பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக11 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் சென்ற Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்புகிறது.

கமாண்டர் பெக்கி விட்சன், பைலட் சுபான்ஷு சுக்லா, மற்றும் திட்ட நிபுணர்கள் ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி மற்றும் டிபர் காபு ஆகியோரை உள்ளடக்கிய, ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு, ஜூன் 25, 2025 அன்று IST 12:01 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

அடுத்த 28 மணி நேர சுற்றுப்பாதை கட்டத்திற்குப் பிறகு இந்திய நேரப்படி (IST) ஜூன் 26 மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைந்தது. அதன் பின்னர் குழுப் பயணிகள் தங்கள் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.

பட மூலாதாரம், International Space Station

படக்குறிப்பு, Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபடும் தருணம்விண்வெளியில் வாழ்வதற்கு தகவமைத்தல்

புதிய ஊருக்கு வீடு மாறி சென்றால் அங்கே நமக்கு பழக்கம் அடைய சில நாட்கள் ஆகும். அதுபோல விண்வெளிக்கு செல்லும்போது அங்கே உள்ள எடையற்ற நிலையில் இயங்க, தகவமைத்து கொள்ளச் சற்று காலம் எடுக்கும்.

பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவர்கள் தங்கள் தூங்கும் இடங்களை அமைத்தனர். ISS-ல் ஏற்கனவே இருந்த எக்ஸ்பெடிஷன் 73 குழுவுடன் பணி ஒப்படைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டனர். எடுத்து சென்ற முக்கிய சரக்குகளை விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அவசரகால நடைமுறைகளைக் கற்றுக்கொண்டனர்.

மூன்றாம் நாளில், அவர்கள் முழுமையாக ISS குழுவுடன் ஒருங்கிணைந்தனர். அவசரகால பயிற்சிகளை மேற்கொண்டனர், முக்கியமான விஞ்ஞான உபகரணங்களையும் பாதுகாப்பு சாதனங்களையும் ஆய்வு மேடையில் பொருத்தினர்.

நிலையத்தின் நடத்தை விதிகளைக் கற்றனர். சுபான்ஷு சுக்லா அடுத்து வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களை தயார் செய்வதில் முனைப்பு காட்டினர். உயிரியல் மாதிரிகளை சோதனை மேடைகளில் பொருத்தி சரிபார்த்தார்.

பட மூலாதாரம், www.axiomspace.com

படக்குறிப்பு, பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர் முக்கிய சோதனைகளின் தொடக்கம்

நான்காம் நாள் சுபான்ஷு சுக்லாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸ் எனப்படும் உயிரியல் ஆய்வு மேடை அமைப்பில் மயோஜெனிசிஸ் சோதனையை மேற்கொண்டு, நீண்டகால விண்வெளிப் பயணங்களால் ஏற்படும் தசை சீரழிவு பற்றி ஆய்வு செய்தார்.

மேலும், செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வில் பங்கேற்று, அல்ட்ராசவுண்ட் மூலம் பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்தார். சுபான்ஷு பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஐந்தாம் நாளில், சுபான்ஷு எதிர்கால ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் மைக்ரோ ஆல்கே மாதிரிகளை ஆய்வு மேடையில் வைத்து ஆய்வை துவங்கின்னர்.

இந்த ஆய்வு, இஸ்ரோ (ISRO), சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையம் (ஐ.சி.ஜி.இ.பி), தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஜிபிஆர்) ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது.

எடையற்ற நிலையில் வளரும் உணவாக உட்கொள்ளக்கூடிய மூன்று வகை மைக்ரோ ஆல்கே இனங்களின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணுச் செயல்பாட்டை உற்றுநோக்கி பதிவு செய்து அதனைப் பூமியில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதே இந்தத் திட்டம்.

வளர்ஊட்டம் அளித்து, நுண்ணுயிர் மாதிரிகளை வளர்த்து அதன் வளர்ச்சியை படமெடுத்து, டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உயிரியல் அளவுருக்களை பதிவு செய்வது தான் சுபான்ஷு சுக்கலாவின் பணி.

சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி நிலையத்தில் இருந்த எல்லா குழு உறுப்பினர்களும் நியூரோ மோஷன் VR எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கெடுத்தனர். எடையற்ற நிலையில் உடலியக்கத்தில் நரம்பு, நமது நிலை குறித்த மூளை அறியும் திறன் எப்படி மாறுபடுகிறது என்பதை ஆய்வு செய்வது இதன் நோக்கம்.

மேலும் மற்றொரு முக்கிய ஆய்வான விண்வெளியில் இருதய நலத்தை கண்காணிக்கும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI, திட்டத்திலும் குழுவினர் பங்குகொண்டனர்.

பட மூலாதாரம், www.axiomspace.com

படக்குறிப்பு, ஆய்வுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் டிபர் காபு மற்றும் டக்கியா ஒனுஷி விண்வெளியில் தசை செல்களின்

ஆறாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் சோதனையில் தனது பணியைத் தொடர்ந்தார். எடையற்ற நிலையில் தசை செல்களின் நடத்தையை ஆய்வு செய்தார்.

இந்தியாவின் ‘இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டெம் செல் சயின்ஸ் அண்ட் ரிஜெனரேடிவ் மெடிசின் (InStem)’ முன்மொழியப்பட்ட இந்த ஆய்வு, ISS-ன் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸில் 3D திசு சில்லுகளைப் பயன்படுத்தி, விண்வெளியின் எடையற்ற நிலையில் தசை ஸ்டெம் செல்களின் நடத்தை மாற்றங்களை ஆராய்ந்து பதிவு செய்தார்.

விண்வெளியில் வளர்ந்த மாதிரிகளை பூமியில் வளர்ந்தவற்றுடன் ஒப்பிட்டு, தசை உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் தாக்கத்தை தனிமைப்படுத்தி காண இந்த ஆய்வு வழி செய்யும்.

இந்த ஆய்வின் முடிவுகள் இரட்டை நன்மைகளை வழங்கும்: எதிர்காலத்தில் நிலவு-செவ்வாய் நீண்டகால பயணங்களில் விண்வெளி வீரர்களின் தசைகளைப் பாதுகாக்கும் முறைகளை உருவாக்குதலில் நமக்கு வழிகாட்டும். மேலும் பூமியில் தசை சீரழிவு நோய்களுக்கான சிகிச்சைகளில் முன்னேற்றம் காணவும் உதவும்.

ஃபோட்டான் கிராவ் மூளை-கணினி இடைமுக பரிசோதனையிலும் குழுவினர் பங்கு கொண்டனர். இது விண்கல இயக்க கருவிகளுடன் தங்களது மூளை செயல்பாடு மூலம் கட்டுப்படுத்தும் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு. நரம்பியல் நோய்களுக்கு புதுவித சிகிச்சையை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும்.

சயனோபாக்டீரியா வளர்ச்சி

ஏழாம் நாளில், சுபான்ஷு இஸ்ரோவின் சயனோபாக்டீரியா வளர்ச்சியை ஆவணப்படுத்தினார். குழுவினர் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கேற்றனர். கண் இயக்கம் மற்றும் பார்வை ஒருங்கிணைப்பபை எடையற்ற விண்வெளி நிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும்.

எட்டாம் நாள் பல ஆராய்ச்சி செயல்பாடுகளால் நிரம்பியிருந்தது. சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வுக்கான தசை செல் வளர்ச்சியை தொடர்ந்தார்.

மேலும் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரி சோதனையைத் தொடங்கினார். இது நுண்ணிய உயிரினங்கள் விண்வெளியில் எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை ஆராய்கிறது. ஐஐஎஸ்சி பெங்களூர் வடிவமைத்த இந்த சோதனையில் டார்டிகிரேட்ஸ் அல்லது நீர் கரடிகள் என்று அழைக்கப்படும் சிறிய அரை மில்லி மீட்டர் நீளமே உடைய உயிரினங்கள் எப்படி வளர்கின்றன என்பதை ஆய்வு செய்வார்கள்.

இந்த வகை நுண்ணுயிரிகள் வெப்பம், கடும் குளிர், கடல்கள் மற்றும் எரிமலைகள் போன்ற தீங்கான சூழல்களில் கூட உயிர்வாழும் திறன் கொண்டவை. விண்வெளிப் பயணத்திற்கு முன், அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

இந்த உறக்க நிலையில் உணவு தேவையில்லாமல் வளர்சிதை மாற்றம் இல்லாமல் இருந்தன. ISS-ல், சுபான்ஷு சுக்லா நீரைப்பயன்படுத்தி அவற்றை எடையற்ற நிலையில் மீண்டும் உயிர்ப்பித்தார்.

AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள்.

விண்வெளி உடை தயாரிப்பில் பயன்படுத்த, நிலையான வெப்பநிலையை பராமரிக்க உதவும் வகையான புதிய பொருட்களை சோதிக்க குழுவினர் உதவினர். மேலும் வாய்ஸ் இன் ஸ்பேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கு கொண்டனர். எடையற்ற விண்வெளி நிலையில் நமது குரலில் எவ்வித மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது ஆய்வு செய்யும்.

பட மூலாதாரம், www.axiomspace.com

படக்குறிப்பு, AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள்விண்வெளி விடுமுறை

பரபரப்பான ஒருவாரம் நீண்ட பணிகளுக்கு பிறகு ஒன்பதாம் நாள் விண்வெளிக்குழுவினர்களுக்கு விடுமுறையாக அமைந்தது. சுபான்ஷு மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் இந்த நேரத்தை ஓய்வெடுக்க, தங்கள் குடும்பங்களுடன் பேச பயன்படுத்திக்கொண்டனர்.

விடுமுறைக்கு பிறகு, பத்தாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ், மைக்ரோ ஆல்கே ஆய்வு போன்ற ஆய்வை தொடர்ந்தார். இந்த ஆய்வுகளில் வளர்ந்த தசை செல்கள் நுண்ணுயிர்கள் போன்றவற்றின் மாதிரிகளை சேகரித்து பதம் செய்து வைத்தார். வோயேஜர் டிஸ்ப்ளேஸ் போன்ற ஆய்வுகளும் தொடர்ந்தன.

பதினொன்றாம் நாள் தாவரவியலில் கவனம் சென்றது. சுபான்ஷு *ஸ்ப்ரௌட்ஸ்*- முளைவிடுதல்- சோதனையை துவக்கினர். இந்திய விவசாய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார். பூமியிலிருந்து எடுத்து சென்ற விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்தார். வேர்/தண்டு வளர்ச்சி மாறுபாடுகளை ஆவணப்படுத்தினார்.

விண்வெளியில் முளைத்த தாவரங்களின் மாதிரிகள் -80°C-ல் சேமிக்கப்பட்டன. எதிர்காலத்தில் விண்வெளி நிலையத்தில் இவ்வாறு முளைவிட செய்து தாவர உணவுகளை பெறுவதற்கு இந்த ஆய்வு உதவும். மேலும் தாவரங்களின் வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கு குறித்து அறியவும் உதவும்

பன்னிரண்டாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வின் செல்லுலார் மாதிரிகளை சேகரித்து சேதாரம் இல்லாமல் பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்தார். மேலும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI திட்ட ஆய்விலும் பங்கு கொண்டார்.

13-வது நாளில், சயனோபாக்டீரியா மாதிரிகளை பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்து பத்திரப்படுத்தினார். மேலும் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வின் பகுதியாக எடையற்ற நிலையில் கண் இயக்கத்தை ஆய்வு செய்ய உதவினார்.

14-ஆம் நாளில், விண்வெளியில் முளைவிட்ட தாவரங்கள் உட்பட அனைத்து உயரி ஆய்வுகளின் மாதிரிகளை -80°C உறைவிப்பானில் பதனம் செய்து பத்திரப்படுத்தினார்.

பதினைந்தாம் நாளில் குழு பூமியை சுமார் 230 முறை சுற்றி வந்தது. ஏற்கனவே துவங்கிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

16-ஆம் நாளில், சுபான்ஷு மைக்ரோ ஆல்கே ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில், குழு வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வில் பங்கு கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார் சுபான்ஷு சுக்லா (சித்தரிப்புப் படம்) பூமி திரும்புவதற்கான ஆயத்தம்

பதினேழாம் நாளில், மைக்ரோ ஆல்கே கலாச்சாரங்களை சென்ட்ரிஃப்யூஜ் செய்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உறைபனியில் வைத்தனர். வாய்ஸ் இன் ஸ்பேஸ் ஆய்விலும், அக்வயர்ட் ஈக்விவலன்ஸ் டெஸ்ட் எனும் ஆய்விலும் பங்களிப்பு செய்தார்.

பதினெட்டாம் நாளில், குழுவினர் தொடர்ந்த இரத்த குளோக்ஸ் அளவு பதிவு செய்தல் ஆய்வில் பங்கு கொண்டனர். விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்த சூழலில் ரத்த சர்க்கரை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்த உடலியல் ஆய்வு பதிவு செய்தது.

பத்தொன்பதாம் நாள் புறப்படுவதற்கான தயாரிப்புகளில் கழிந்தது. சுபான்ஷு மற்றும் குழு முளைத்த விதைகள் மற்றும் ஆல்கே ‘கல்ச்சர்’ உள்ளிட்ட சோதனை மாதிரிகளை பேக் செய்தனர். அவர்கள் ISS குழுவுடன் விடைபெறும் விழாவில் பங்கேற்றனர்.

இருபதாம் நாளில், Ax-4குழுவினர் மறுபடி க்ரூ டிராகன் விண்கலத்துக்கு வந்தனர். விண்கல கதவுகள் -ஹேச்சுகளை மூடினர். ISS-லிருந்து விடுபட தயார் செய்து கொண்டனர். இவ்வாறு அவர்களின் 20-நாள் பணி முடிவுக்கு வந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ISS-லிருந்து விடுபடுதல், தரையிறக்கம் மற்றும் மீட்பு

Ax-4 க்ரூ டிராகன் விண்கலம் தரையிறக்கத்திற்கு சுமார் 22-24 மணி நேரத்திற்கு முன்பு ISS-லிருந்து விடுபடும். பிரிந்த பிறகு, மெல்ல மெல்ல சுற்றுப்பாதை தாழ்வு எரிப்புகளை செயல்படுத்தி அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக தாழ்த்தும். கணக்கிடப்பட்ட தரையிறக்கத்திற்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு டி-ஆர்பிட் எரிப்பு மூலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்.

இந்த சமயத்தில் உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கிமீ உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்படும், கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக நீரிறக்கம் ஆகும்.

சுற்றுப்பாதை நிலைமைகளைப் பொறுத்து இந்த முழு செயல்முறை 20 முதல் 24 மணி நேரம் எடுக்கும்.

மீட்பு குழுக்கள் நீரிறக்கம் ஆவதற்கு 30 நிமிடங்களுக்குள் கேப்சூலை அணுகி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வார்கள். தீ விபத்து போன்ற எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தபின்னர், தரையிறங்கி கடலில் மிதக்கும் விண்கலத்தை கிரேன் கொண்டு கப்பல் தளத்துக்கு உயர்த்துவார்கள்.

இதன் பின்னர் கதவு திறக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இரண்டு வாரங்கள் ஈர்ப்பு இல்லாத நிலையில் இருந்த பிறகு, விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விளைவுகளுக்கு ஏற்பத் தங்களை சரிசெய்ய உதவி தேவைப்படலாம்.

எனவே அவர்களை முதலில் ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியில் வைத்து தான் அழைத்து செல்வார்கள். விண்வெளி வீரர்களை மருத்துவ குழுக்கள் ஆரம்பகட்ட உடல் சோதனை செய்வார்கள். உணவு, நீர் முதலிய வழங்குவார்கள். 20-25 மணிநேர பயணத்துக்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளிவருவதால் உடல் சுத்தம் செய்வார்கள்.

கப்பல் கரையை அடைந்ததும், மேலும் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ளப்படும். தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். புதிய ஆரோக்கிய கவலைகள் எழாவிட்டால், நீண்ட கால தனிமைப்படுத்தல் தேவையில்லை. தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்புவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு