Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, கிரிக்கெட் விமர்சகர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றான இதில் கடைசி நாளில் என்ன நடந்தது?
கடைசி நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் இலக்கை விரட்டுவது என்பது பேட்டர்களுக்கு எப்போதுமே கொடுங்கனவு. தொடரில் 2–1 என்று முன்னிலை பெறுவதற்கு இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவை, இங்கிலாந்துக்கு 6 விக்கெட்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது.
நேற்று ஓவரின் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி முடித்த ஸ்டோக்ஸ், பிறகு வோக்ஸ் கையில் பந்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், யாரையும் நம்பத் தயாராக இல்லாத ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் சேர்ந்து ராகுல் – பந்த் இணைக்கு எதிராக மூர்க்கத்துடன் பந்துவீசினார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், தன்னுடைய மிகச் சிறந்த பந்துவீச்சை இன்று வெளிக்காட்டினார்.
மணிக்கு 89.6 மைல் வேகத்தில் அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஆர்ச்சர் வீசிய பந்தில் பந்த் போல்டானார். உள்ளே வரும் என்று நம்பி பந்த் தவறான லைனில் விளையாடி பரிதாபமாக ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
உண்மையில், அது ஒரு அட்டகாசமான லெங்ந்தில் வீசப்பட்ட பந்து. முன்னே வருவதற்கும் வழியில்லை; பின்னங்காலுக்கு நகர்ந்து ஆடுவதற்கும் வழியில்லை. இரண்டும் கெட்டான் லெங்ந்த் (Corridor of uncertainty) என்பார்களே அப்படி ஒரு லைன் அண்ட் லெங்த்.
பந்த் நடையை கட்டினாலும், கேஎல் ராகுல் இன்னும் இருக்கிறாரே என்கிற ஆசுவாசம் சில நிமிடங்களுக்கு கூட நீடிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்து விக்கெட்
இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நம்பமுடியாத ஒரு பந்தை வீசி, ராகுலின் கால்காப்பை தாக்கி, LBW ஆக்கினார். கற்பனைக்கும் எட்டாத பந்து என்றே அதை சொல்ல வேண்டும். நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பயணிக்க தொடங்கிய பந்து, கடைசி நொடியில் அசாதாரணமாக உள்ளே திரும்பும் என ராகுல் நிச்சயம் நம்பியிருக்கமாட்டார். முதல் இன்னிங்சை போலவே பந்த் முதலில் பெவிலியனுக்கு திரும்ப அவருக்கு துணையாக ராகுலும் பின்னே சென்றார்.
பட மூலாதாரம், Getty Images
கைகொடுத்த பும்ரா
கடந்த இன்னிங்சில் நன்றாக தற்காப்பு ஆடியதால், நிதிஷுக்கு முன்பாக சுந்தர் அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆனால், ஆர்ச்சர் தன் சொந்த பந்துவீச்சில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட்டாக மாற்றி சுந்தரை உடனே வெளியேற்றினார். .
இந்தநிலையில் ஜடேஜாவும் நிதிஷும் ஆர்ச்சர்–ஸ்டோக்ஸ் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினர்.
முதல் நாளில் ரன் ஓடமுடியாமல் சிரமப்பட்ட ஸ்டோக்ஸ், தொடர்ச்சியாக 1 மணி நேரத்துக்கு மேல் பந்துவீசி தன் உறுதியையும் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்தினார்.
ஜடேஜாவும் நிதிஷும் ஓவர் பின் ஓவராக தாக்குப்பிடித்து விளையாடியதை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து அணியினர், அவர்களை சூழ்ந்து கொண்டு வசைபாடத் தொடங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
மதிய உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தபோது, அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி, வோக்ஸ் பந்தில் அவுட்சைட் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இந்த தொடரில் உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பாக இந்திய அணி இதுவரை 10 முறை விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி எளிதில் இங்கிலாந்திடம் சரணடையும் என்றே கருதப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்தார் பும்ரா. அவ்வப்போது கடைசிக்கட்ட பேட்டருக்கே உரித்தான சில ஷாட்களை முயற்சித்தாலும், முழு கவனத்தையும் கொடுத்து விளையாடினார். கில் உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், பும்ராவின் போராட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல ரன் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வந்தது.
நீண்ட நேரமாக தடுப்பாட்டமாடிய ஜடேஜா, வோக்ஸ் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சர் விளாசி, ஆட்டத்துக்கு சுறுசுறுப்பை கொண்டுவந்தார்.
பும்ராவை எப்படியாவது விக்கெட் எடுத்துவிட ஸ்டோக்ஸ் தன்னால் முடிந்த அத்தனை பொறிகளையும் வைத்து பார்த்தார். பும்ரா அவசரப்படும் போதெல்லாம் அருகில் வந்து அறிவுரை சொல்லி ஜடேஜா வழிநடத்தினார். பும்ராவை தூக்குவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்த ஸ்டோக்ஸ், பீல்டர்களை முழுவதுமாக பரப்பி வைத்து, ஜடேஜாவுக்கு எதிராக களத்தடுப்பை அமைத்தார். ஒன்று ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டும். இல்லை, ஒற்றை ரன் ஓடி பும்ராவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அது இங்கிலாந்துக்கு லாபம் என்பது ஸ்டோக்ஸ் கணக்கு.
பட மூலாதாரம், Getty Images
கடைசியில் விருந்து
53 பந்துகள் தாக்குப்பிடித்த பும்ரா, ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஒற்றைக் காலைத் தூக்கி pull ஷாட் அடிக்கப் போய் உள்வட்டத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடைய விக்கெட்டுடன் இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. தவறான ஷாட் விளையாடி பும்ரா பெவிலியன் திரும்பும் போது, ஜடேஜாவின் முகத்தில் ஆயிரம் சோக ரேகைகள்.
பந்து தேய்ந்து பஞ்சு போல மாறியிருந்ததால் பெரிய ஷாட் அடிக்க ஜடேஜா எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரே காரணம் பென் ஸ்டோக்ஸ்தான். களத்தில் வீரர்கள் சோர்ந்து போகும் போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கூறி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.
பந்துவீச்சில் அவர் காட்டிய உத்வேகம், பிற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பரவியதை பார்க்க முடிந்தது.
நவீன கிரிக்கெட்டின் இரு உச்சபட்ச ஆல்ரவுண்டர்களான ஸ்டோக்ஸ், ஜடேஜா இருவரின் போராட்டம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்லிப் தலைகளின் மேல் ஒரு பவுண்டரியை சீவிவிட்டு அரைசதத்தை எட்டினார் ஜடேஜா. 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது, ஆட்டம் முடிந்தது என நினைக்கும் போது, சிராஜ் தன் பங்குக்கு 30 பந்துகள் பிடித்து இங்கிலாந்து அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார்.
ஜடேஜாவும் சிராஜும் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தும் ஒரு ஈவன்டாக மாறி, ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், கார்ஸ் போன்றவர்களின் பந்துவீச்சில் எல்லாம் அவுட்டாகாத சிராஜ், கடைசியில் முழு உடற்தகுதி இல்லாமல் பந்துவீசிய பஷீர் பந்தில் போல்ட் ஆனார்.
ஆட்டமிழந்த பிறகு சிராஜ் சோகமே உருவாக அமர்ந்திருந்ததும் அவருக்கு இங்கிலாந்து வீரர்கள் ஆறுதல் சொன்னதும் 2005 எட்ஜ்பாஸ்டன் டெஸ்டை நினைவூட்டியது.
தோல்வியின் விரக்தியில் இருந்த பிரெட் லீயை ஃபிளின்டாஃப் ஆற்றுப்படுத்தும் காட்சி மனதில் வந்துபோனது.
இந்தியா தோற்றாலும் இந்திய வீரர்கள் காட்டிய போராட்ட குணம், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியும் ஜடேஜா வெற்றியுடன் ஆட்டத்தை முடிக்க முடியாதது துரதிர்ஷ்டம்.
முதல் நாளில் இருந்தே சரிக்கு சமமாக சென்று கொண்டிருந்த டெஸ்ட், ஒரு பரபரப்பான முடிவுடன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது.