Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, கிரிக்கெட் விமர்சகர்23 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியா – இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ஆம் தேதி அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நான்காம் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!
சம பலத்தில் உள்ள இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டி கொடுக்கும் பரபரப்பை அடித்துக்கொள்ள எதுவுமில்லை. அதற்கு இந்த டெஸ்ட் ஒரு உதாரணம். இரு அணிகளும் சம பலத்தில் 4 நாள்களாக மோதிக்கொள்ளும் ஆட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த டெஸ்ட் நிச்சயம் டிரா ஆகாது என்று நான்காம் நாள் தொடங்கியவுடன் தெரிந்துவிட்டது.
நிதானம் தேவை
இந்த தொடர் முழுக்க கடும் உழைப்பை கொடுத்தும் விக்கெட்டுகளை அள்ள முடியாமல் தவித்த சிராஜ் கொத்தாக மூன்று தலைகளை வீழ்த்தினார்.
ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் (Un–even bounce) இருந்தால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் எந்த வேகத்தில் (Tempo) ஆடுவது என தெரியாமல் குழம்பிப் போயினர். பும்ராவின் நல்ல லெங்க்த் பந்துகளும் தாறுமாறாக எகிறி ஜாக் கிராலியின் கைகளை பதம் பார்த்தன. நேற்று நேரத்தை கடத்துவதற்காக அடிபட்டது போல நடித்தவர், இன்று உண்மையிலேயே வலியில் தவிப்பதை பார்க்க இந்திய வீரர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினால் தப்ப முடியாது என உணர்ந்துகொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், கன்னாபின்னாவென்று என்னென்னமோ முயற்சிகள் எடுத்து பரிதாபமாக நடையைக்கட்டினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜாக் கிராலிசிராஜ் பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். பும்ராவின் நிழலில் இருப்பதாலேயே சிராஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை.
பஸ்பால் பாணியில் ஒரு ஷாட் அடித்தவுடன் சிராஜ் ஷார்ட் ஆஃப் த லெங்த்தில் வீசிய அடுத்த பந்தை சரியாக கணிக்காமல் விளையாடி டக்கெட் பெவிலியன் திரும்பினார்.
அப்போது இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. டக்கெட்தான் சிராஜை நோக்கி முட்டும் விதமாக நடந்தார் என்பது பிறகு ரிப்ளேவில் தெரிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலையை செய்வதால், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தி ஆற்றலையும் கவனத்தையும் இழந்துவிடக் கூடாது. பும்ராவிடம் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சிராஜ் பொறுப்பற்ற ப்ரூக்கின் ஆட்டம்
ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் சரியும் போது ரூட் மட்டும்தான் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். இத்தனை சொதப்பல்களுக்கும் பிறகும் கிராலிக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. முதல் இன்னிங்ஸ் போலவே, இந்த முறையும் இந்திய பந்துவீச்சு படையின் இளம் கன்றான நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார் கிராலி.
நேற்றைய நாளின் முக்கியமான விக்கெட் என ஆலி போப்பின் விக்கெட்டை சொல்லலாம். ரூட், புரூக் போல அபாயகரமான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் கடினமான சூழல்களில் நின்று விளையாடும் திறன்கொண்டவர் போப். ஏற்கெனவே ஒரு ரெவியூவை கோட்டைவிட்டதால் முதலில் தயக்கம் காட்டிய கில் சிராஜின் ஆக்ரோஷத்துக்கு மதிப்பளித்து டிஆர்எஸ் எடுத்தார்.
3 விக்கெட்டுகள் காலியான நிலையில் களம்புகுந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் புரூக், நெருப்பை நெருப்பால் அணைக்கும் விதமாக பாஸ்பால் (Bazball) பாணியை கையில் எடுத்தார். உடனடியாக கைமேல் பலன் கிடைத்தாலும், பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் ஹாரி ப்ரூக் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கும் கண்ணை மூடிக்கொண்டு சுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தெரிந்துகொள்ள வேண்டும்.
இங்குதான் ரிஷப் பந்த் தனித்து நிற்கிறார். அவரும் ரிஸ்க்கான பேட்டிங்கை தான் கையில் எடுக்கிறார். ஆனால், அதிலும் நுட்பமாக சில தற்காப்பு திட்டங்களை புகுத்தி, ஆபத்தில்லாமல் ரன் சேர்க்கும் வித்தையை தெரிந்துவைத்துள்ளார். ஆனால் புரூக் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் அந்த தெளிவில்லை. வர்ணனையில் சங்கக்காரா விமர்சித்தது போல, இது Bazball ஆட்டமல்ல அல்ல; பொறுப்பற்ற ஆட்டம்!
இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிய சுந்தர்
இந்த டெஸ்டில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தி வந்த கில், நேற்று ஓரிடத்தில் சொதப்பினார். ரூட் களத்துக்கு வந்தவுடன், அவர் எதிர்கொள்ள விரும்பாத பும்ராவை உடனடியாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று ரூட்டை செட்டிலாக வைத்துவிட்டார். இதுபோன்றதொரு கடினமான ஆடுகளத்தில் ரூட் எடுத்த 40 ரன்கள் முக்கியமானது.
சிராஜ் பந்தில் அம்பயர் பால் ரீஃபெலின் LBW முடிவுகள் சில இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடர் முழுக்கவே DRS முடிவுகள் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரூட், ஜேமி ஸ்மித் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கையை ஓங்கச் செய்தார் சுந்தர்.
ரூட் தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் சுந்தரின் அட்டகாசமான சுழலுக்கு ஸ்மித் இரையானார். வாஷிங்டன் சுந்தர் விரல்களுக்கு அதிக வலுகொடுத்து சுழற்றுவதால் பந்து காற்றில் அலைபாய்ந்தது (Drift). அப்போது லைனை சரியாக கணிக்க முடியாமல் ஸ்டம்புகளை ஸ்மித் பறிகொடுத்தார். கடைசிக்கட்ட விக்கெட்டுகளை பும்ராவும் சுந்தரும் வாரிச் சுருட்ட இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கேப்டன் கில்லுடன் பகிர்ந்து கொள்கிறார்.ஏமாற்றம் அளித்த கில்
ஆடுகளம் தாறுமாறாக இருப்பதால், இந்திய தொடக்க வீரர்கள் பொறுப்பாக நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்று விளையாடி நடையைக்கட்டினர்.
வழக்கமாக ஷாட் பிட்ச் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு விளையாடும் ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் இலக்கற்று சுற்றி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ராகுல்– கருண் இணை, நம்பிக்கை அளிக்கும் விதமாக சிறிது நேரம் விளையாடியது. ஆனால் நன்றாக தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த கருண், கார்ஸ் வீசிய பந்து உள்ளே வருகிறதா வெளியே போகிறதா என்ற குழப்பத்தில் பேட்டை தூக்கி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இடம் கிடைத்தும் கருண் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்கான மனஉறுதி அவருக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள கில், எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சியை அளிக்கிறது. கோலியை களத்தில் போலச் செய்வது வேறு கோலி போல வெற்றிகரமாக இலக்கை விரட்டுவது வேறு என்பதை கில் உணர்ந்திருப்பார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கில் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்தார். கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா?
தொடக்கத்தில் இந்திய அணி பவுண்டரிகளாக ரன் குவித்த போதும், ஸ்டோக்ஸ் மனம் தளராமல் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து விக்கெட்டுகள் எடுக்க பார்த்தார். ஒருகட்டத்தில் பிறரை நம்பி பிரயோஜனம் இல்லை என அவரே பந்தை கையிலெடுத்தார். நான்காம் நாளின் கடைசி ஓவரில் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்பை அவர் ஆட்டமிழக்க செய்த விதம் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.
கார்ஸ் நேற்றைய நாளில் உறுதியுடன் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. ஆட்டம் கையை விட்டு போய்விட கூடாது என்று நல்ல லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி கில்லின் கால்காப்பை தாக்கி விக்கெட் எடுத்தார். ஆபத்பாந்தவன் ராகுலின் சலனமில்லாத பேட்டிங் மட்டும்தான் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். வெற்றி இன்னும் 135 ரன்கள் தேவை என்கிற நிலையில், ராகுலையே இந்தியா மலை போல நம்பியிருக்கிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கடைசி நாளில் ராகுல், பந்த் இருவரும் மூன்றாம் நாளில் கொடுத்தது போல, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பும்.
ஆனால், அவ்வளவு எளிதாக ஸ்டோக்ஸ் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்பதை இந்திய அணியினர் உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தின் கை சற்றே ஓங்கியிருந்தாலும், குறைவான இலக்கு என்பதால் இந்தியாவுக்கும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக லார்ட்ஸ் டெஸ்ட் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு