திருவாரூர்: ‘மலம் கலந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால்…’ – அரசுப் பள்ளி சமையலர்கள் நேரில் கண்டது என்ன?

எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், BBC tamil

படக்குறிப்பு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன்பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது?

திங்கள் கிழமை (ஜூலை 14) காலை 7 மணியளவில் காலை உணவு தயாரிப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் கார்த்திகா, பிரியா ஆகியோர் வந்துள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“உள்ளே நுழையும்போதே உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன” எனக் கூறுகிறார், கார்த்திகா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பள்ளி வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து காய்களையும் பறித்துக் கீழே வீசியிருந்தனர். அங்கிருந்த குடிநீர் குழாய்களையும் உடைத்திருந்தனர். இதைப் பார்த்து பயந்து போய் வெளியில் வந்தோம்,” என்கிறார்.

பள்ளி வளாகத்துக்குள் அசாதாரண சூழல் நிலவியதால், ஊர் மக்களில் சிலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். “சமையல் அறைக்கு வெளியில் வாழை இலையில் மசாலாவை போட்டு பிரட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. உடும்பு அல்லது கீரியைச் சமைத்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை” எனக் கூறுகிறார் கார்த்திகா.

பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட ஊர் மக்கள், சமையலறைக் கதவை உடைத்து சிலர் பயன்படுத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

‘தற்செயலாக உள்ளே பார்த்தேன்’

பட மூலாதாரம், BBC tamil

“சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்திவிட்டுச் சென்றது. அவர்கள் சென்ற பிறகு குடிநீர்த் தொட்டியின் முன்பு உடைக்கப்பட்ட குழாய்களைப் பார்த்துவிட்டு, தற்செயலாக குடிநீர்த் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்” எனக் கூறுகிறார், காரியாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான கோ.சி.மணி. இவரது மகள் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள கான்கிரீட் சுவற்றின் மீது குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

“நீர் வெளியேறும் குழாய் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஐந்து தேங்காய்கள் உரிக்கப்படாமல் கிடந்தன. ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அதில் மனித மலம் இருந்ததைக் கண்டேன்” எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

“உடனே காவல்துறையை மீண்டும் அங்கு வரவழைத்தோம்” எனக் கூறும் அவர், “காலையிலேயே இதைக் கவனித்துவிட்டதால் குழாயைச் சரி செய்து நீரைத் தொட்டிக்குள் நிரப்பும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அசுத்தம் கலக்கப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் குழந்தைகள் நீரைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறை விசாரணை தீவிரம்

பட மூலாதாரம், BBC tamil

இதையடுத்து, திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பள்ளியில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றை நோக்கி மோப்ப நாய் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரிடம் திருவாரூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

“பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உடும்பு மற்றும் கீரியைப் பிடிப்பதற்காக கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அந்தக் கூண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த சாக்குப் பையில் கீரியின் உரிக்கப்பட்ட ரோமங்கள் இருந்தன” எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

சமையல் கூடத்தில் உள்ள சிலிண்டர் மூலம் கீரியை நெருப்பில் வாட்டி சுட்டு சமைத்துள்ளதாகக் கூறும் அவர், “சமையல் அறையைப் பயன்படுத்தி சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், மனித மலம் கலக்கப்பட்டதை ஏற்க முடியாது” என்கிறார்.

பட மூலாதாரம், BBC tamil

‘மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்’

இதே கருத்தை முன்வைக்கும் சமையலர் கார்த்திகா, “ஒரு குழாய் விடாமல் அனைத்தையும் உடைத்துவிட்டனர். அந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறும் அவர், அதில் இருவர் பள்ளிக்கு அருகிலும் இருவர் பக்கத்து தெருவிலும் வசிப்பவர்ளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கி மிக அராஜகமாக செயல்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்கிறார்கள். சாதிரீதியாக நடந்திருக்குமா எனத் தெரியவில்லை,” எனவும் அவர் கூறினார்.

‘என்ன கோபம் எனத் தெரியவில்லை’

பட மூலாதாரம், BBC tamil

மேலும், “குடிபோதையில் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், நான்கு குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு, தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கும் அளவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை,” என்கிறார் கார்த்திகா.

திட்டமிட்டே இதைச் செய்ததாகப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறும் கார்த்திகா, “தேங்காய்களைப் பறித்து வீசியதோடு இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்?” எனவும் கேள்வியெழுப்பினார்.

வரும் நாட்களில் பள்ளியில் காலை உணவு தயாரிப்பதற்குத் தனியாக வந்து செல்வதற்குத் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததால், பள்ளி ஆசிரியர் அன்புச்செல்வியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“பள்ளி கட்டடத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. தண்ணீர்த் தொட்டியை மாற்றிவிட்டோம்” எனக் கூறினார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தான் வந்து பத்து மாதங்களே ஆகியிருப்பதாகக் கூறும் அன்புச்செல்வி, “இதற்கு முன்பு சிலர் தேங்காய்களைப் பறித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை” என்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்

குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் துணை காண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்” எனக் கூறினார்.

பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், “என்ன நோக்கத்திற்காகச் செய்துள்ளனர் எனத் தெரியவில்லை. சாதிரீதியான காரணம் எதுவும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்” என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வைக்குமாறு கூறியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு