Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உலகளவில் விமான விபத்துகள் அதிகரித்துவிட்டதா? தரவுகள் காட்டுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த மாதம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 261 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.எழுதியவர், ஜோஷுவா சீத்தம், யி மா & மேட் மர்ஃபிபதவி, பிபிசி வெரிஃபைஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் விமான விபத்துகள் தொடர்ச்சியாக நடப்பதன் காரணமாக, விமான விபத்துகள் அடிக்கடி நடப்பதாக சில சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, 29 டிசம்பர் 2024 அன்று, தென் கொரியாவில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் இறந்தனர். ஒரு மாதம் கழித்து, வாஷிங்டன் டிசியில் ராணுவ ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் மோதியதில் 67 பேர் பலியாகினர்.
மிகச் சமீபத்தில், ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 261 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து குறைவான கருத்துக் கணிப்புகளே மேற்கொள்ளப்பட்டாலும், பிப்ரவரி மாதத்தில் ஏபி செய்தி முகமை நடத்திய கணக்கெடுப்பு, இணையதளத்தில் தோன்றும் விமான விபத்துகளின் திடுக்கிடும் படங்கள், சில அமெரிக்க மக்கள் மத்தியில் விமானப் பயணங்கள் மீதான நம்பிக்கையைப் பாதித்து இருப்பதாகக் கூறுகிறது.
ஆனால், பிபிசி வெரிஃபை, அமெரிக்காவிலும் உலகளவிலும் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, கடந்த 20 ஆண்டுகளாக விமான விபத்துகள் குறைந்து வருவதைக் கண்டறிந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்காவை பொறுத்தவரை, தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த ஆண்டு ஜனவரி இறுதி வரை நிகழ்ந்த விமான விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2005 முதல் 2024 வரை அமெரிக்காவில் விமான விபத்துகள் சராசரியாகக் குறைந்துள்ளன. ஆனால் இந்தக் காலகட்டத்தில் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த ஜனவரியில் 52 விபத்துகள் பதிவாகின. இது கடந்த ஆண்டு ஜனவரியில் 58 ஆகவும், 2023 ஜனவரியில் 70 ஆகவும் இருந்தது. அதைவிட 2025இல் ஏற்பட்ட விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைவு என்பதை தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐ.நா.வை சார்ந்த அமைப்பான சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO), உலகளாவிய விமான சம்பவங்களைக் கண்காணிக்கிறது.
கடந்த 2005 முதல் 2023 வரை, ஒரு மில்லியன் விமானப் பயணங்களுக்கு எதிரான விபத்துகளின் எண்ணிக்கை தெளிவாகக் குறைந்துள்ளது என்று இதன் தரவுகள் காட்டுகின்றன.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) விமான விபத்துக்கான வரையறை மிகவும் விரிவானது. இது பயணிகள் அல்லது பணியாளர்கள் பலத்த காயமடைவது அல்லது இறப்பது மட்டுமின்றி, விமானம் சேதமடைந்து பழுதுபார்க்கப்பட வேண்டிய அல்லது காணாமல் போகும் சம்பவங்களையும் உள்ளடக்கியது.
உலகளாவிய விமான விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை குறித்த தரவுகளும், இதே காலகட்டத்தில் விமான விபத்துகள் குறைவாக ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், சில ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய விமானப் பேரழிவுகளின் காரணமாக இறப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.
கடந்த 2014இல் அதுபோன்று நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள், விமான விபத்துகளால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்தன.
மார்ச் மாதத்தில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH370, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் பயணித்தபோது காணாமல் போனது. ஜூலை மாதத்தில், மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH17, கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவின் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டு, கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற தரவுத் தொகுப்புகள் திடீரெனவும் பெரியளவிலும் ஏற்ற இறக்கங்களைக் காணும் என்று பிபிசி வெரிஃபையிடம் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புள்ளியியல் எமரிட்டஸ் பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீகல்ஹால்டர்.
“விபத்துகளை எண்ணாமல் உயிரிழப்புகளை எண்ணினால், அது மிகவும் ஏற்ற இறக்கத்தோடும், ஒரு பெரிய விபத்தில் எளிதாக மாறக் கூடியதாகவும் இருக்கும்” என்று கூறிய அவர், “விபத்துகள் ஒரே மாதிரியாக நடப்பதில்லை. அவை கூட்டாக நடக்கின்றன. எனவே, விமான விபத்துகளுக்குள் தொடர்பு இல்லையென்றாலும், ஒருவேளை அவற்றுக்குத் தொடர்பு இருப்பது போலத் தோன்றலாம்” என்று குறிப்பிட்டார்.
“கடந்த சில மாதங்களில் நடந்த பெரிய விபத்துகள், விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பு குறைந்துவிட்டது என்பதற்கான அறிகுறி இல்லை” என்று பின்லாந்தின் தலைமை விமானப் பேரிடர் ஆய்வாளர் இஸ்மோ ஆல்டோனென், பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வகையான விபத்துகள் நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் மக்கள் இதை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது. ஏனெனில் அவை வேறுபட்ட நிகழ்வுகள்” என்றும் அவர் விளக்கினார்.
உதாரணமாக, டிசம்பரில் கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டு விபத்துக்கு உள்ளானது. இதுபோன்ற சில விபத்துகள் எதிர்பார்க்க முடியாதவை என்று அவர் குறிப்பிட்டார்.
“சமூக ஊடகங்களில் விமான விபத்துகள் பற்றிய செய்திகள் அதிகம் பரவுவதால், விமானப் பேரழிவுகள் குறித்த பார்வை அதிகரிப்பதாக” பிபிசி வெரிஃபையிடம் பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் விமானியும் மூத்த விரிவுரையாளருமான மார்கோ சான் கூறினார்.
சூப்பர்மேன் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ டிக்டோக்கில் பரவி வருகிறது. ஒரு ஜெட் விமானம் மைதானத்தில் மோதுவதையும், ஹீரோ தடுப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது. ஜனவரியில் அமெரிக்க முன்னாள் போக்குவரத்து செயலாளர் பதவி விலகிய பிறகு விமான விபத்துகள் அதிகரித்துவிட்டதாக இந்த வைரல் வீடியோ கூறுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் தொடர்புடைய பல சம்பவங்கள், குறிப்பாக ஜனவரி 2024இல் விமானத்தின் கதவு நடுவானில் வெடித்தது போன்ற சம்பவங்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிகழ்வுகளாலும், பிற பிரச்னைகளாலும், சில வாடிக்கையாளர்கள் போயிங் விமானங்களைப் புறக்கணிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்கு விலையும் சரிந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் சமீப ஆண்டுகளில் தொடர் சம்பவங்களைச் சந்தித்துள்ளன.இதுபோன்ற பெரிய விமான விபத்து சம்பவங்கள் அதிகாரிகளால் முழுமையாக விசாரிக்கப்படுகின்றன. விபத்துகளின் புதிய தகவல்களும், தரவுகளும் பைலட் பயிற்சியில் உதவும் சிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், விமானிகள் எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக முடியும் என்று நிபுணர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.
“இன்றைய சிமுலேட்டர்கள் மிகவும் மேம்பட்டவை, அவை உண்மையான விமானங்களைப் போலவே உள்ளன. நான் 40 ஆண்டுகளுக்கு முன்பு பறக்கத் தொடங்கியபோது இருந்ததைவிட, இவை முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன” என்று இஸ்மோ ஆல்டோனென் கூறினார்.
பாதுகாப்பு விதிமீறல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பது, உரிமத்தை இடைநீக்கம் செய்வது, அல்லது செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்கலாம். விமான நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால், நாடுகளிலோ அல்லது கூட்டமைப்புகளிலோ தடை செய்யப்படலாம்.
சமீபத்திய சம்பவங்கள் ஒருபுறம் இருந்தபோதிலும், விமானப் பயணம் இன்னும் மிகவும் பாதுகாப்பான பயணத்துக்கான வழியாகவே உள்ளது.
அமெரிக்காவில் 2022இல் போக்குவரத்து தொடர்பான இறப்புகளில், 95%க்கும் மேல் சாலைகளில் நடந்தன. மொத்த இறப்புகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே விமானப் பயணத்துடன் தொடர்புடையவை என்று அமெரிக்க போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பயணித்த தூரத்திற்கு ஏற்ப இறப்பு எண்ணிக்கையின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், விமானப் பயணம் எவ்வளவு பாதுகாப்பானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டில், விமானங்களில் 100,000,000 மைல்களுக்கு 0.001 பயணிகள் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால், பயணிகள் வாகனங்களில் இது 0.54 ஆக இருந்தது தெரிய வந்தது.
அமெரிக்காவில், பல்வேறு வகையான விபத்துகளாலும் நோய்களாலும் இறப்பதற்கான நிகழ்தகவையும் என்எஸ்சி தரவுகள் விவரிக்கின்றன.
பல்வேறு வகையான சாலைப் போக்குவரத்து விபத்துகளால் இறப்பதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து இருந்தபோதிலும், விமான விபத்தில் இறப்பதற்கான சாத்தியக்கூறு கணக்கிட முடியாத அளவுக்கு மிகவும் சிறியது என்று கண்டறியப்பட்டது.
நிச்சயமாக, சில நாடுகளில் உள்ள சாலைகள் மற்றவற்றைவிட ஆபத்தானவையாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம், 2021ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், உலகெங்கிலும் ஏற்பட்ட சாலை விபத்துகளின் இறப்பு விகிதத்தை மதிப்பிட்டது.
அதில், கினியா (100,000 பேருக்கு 37.4 இறப்புகள்), லிபியா (34.0), ஹைட்டி (31.3) ஆகியவை சாலை விபத்துகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளன.
ஆனால், எங்கு வாழ்பவராக இருந்தாலும், பயணிகளுக்குத் தெளிவான அறிவுரை ஒன்றை இஸ்மோ ஆல்டோனென் வழங்குகிறார்.
அந்த அறிவுரை: “விமான நிலையத்திற்குச் செல்லும் பயணத்தில் கவனமாக இருங்கள். விமானப் பயணத்துடன் ஒப்பிடும்போது, அதுதான் மிகவும் ஆபத்தானது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு