ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.07.25) ஜேர்மன் நாட்டில் இருந்து சென்ற நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து, மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்னர்.