சமோசா சாப்பிடுவதால் என்ன ஆபத்து? சுகாதாரத் துறை எச்சரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் அதில் என்னென்ன சத்துகள் எந்த அளவில் உள்ளன, எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பன குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்களில் உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுகள், இனிப்புகளில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பது உள்பட எந்தத் தகவல்களும் இருக்காது. குறிப்பாக, சமோசா போன்று பேக்கேஜ் செய்யப்படாமல் வெறுமனே தட்டுகளில் வைத்து வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல்கள் நுகர்வோருக்குப் பெரிதும் தெரிவதில்லை.

எனவே, இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் விற்கப்படும் சமோசா உள்ளிட்ட ‘ஜங்க்’ உணவுகள், ஜிலேபி போன்ற இனிப்புப் பண்டங்களில் என்னென்ன உள்ளன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கைப் பலகைகள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

பட மூலாதாரம், fssai

ஒவ்வொரு சிபிஎஸ்இ பள்ளியிலும் இதேபோன்ற எச்சரிக்கைப் பலகைகளை அமைக்க வேண்டும் என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த எச்சரிக்கைப் பலகைகளில் என்ன இருக்கும்? மக்களுக்கு இது பயன் தருமா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சர்க்கரை குறித்த எச்சரிக்கைப் பலகையில் என்ன இருக்க வேண்டும்?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இத்தகைய எச்சரிக்கைப் பலகைகளில் என்னென்ன தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சர்க்கரை குறித்த எச்சரிக்கைப் பலகையில், ஒரு நாளைக்கு பெரியவர்கள் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் குழந்தைகள் 20 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோன்று, குலாப்ஜாமுன், வெல்லம், குளிர் பானங்கள், சாக்லேட், பேஸ்ட்ரி போன்ற இனிப்புகளை குறிப்பிட்ட அளவுகளில் உட்கொள்ளும்போது அதில் எத்தனை கிராம் சர்க்கரை உள்ளது என்பதையும் அதில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, 62 கிராம் எடை கொண்ட ஒரு குலோப்ஜாமுனில் 32 கிராம் சர்க்கரை உள்ளது, 203 கலோரிகள் உள்ளன. ஒரு குலோப் ஜாமுனை எடுத்துக் கொள்ளும்போது, ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சர்க்கரை அளவைt தாண்டுவதை, அதைப் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் விரிவான எச்சரிக்கைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், ICMR

அதன்படி, அந்தப் பலகைகளில் சுக்ரலோஸ், மனிடால், எரித்ரிடால், ஸைலிடால், சோர்பிடால் போன்ற பல வகைகளில் சர்க்கரை இருக்கும் என்பதையும், வெல்லம், தேன், பேரீட்சை சிரப், மேப்பிள் சிரப், பிரவுன் சுகர், கேரமல், மொலாசஸ் எனப் பல வடிவங்களில் சர்க்கரை இருக்கும் என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும்.

சர்க்கரையில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை என்கிறது ஐசிஎம்ஆரின் எச்சரிக்கை வாசகம்.

மேலும், ஒரு இனிப்பு உணவில் குறிப்பிட்ட அளவில் எத்தனை ஸ்பூன் சர்க்கரை உள்ளது என்பதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக 100 மி.லி. குளிர்பானத்தில் 6 ஸ்பூன் சர்க்கரை உள்ளது. அந்தந்த கேன்டீன்களில் அன்றைய தினம் என்ன இனிப்புகள் விற்கப்படுகின்றனவோ, அவற்றில் எத்தனை ஸ்பூன் சர்க்கரை உள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும் என்கிறது இந்த எச்சரிக்கை.

பல் சொத்தை, வேகமாக வயது முதிர்வான தோற்றம், இதய பிரச்னைகள், உடல் பருமன், நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு சர்க்கரை வழிவகுக்கும் என்பதை இந்தப் பலகைகளில் குறிப்பிட வேண்டும் என்கிறது ஐ.சி.எம்.ஆர்.

எண்ணெய் குறித்த எச்சரிக்கைப் பலகையில் என்ன இருக்க வேண்டும்?

பட மூலாதாரம், fssai

எண்ணெயை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 27-30 கிராம் அளவுக்கு மேல் கொழுப்பு எடுத்துக்கொள்ளக் கூடாது என FSSAI பரிந்துரைத்துள்ளது.

அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட உணவில் எவ்வளவு கலோரிகள், எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, 100 கிராம் கொண்ட ஒரு சமோசாவில் 362 கலோரிகளும் 28 கிராம் கொழுப்பும் உள்ளது.

இந்த எச்சரிக்கைப் பலகைகளில் சர்க்கரை, எண்ணெயை குறைவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், ICMR

ஐ.சி.எம்.ஆரின் எண்ணெய் குறித்த எச்சரிக்கைப் பலகையில் மக்களுக்கு ஆரோக்கியத்தை அறிவுறுத்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அவை,

எண்ணெயை உணவில் நேரடியாக ஊற்றாமல் ஸ்பூன் மூலம் அளவிட்டுப் பயன்படுத்த வேண்டும்பொறித்த உணவுகளை உண்ணாமல் மேலோட்டமாக வறுத்த உணவுகளுக்கு மாற வேண்டும்.பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாத உணவகங்களில் உண்ன வேண்டும்எண்ணெயை குறைந்த அளவிலேயே வீட்டு உபயோகத்துக்கு வாங்க வேண்டும்தேவையான அனைத்து கொழுப்பு அமிலங்களும் கிடைக்க குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு வித எண்ணெய் வகைகளைப் பயன்படுத்த வேண்டும்வேறு என்னவெல்லாம் குறிப்பிட வேண்டும்?

இத்தகைய எச்சரிக்கைப் பலகைகளில் வேறு என்னவெல்லாம் குறிப்பிட வேண்டும் என்பது குறித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகரிடம் கேட்டோம்.

“இத்தகைய உணவுகளில் பெரும்பாலும் ஊட்டச்சத்துகளே இருக்காது. எனவே, இத்தகைய உணவுகளில் புரதச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் எவ்வளவு உள்ளன என்பதைக் குறிப்பிடலாம்.

அது குறைவாகவோ அல்லது பெரும்பாலும் இல்லாமலேயேகூட இருக்கும். அதைக் குறிப்பிட்டு இருந்தால் மக்கள் அது அவசியமில்லை என நாளடைவில் உணரும் நிலை ஏற்படலாம்,” என்றார் அவர்.

ஒவ்வோர் உணவைச் சாப்பிடும்போதும் அதன் கலோரிகளை எரிப்பதற்கு நாம் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் வழங்கினால் அது மக்களை இன்னும் எளிதில் சென்றடையும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

சமோசா போன்று எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பருமன், இதய நோய் ஏற்படும் என்பதை இத்தகைய எச்சரிக்கைப் பலகைகளில் குறிப்பிட வேண்டும் என்கிறார், உணவியல் நிபுணர் புவனேஸ்வரி.

“முதலில் இத்தகைய உணவுகளைச் சாப்பிடாமலே இருத்தல் நலம் என்றாலும் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வரை, சமோசா போன்ற உணவுகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவு வகைகளை கேன்டீன்களில் விளம்பரப்படுத்தலாம்” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இத்தகைய எச்சரிக்கைப் பலகைகளை நன்கு பெரியளவிலான பேனர் போன்று தயாரித்து, படங்களுடன் எளிமையான வழியில் விளக்கும் வகையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். அதோடு, உள்ளூர் மொழி மற்றும் பொதுவான மொழியுடன் அவை அமைந்தால் நிறைய பேரைச் சென்றடையும் என்கிறார் புவனேஸ்வரி.

சர்க்கரை, எண்ணெய் உணவுகள் ஏன் ஆபத்தானவை?

எண்ணெய் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. இதன் மூலம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, பக்கவாதம் என வாழ்வியல் நோய்கள் பல ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

“அதிகப்படியான சர்க்கரையும் மாவுச்சத்தும் சிலவித புற்றுநோய்களுக்கு (கணையம், மார்பக புற்றுநோய்) காரணமாக உள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”பதப்படுத்தப்பட்ட, பொறிக்கப்பட்ட உணவுகள், எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்திt தயாரிக்கப்படும் உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் (ஒருவகை நிறைவுறா கொழுப்பு) இருக்கும். இதில் கொழுப்பு அமிலங்கள் நிறைய இருக்கும். இதனால் கொழுப்புக் கல்லீரல் (fatty liver) ஏற்படும்.

இத்தகைய கொழுப்பு, ரத்தக் குழாய்கள், மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் படிவதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோன்று, அதிகமாக மாவுச்சத்தை எடுத்து, அந்த கலோரிகளை எரிக்காவிட்டால், நம்முடைய கல்லீரல், அலிபோஸ் திசுக்களில் இத்தகைய கொழுப்புகள் கிளைகோஜனாக சேர்ந்துவிடும். இது அழற்சியை ஏற்படுத்தி புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு” என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு