நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று

(14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலை கிராமம் தொடக்கம் கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப் பத்திரமுள்ள தனியார் பேருந்து நீண்டகாலமாக ஒதியமலை கிராமத்துக்கு சேவையினை வழங்கவில்லை.

குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலேயே இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஒதியமலை கிராமத்துக்கான வழித்தட அனுமதிப்பத்திரம் இருந்தும் நீண்டகாலமாக அக்கிராமத்துக்கு, இந்தப் பேருந்து சேவையினை வழங்காதிருந்தமை தொடர்பில் பல முறை உரிய தரப்பினருக்கு கிராம மக்கள் தெரிவித்ததோடு, முறைப்பாடும் அளித்திருந்தனர்.

இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் தீர்வு காண்பதற்கு உரிய தரப்பினரால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையே தொடர்ந்தது.

இதனால் ஒதியமலை கிராம மக்கள் மற்றும் ஒதியமலையிலிருந்து வெளிப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாரிய போக்குவரத்து இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஒதியமலை கிராம மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒதியமலை கிராமத்துக்கு குறித்த தனியார் பேருந்து சேவையினை வழங்காமை குறித்து ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தோடு ஒதியமலை மக்களின் போக்குவரத்து இடர்ப்பாட்டைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில் ஒதியமலை கிராமத்துக்கு பேருந்து சேவை வழங்கப்படவேண்டும் எனவும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, இன்றைய தினம் ரவிகரனின் பங்கேற்புடன் ஒதியமலை கிராமத்திலிருந்து பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக மரபுவழயில் ஒதியமலை பிள்ளையார் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இப்பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரனும் பங்கேற்றார்.