிறேன், அதைச் செய்து கொண்டிருக்கிறோம்” என்று டிரம்ப் பதில் அளித்தார்.
மேலும், “நாங்கள் அவர்களை எல் சால்வடாருக்கும், வேறு பல இடங்களுக்கும் கொண்டு செல்கிறோம்,” என்று அவர் கூறினார்.
டிரம்பின் நாடு கடத்தல் கொள்கையின் அம்சங்களைத் தடுத்து நிறுத்த சில நீதிமன்றங்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், “இந்த வழக்குகள் அனைத்திலும், மேல்முறையீட்டில் நாங்கள் வென்றுள்ளோம். சில நீதிபதிகள் மிகவும் தீவிர இடதுசாரியாகவும் நியாயமற்றவர்களாகவும் இருந்தனர், ஆனால் அவர்களின் முடிவும் பின்னர் எங்களுக்குச் சாதகமாக மாற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தோரை மூன்றாம் நாடுகளுக்கு நாடு கடத்த அனுமதிக்கும் சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அடங்கும்.
தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வரி மற்றும் செலவு மசோதாவை சிலாகித்துப் பேசிய டிரம்ப், “இதுவொரு பெரிய, அழகான மசோதா” என்று பாராட்டினார். இந்த மசோதா, 2017ஆம் ஆண்டு டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் செய்யப்பட்ட வரிக் குறைப்புகளின் நிரந்தர நீட்டிப்பு மசோதாவாகும்.
மேலும், அரசு வழங்கும் சுகாதாரத் திட்டமான மெடிகெய்ட் திட்டத்திற்கு வழங்கும் மருத்துவ உதவி செலவினங்களைக் கணிசமாகக் குறைப்பதோடு, புதிய வரிச் சலுகைகளை உருவாக்குகிறது.
“வரலாற்றிலேயே மிகப் பெரிய வரிக் குறைப்புகளை நாங்கள் செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார். அமெரிக்க அதிபராக, அவரது பாரம்பரியத்தை வரையறுக்கும் அம்சம் எதுவென்று டிரம்ப் நினைக்கிறார் என்று கேள்வி எழுப்பியபோது, “அமெரிக்காவை காப்பாற்றுவது” என அவர் பதிலளித்தார்.
“அமெரிக்கா இப்போது மிகச் சிறந்த நாடாக இருப்பதாக நினைக்கிறேன். ஓர் ஆண்டுக்கு முன்பு அது ஓர் இறந்த நாடாக இருந்தது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பேட்டியில் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு