காணொளிக் குறிப்பு, 366 நாட்கள் மாரத்தான் ஓடியவரின் இதயம் எப்படி இருக்கிறது?தொடர்ந்து 366 நாள் மாரத்தான் ஓடியவரின் இதயத்தில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2023ல் 43 வயதான ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை ஓடியுள்ளார்.

“ஐரோப்பாவில் பெல்ஜியமை சேர்ந்த ஸ்டெஃபான் எங்கெல்ஸ் 2010-2011 வரை மாரத்தான் ஓடியுள்ளார். அவரால் செய்ய முடிந்ததால் இது சாத்தியம் என கருதினேன்.” என கூறுகிறார் அவர்.

இதற்காக 8 மாதங்கள் தயாரானார், தினமும் 42கிமீ ஓடினார்.

“மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், மனநல ஆலோசகரை அழைத்து ஒரு குழுவை உருவாக்கி தொடங்கினேன்.” என கூறுகிறார் ஹுகோ.

உடல்தகுதியை மேம்படுத்த எண்ணிய அவருக்கு இதனால் பிரச்னையும் ஏற்பட்டது.

“நல்ல வேலையிலிருந்து இதற்காக வெளியேறினேன்.”

சாவ் பாவ்லோ இதய மையம் அவரின் இதயத்தை கண்காணித்தது.

அதிக பயிற்சிக்கு எப்படி இதயம் தகவமைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம் என்கிறார், இதயவியல் மருத்துவர் மரியா ஜானியேர் ஆல்வ்ஸ்

“ஆபத்துகளை புரிந்துகொண்டு, உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உலகம் உங்களை சந்தேகிக்கும், ஆனால் நீங்கள் உங்களை சந்தேகிக்கக் கூடாது.” என்கிறார் ஹுகோ.

ஆண்டில் 1,590 மணிநேரம் ஓடி, 15,569 கிமீ தூரம் பயணித்துள்ளார். தன்னுடன் ஓடிய 5000 பேருடன் போட்டியிட்டு இலக்கை நிறைவு செய்தார் ஹுகோ.

“உங்களின் கதை உங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது.”

தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார்.

“வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, ‘நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?’ என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது,” என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

ஹூகோ, “18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்.”

“இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்.”

பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார்.

பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார்.

“என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்,” என்கிறார் அவர்.

இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது.

சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார்.

“ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது,” என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, “நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது.”

பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் – அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை – ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான்.

“உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

“யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்கிறார் ஹூகோ.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு