‘என் மகள் எப்போதும் கவலையில் இருக்கிறாள்’ – கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கு பற்றி கணவர் கூறுவது என்ன?

படக்குறிப்பு, நிமிஷாவும், டோமி தாமஸும் 2011இல் திருமணம் செய்துகொண்டனர்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காக6 நிமிடங்களுக்கு முன்னர்

கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் ஒரு கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். அவருக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தண்டனை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டைச் சேர்ந்தவரும், நிமிஷாவுடன் தொழில் கூட்டாளியாக இருந்தவருமான தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்த வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மஹ்தியின் உடல் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

ஏமனில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது. எனவே மஹ்தியின் குடும்பத்தினர் பிளட் மணி எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு அவரை மன்னிக்க ஒப்புக்கொள்வது ஒன்றுதான் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இருக்கும் ஒரே வழி.

நிமிஷாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் இது ஒன்றுதான் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ஜூலை 16ஆம் தேதி, அவரது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக நிமிஷாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நிமிஷாவின் கணவர், மற்றும் கேரளாவின் பாலக்காட்டில் நிமிஷாவை அறிந்தவர்களிடம் பேசி அவர்கள் இந்தப் பிரச்னையை எப்படிப் பார்க்கிறார்கள் என அறிய பிபிசி முயன்றது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நிமிஷாவின் கிராமத்தில் இருக்கும் பலரும் ‘அவர் கொலை செய்யக் கூடியவரா?’ என ஆச்சரியப்படுகின்றனர்.

“எங்கள் கிராமத்தில் யாருமே இதை நம்பத் தயாராக இல்லை. நிமிஷாவால் இதைச் செய்ய முடியுமா என எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது,” என பாலக்காட்டைச் சேர்ந்த பி. சதீஷ் கூறுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு நிமிஷா தனது கணவருடன் ஏமனுக்கு சென்றதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு மகள் பிறந்ததாகவும் பி. சதீஷ் தெரிவித்தார்.

“சிறுமி சிறிது வளர்ந்த பின்னர், டோமி தனது மகளுடன் கேரளாவுக்கு திரும்பி வந்ததாக,” கூறுகிறார் அவர். நிமிஷாவின் கிராமம் கொல்லங்கோடு கிராமப் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. இந்தப் பஞ்சாயத்தின் உறுப்பினராக உள்ளவர் என். ஷண்முகம்.

அவரிடம் பேசியபோது, “அவர் மிகவும் அமைதியானவராக இருந்தார். தனது வேலை மற்றும் படிப்பு குறித்து கவலை கொண்டிருந்தார். வயல்களிலும் பணியாற்றியுள்ளார், டிராக்டர் ஓட்டுவார். லேப் டெக்னிசீயன் பணிக்கான படிப்பை முடித்த பின்னர் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்றார்” என்று கூறினார்.

நிமிஷாவுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதம்

படக்குறிப்பு, “நிமிஷா அமைதியான சுபாவம் கொண்டவர், தனது வேலை, பணியில் கவனமாக இருந்தவர்” என்கிறார் கொல்லங்கோடு கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த என்.ஷண்முகம்கிராமவாசிகளின் கூற்றுப்படி நிமிஷாவும் அவரது கணவர் டோமி தாமஸும் ஏமனில் கிளினிக் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தனர். ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியும் அதில் கூட்டாளியாகச் சேர்ந்து கொண்டார்.

தலால் அப்தோ மஹ்தி நிமிஷாவின் கிராமத்திற்குச் சில நாட்கள் வந்திருந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

“அந்த ஏமன் மனிதர் இங்கு வந்து சில வாரங்கள் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் நண்பர்களைப் போல் இருந்தனர். இங்கிருந்து செல்லும் போதும் அவர்கள் நண்பர்களாகவே திரும்பினர். பின்னர், அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக செய்தி மூலம் தெரிய வந்தது,” என்கிறார் என். ஷண்முகம்.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா செவிலியராகப் பணிபுரிய ஏமனுக்கு 2008ஆம் ஆண்டு சென்றார். அங்கு பல மருத்துவமனைகளில் பணிபுரிந்த பின்னர் அவர் 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி டோமி தாமஸை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியுடன் சேர்ந்து நிமிஷா கிளினிக் ஒன்றைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டில் மஹ்தியின் உடல் ஒரு தண்ணீர்த் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஏமன் – செளதி அரேபியா எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளைக் கொடுத்துக் கொலை செய்ததாகவும், அவரது உடலை மறைக்க முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி அவரை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாக நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். அவரது பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு, பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், துப்பாக்கிமுனையில் நிமிஷாவை மிரட்டியதாகவும் வாதிடப்பட்டது.

தங்கள் கூட்டுத்தொழிலில் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியதாகவும் அதன் பின்னர்தான் இந்தியா திரும்ப விரும்பியதாகவும் ஆனால் மஹ்தி தனது பாஸ்போர்ட்டை திரும்பத் தரவில்லை எனவும் தன் தரப்பு வாதத்தை நிமிஷா முன்வைத்தார்.

நிமிஷாவுக்காக மன்னிப்பு கோருதல்

படக்குறிப்பு, “நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது” என கிராம மக்கள் நம்புவதாக உள்ளூரைச் சேர்ந்த வினிதா கூறுகிறார்நிமிஷா சில நாட்களில் தூக்கிலிடப்படுவார் என்பதை அறிந்து கிராம மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். நிமிஷா பிரியா மன்னிக்கப்பட வேண்டும் என அவர்கள் நம்புகின்றனர்.

“யாரும் யாருடைய உயிரையும் எடுக்க விரும்புவதில்லை. எனவே, நிமிஷா பிரியவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.”

நிமிஷாவின் கிராமத்தைச் சேர்ந்த வினிதா டி இதுகுறித்துப் பேசியபோது, “அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என நாங்கள் அனைவரும் நம்புகிறோம். எங்களுக்குத் தெரிந்தவரை அவர் அத்தகைய பெண் அல்ல. அங்கு சென்ற பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது” என்றார்.

மேலும், “எனக்கு நிமிஷாவும், பிரேமாவும் அறிமுகமானவர்கள் மட்டுமே. ஆனால் நாங்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்” என்றும் வினிதா தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நிமிஷாவை காப்பாற்ற போராட்டம்

‘சேவ் நிமிஷா பிரியா இண்டர்நேஷனல் கவுன்சிலுடன்’ இணைந்து போராடி வரும் நிமிஷாவின் கணவர் டோமி தாமஸ் நிமிஷாவை காப்பாற்றும்படி தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிமிஷாவின் தாயார் சார்பில், ஏமனில் நிமிஷாவின் வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்ட சாமுவேல் ஜெரோமுடனும் ஏமனில் இருக்கும் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரியுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

அதுகுறித்துப் பேசிய டோமி தாமஸ், “எங்கள் மகள் எப்போதும் தாயைப் பார்க்க விரும்புகிறாள். எப்போதும் சோகத்துடனும், கவலையுடனுமே இருக்கிறாள். அவளது தாய் விரைவில் திரும்புவார் என்றுதான் அவளிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

முன்னதாக கடந்த வாரம், நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி மற்றும் சமூக செயற்பாட்டாளர் சாமுவேல் ஜெரோமுடன் பிபிசி தமிழ் காணொளி மூலம் நேர்காணல் எடுத்தது.

படக்குறிப்பு, டோமி தாமஸ் தனது மனைவி நிமிஷாவை காப்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்மரண தண்டனை தேதி ஒத்தி வைக்கும் செய்தி வருவதற்கு முன்பாக பிபிசியிடம் பேசிய நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சிறைச்சாலை நிர்வாகம் மூலம் நிமிஷா செய்தி அனுப்பியதாகத் தெரிவித்தார்.

“அவர் ஒரு செய்தி அனுப்பினார், ஆனால் கடைசியாக எடுக்கப்பட்ட முடிவு (மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டது) குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. நான் எப்படி இருக்கிறேன் என்பதை மட்டும் அவர் கேட்டிருந்தார். என்னை கவலைக்குள்ளாக்க விரும்பாததால் அவத் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. நான் இதை சாமுவேல் ஜெரோம் மூலம்தான் தெரிந்துகொண்டேன்.”

ஏமனுக்கு கடந்த வருடம் சென்ற பிரேமா குமாரி இதுவரை சிறையில் தனது மகளை இரண்டு முறைதான் சந்தித்திருக்கிறார்.

“நான் நிமிஷா பிரியாவை 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். ஏப்ரல் 23ஆம் தேதி தூதரக அதிகாரிகளும் நானும் அவரைச் சந்திக்கச் சென்றோம். அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்காதோ என நான் அச்சமடைந்தேன்.”

“அவரைப் போன்றே உடையணிந்த மேலும் இரண்டு பேருடன் அவர் வந்தார். அவர் என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் அமைதியாக இருக்கும்படி எங்களிடம் கூறினர். நான் செத்தாலும் அந்த தருணத்தை மறக்க மாட்டேன். நிமிஷா மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் என் முன்னால் நடந்துகொண்டார்” என்று கூறினார் நிமிஷாவின் தாயார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு